கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் இனியாவின் இசை ஆல்பம்!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடிக்க தெரிந்த நடிகை என்று பெயர் வாங்கியிருக்கும் இனியா, திரைப்படங்களில் நடிப்பது மட்டும் இன்றி நடனத்திலும் பெரும் ஆர்வம் கொண்டவர். தனக்கு நடனத்தின் மீது இருக்கும் ஆர்வத்தை வெளிக்காட்டும் விதமாக நடனத்தை மையமாக வைத்த இசை ஆல்பம் ஒன்றில் இனியா நடித்திருக்கிறார்.

சினிமாவில் பிஸியான நடிகையாக இருக்கும் இனியாவின் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த இசை ஆல்பத்திற்கு ‘மியா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

8 நிமிட வீடியோ இசை ஆல்பமாக உருவாகியுள்ள இந்த இசை ஆல்பம், துடிப்புள்ள ஒரு பெண் பிரபல டான்ஸராகி கொடி கட்டி பறக்க வேண்டும், விருதுகளை வாங்கி குவிக்க வேண்டும், என்ற தனது லட்சியத்தை சொல்லும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. தனது லட்சியத்தை அடைய அந்த பெண் எப்படி போராடுகிறாள், அவளது முயற்சி எப்படி வெற்றியாகிறது, என்பதையும் சொல்லப்பட்டிருக்கிறது.

“வானத்தில் பறக்க சிறகுகள் கிடைக்குமா…” என்று தொடங்கும் இந்த இசை ஆல்பத்தில் வசனங்களும் இருக்கிறது. வழக்கமான இசை ஆல்பம் மாதிரி அல்லாமல் ஹைடெக் சினிமா நேர்த்தியுடன் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த இசை ஆல்பத்தை அமயா எண்டர்டைமெண்ட்ஸ் பட நிறுவனம் சார்பாக இனியா தயாரித்திருக்கிறார்.

அபி ரெஜி லாவல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த இசை ஆல்பத்திற்கு அருள் தாஸ் எடிட்டிங் செய்திருக்கிறார். அஸ்வின் ஜான்சன் இசையமைப்பில், கோவிந்தன் பழனிசாமி பாடல் எழுதியிருக்கிறார். கான்சப்ட் நடனத்தை அருண் நந்தகுமார் வடிவமைக்க, எஸ்.மகேஷ் இயக்கியிருக்கிறார்.

இந்த இசை ஆல்பத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இனியா பேசுகையில், “இதற்கு உறுதுணையாக இருந்த ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமை பட்டுள்ளேன். இந்த வீடியோ ஆல்பத்தை பார்த்து பாராட்டிய நவீன் பிரபாகர், ரியாஸ், கபாலி பாபு மூவரும் பியாண்ட் பிரேம்ஸ் நிறுவனம் மூலம் இந்த வீடியோ ஆல்பத்தை பிரமாதமாக வெளியிடுகிறார்கள். இந்த ஆல்பத்தின் மூலம் வசூலாகும் பணத்தில் கேன்சரால் பாதித்த 10 பேருக்கு மருத்துவ உதவி செய்ய திட்டமிட்டுள்ளார்கள். இதை போல இன்னும் நிறைய திட்டமிட்டுள்ளோம்.

இந்த உலகத்தில் உள்ள எல்லா டான்ஸர்களுக்கும் மியா வை காணிக்கையாக்குகிறேன்.” என்றார்.