கே.பாலசந்தர் பவுண்டேஷன் தொடங்கப்பட்டது!

kb-fondationஇயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 23-ம் தேதி இயற்கை எய்தினார். இவரது மறைவுக்கு ஏராளமான திரை நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். கே.பாலசந்தரின் கவிதாலயா தயாரிப்பு நிறுவனம் பல்வேறு படங்களை தயாரித்து வெளியிட்டு இருந்தது. தற்போது கே.பாலசந்தர் குடும்பத்தினர் ‘கே.பாலசந்தர் பவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளையை தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த அமைப்பிற்கு கே.பாலசந்தரின் குடும்ப உறுப்பினர்களான ராஜம் பாலசந்தர், புஷ்பா கந்தசாமி, பிரசன்னா, கீதா கைலாசம், கந்தசாமி பரதன் மற்றும் இயக்குநர் வசந்த் சாய் ஆகியோர் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கே.பாலசந்தர் பவுண்டேஷன் அமைப்பின் மூலம் கீழ்கண்ட திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

1. கே.பாலசந்தர் விருப்பப்படி திரைப்படத் துறையைச் சேர்ந்த நலிந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி.

2. ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரிகளில் விஷுவல் கம்யூனிகேஷன் துறையில் பயிலும் மாணவர்களில் சிறந்த மாணவருக்கு கே.பாலசந்தர் பெயரில் ‘கிரியேட்டிவ் எக்ஸலன்ஸ்’ விருது வழங்குதல்.

3. ஒவ்வொரு ஆண்டும் கே.பாலசந்தர் பிறந்த தினமான ஜுலை 9ல் விழா நடத்தி நாடகம், திரைப்படம், சின்னத்திரை ஆகிய மூன்று துறைகளில் சிறந்து விளங்கும் படைப்பாளிகளுக்கு விருது வழங்குதல்.

4. கே.பாலசந்தர் படைப்புகளை டிஜிடலைஸ் செய்து பாதுகாத்து அவரைப் பற்றிய எல்லா தகவல்களையும் ஆவணப்படுத்தி, எதிர்கால தலைமுறையினருக்கு பயன்தரக்கூடிய ஒரு கண்காட்சியகம் ஏற்படுத்துதல்.

5. கே.பாலசந்தர் மகன் மறைந்த கைலாசம் பெயரில் தொலைகாட்சி துறையைச் சேர்ந்த ஒருவருக்கு சிறந்த படைப்பாளி விருது அளித்தல்.

6. கே.பாலசந்தர் பற்றிய புத்தகங்களை வெளிக் கொணர்வது.

இது போன்ற பல சிறப்பான பணிகளை மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

” கே.பி அவர்களைப் பற்றிய முதல் புத்தகம் ஜுலை 9, 2015 அன்றுவெளிவர இருக்கிறது. இதை எழுதியவர் இயக்குநர் வசந்த் சாய். இது போன்ற பல பணிகளை மேற்கொள்ள உள்ளோம். எங்களது பணி சிறந்து விளங்கிட தங்களுடைய மேலான ஒத்துழைப்பை வேண்டுகிறோம்.”என்று திருமதி புஷ்பா கந்தசாமி கூறியுள்ளார்.