‘கொம்பன்’ பிரச்சினையை திரையுலகினர் என் தனிப்பட்ட ஒருவனின் பிரச்சினையாகப் பார்க்கவில்லை : கே..ஈ .ஞானவேல்ராஜா

IMG (3)ஸ்டுடியோ க்ரீன் தயாரித்த ‘கொம்பன்’ படம் பல தடங்கல்களைக் கடந்து வெளியானது . படம் மாபெரும் வெற்றிப்படமாகி விட்டது.

இதைக்கொண்டாடும் விதத்தில் ‘கொம்பன்’ படத்தின் சக்சஸ்மீட் எனப்படும் வெற்றிச் சந்திப்பு இன்று நடந்தது.

விழா மேடையில் நடிகை கோவை சரளாவின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் கேக் வெட்டிக்கொண்டாடினர்.

விழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது ” இது ஒரு நல்ல படம்.நல்ல கருத்தை உணர்ச்சிகரமாக சொல்லியிருக்கும் படம்.சிலர் சொல்வதைப்போல, நினைத்துக் கொண்டிருப்பது போல தமிழ்நாட்டு மக்கள் சிந்திக்கத் தெரியாதவர்கள் அல்ல. வன்முறைக் கலாச்சாரம் நமதல்ல. ராமநாதபுரம் மண்ணும் அப்படித்தான்.

நான் படப்பிடிப்புக்கு போன போது பொள்ளாச்சி,போடிநாயக்கனூர், உடுமலை போன்ற இடங்களில் கூட ஆரவாரம் சலசலப்பு இருக்கும்.ஆனால்  ராமநாதபுரம் மக்கள் மிகவும் அமைதியாக இருந்தார்கள். மரியாதையும் அன்பும் தந்தார்கள்.அவர்கள் பண்பு மிக்கவர்கள்.

அங்கு’கொம்பன் படத்தின் படப்பிடிப்பு நடத்தியதில் மகிழ்ச்சி. அங்குள்ள ஊர்கள் முன்னேறாமல் வசதிகள் இல்லாமல் இருப்பதைப் பார்த்து வருத்தமாக இருந்தது. கொம்பன் படம் போல பல படங்களின்  படப்பிடிப்புகள் அங்கு நடக்க வேண்டும். அந்த ஊர்கள் எல்லாம் வசதிகள் பெற வேண்டும் என்பதே என் ஆசை.  இது மாதிரி கிராமத்துக் கதைகளில்  ஆழமான அழுத்தமான மனிதம் பேசும் கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன் ” என்றார்.

தயாரிப்பாளர்  பேசும் போது ” ‘கொம்பன்’ படப் பிரச்சினையில் நான் மட்டுமல்ல எங்கள் படக்குழுவினரே 30 நாட்கள் படாத பாடு பட்டோம். குறித்த தேதியில் படம் வருமா என்கிற குழப்பமும் கலக்கமும் எங்களுக்கு இருந்தது.

‘கொம்பன்’படத்துக்கு பிரச்சினை வந்த போது நான் 3 பேரிடம் போனேன் . தெய்வத்திடம் போய் முறையிட்டேன்.என் அப்பாவிடம் போய் அழுதேன். யாருமற்ற நிலையில் மூன்றாவதாக  பத்திரிகை, ஊடகங்கள் உங்களிடம்தான் வந்தேன். சென்சார் செய்யப் பட்ட படத்துக்கு இப்படி ஒரு பிரச்சினை என்ற போது உங்களிடம் வந்தேன். ஆதரவு தந்தீர்கள்.

இது வரை இல்லாத அளவுக்கு இவ்வளவு விரைவில் திரையுலகினர் ஒன்று சேர்ந்து ‘கொம்பன்’படத்துக்கு ஆதரவு அளித்தார்கள். திரையுலகினர் இதை என் தனிப்பட்ட ஒருவனின் பிரச்சினையாகப் பார்க்கவில்லை. எதிர்காலத்தில் யாரும் இப்படி பாதிக்கப்படக் கூடாது. என்பதில் உறுதியாக போராட வேண்டியதை உணர்ந்திருக்கிறார்கள்.

படம் வெளியானபிறகு வழக்கமான வசூலைவிட மதுரை வட்டாரங்களில்இப்போது  இருமடங்கு வசூலாகி வருகிறது.

எந்தெந்த ஊர்களில் பிரச்சினை பதற்றம் என்று கூறப்பட்டதோ அங்குதான் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு சந்தோஷமாகப் படம் பார்க்க வருகிறார்கள்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக கிருஷ்ணசாமி ஐயா மீது வழக்கு போட்டிருக்கிறேன்.இதனால் படத்துக்கு எந்தெந்த வகையிலெல்லாம் இழப்பு என்று கணக்கிட்டு கேட்கப்பட்டிருக்கிறது.. ” இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் நடிகைகள் கோவைசரளா,லட்சுமிமேனன், நடிகர்கள் கருணாஸ்,இயக்குநர் மாரிமுத்து, எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி, கலை இயக்குநர் வீரசமர்,சண்டை இயக்குநர் திலிப் சுப்பராயன் ,’கொம்பன்’பட இயக்குநர் முத்தையா,  இசையமைப்பாளர் ஜீவி, பிரகாஷ் ஆகியோரும் பேசினார்கள்.