சங்கங்களின் சங்கமமாக ஒரு விழா: தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் விழா!

pro_union010தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவி யேற்புவிழா: சங்கங்களின் சங்கமமாக ஒரு விழா!

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியனின்  2016- 2018 -க்கானபுதிய நிர்வாகிகள் பதவியேற்புவிழா சென்னை ரஷ்யன் கலாச்சார மையத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது..

இது ஒரு சங்கத்தின் விழாவாக இருந்தாலும் திரையுலகின் பல சங்கங்கள் சங்கமமானவிழா என்கிற அளவுக்கு பல்வேறு சங்கங்களின்பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவின் தொடக்கத்தில் தென்னிந்தியாவின் முதல் திரைப்பட பத்திரிகை தொடர்பாளரான பிலிம்நியூஸ் ஆனந்தனின் படம் திறந்து வைக்கப்பட்டது. குத்து விளக்கேற்றிவைத்து விழா தொடங்கியது.

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியனின் பொருளாளர் விஜயமுரளி வரவேற்புரையாற்றினார்.
தேர்தலில் வெற்றி பெற்ற  நிர்வாகிகள் அனைவருக்கும் தேர்தல் அலுவலர் வழக்கறிஞர் சங்கர் முறைப்படி சான்றிதழ்களை வழங்கினார். நடிகர் சங்கத்தின் சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

விழாவில்  தென்னிந்திய நடிகர்சங்கத் தலைவர் நாசர் பேசும்போது, “புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள நிர்வாகிகளுக்கு என் வணக்கம். மரியாதை, அன்பு வாழ்த்துக்கள்.

பத்திரிகை தொடர்பாளர் என்கிற துறை சினிமாவில் முக்கியமானதுறை. சினிமாவுக்கும் மக்களுக்கும் பாலமாகவும் பலமாகவும் விளங்கும் துறை. எல்லா வற்றையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணி. இது பல நட்சத்திரங்கள் உருவாக முக்கிய காரணம். ஆனால் வெளியே பெரிதாக அறியப்பட வில்லை. பல நட்சத்திரங்களை வளர்ப்பவர்கள் இவர்கள். ஆனால் வெளியே சொல்லிக் கொள்வதில்லை. இந்தச் சிறு கூட்டம் பல ஆண்டுகளாக உழைத்து வருகிறது. பிலிம் நியூஸ் ஆனந்தன் பத்திரிகை தொடர்பாளராகச் செய்துள்ள பணி நூறு பேர் செய்திருந்தால் கூட முடியாதது.” என்று புகழாரம் சூட்டினார்.

நடிகர் ராதாரவி பேசும் போது” நான் அடுத்த ரவுண்டு நிறைய படங்களில் நடித்து வருகிறேன். அந்தப் படங்களில் எல்லாம் எனக்கு வாய்ப்பு கிடைக்க இண்டர்நெட்கள்தான் காரணம். நான் எதைப் பேசினாலும் அதை அப்படியே வீடியோவாக போட்டு விடுகிறார்கள். அதில் நல்லவார்த்தைகள் இருக்கும், கெட்ட வார்த்தைகள் இருக்கும். சிலர் அந்த நல்லவார்த்தைகள் பிடித்து வாய்ப்பு தருகிறார்கள்.சிலர் கெட்டவார்த்தைகள் பிடித்துப்போய் வாய்ப்பு தருகிறார்கள்.

சினிமாவில் இந்த பத்திரிகை தொடர்பாளர் என்கிற இந்தச் சிறிய கும்பல் இல்லை என்றால் என்னைக்கூட வெளியே தெரியாது. எங்களைப் பற்றி நல்லது கெட்டது தெரிய இவர்கள்தான் காரணம். தலைவர் டைமண்ட்பாபு என்னுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர். அவர் ஒரு போராளி. எப்போதும் தைரியலட்சுமியை கூடவே வைத்திருப்பவர்” என்று வாழ்த்தினார் .

தென்னிந்திய பத்திரிகை தொடர்பாளர் சங்கத்தின் செயலாளர் ஏ.ஜான் பேசும் போது” என் ஆயுளில் முதல்பாதியை நான் பிறந்த ஊரிலும் மறுபாதியை பத்திரிகையாளர்கள், பத்திரிகை தொடர்பாளர்களுடன்தான் கழித்திருக்கிறேன். நண்பர்கள் இந்த செயலாளர் பொறுப்பை முள்கீரீடம் என்றார்கள். அதைத் தெரிந்தே மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன். மூத்தவர்கள் முன்னோடிகள் வழிகாட்டுதல்களுடன் இந்தப் பணியை சிறப்பாகச் செய்வேன்.” என்றார்.

செயலாளர் ஏ.ஜான் தங்கள் சங்கத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு வேல்ஸ் கல்விக்குழுமத்தின் கல்விநிறுவனத்தில் உதவி கோரினார்.வேல்ஸ் கல்விக்குழுமத்தின் தலைவர் ஐசரி கணேஷ் ,ஆண்டு தோறும்10 இலவச இடங்கள் தருவதாக அடுத்த சில நிமிடங்களில் அறிவித்தார்.

விழாவில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கப் பொருளாளர் பேரரசு,இயக்குநர்கள் மனோபாலா, மனோஜ் குமார், ரவிமரியா, வேல்முருகன் ,தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கங்காராஜ், செயலாளர்கள் காட்ர கட்ட பிரசாத், அருள்பதி, தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் டி.சிவா, , பொருளாளர் டி.ஜி தியாகராஜன்,பெப்ஸி செயலாளர் கே.ஆர்.செல்வராஜ், ஒளிப்பதிவாளர் சங்கத்தைச் சேர்ந்த ப்ரியன், இளவரசு,  நடிகர் சங்கத் துணைத்தலைவர் பொன்வண்ணன், வேல்ஸ் கல்விக்குழும வேந்தர் ஐசரி கணேஷ்,  படத்தொகுப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சுப்பு, கண்ணன்,

கலை இயக்குநர்கள் சங்கத்தைச் சேர்ந்த சண்முகம், ராஜன், இசைக் கலைஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார், தினா, , இன்னொரு தயாரிப்பாளர் சங்கமான ‘கில்டு’ செயலாளர் ஜாக்குவார்தங்கம், பொருளாளர் நந்தகோபால் செட்டியார். நடிகர்கள் ஜூனியர் பாலையா, அஜய்ரத்னம் , தயாரிப்பாளர்கள்  சித்ரா லெட்சுமணன்,சிவஸ்ரீ சீனிவாசன், சுரேஷ்காமாட்சி, தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தைச் சேர்ந்த சாமிநாதன், பாலகோபி, விநியோகஸ்தர் கூட்டமைப்பின் சார்பில் செல்வின்ராஜ்,புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த முரளி, கங்கா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

பத்திரிகையாளர் நெல்லை பாரதி பத்திரிகை தொடர்பாளர்கள் பற்றிய ஒரு பாடல் பாடினார்.

பல்வேறு சங்கத்தினரும் புதிய நிர்வாகிகளுக்குப் பொன்னாடை அணிவித்துச் சிறப்பு செய்தனர்.

விழாவின் நிறைவாக பத்திரிகை தொடர்பாளர் சங்கத்தின் தலைவர் டைமண்ட்பாபு அனைவருக்கும் நன்றி கூறினார்.