‘சங்கராபரணம்’ விமர்சனம்

sankara33சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் தெலுங்கிலேயே வெளியாகி  தமிழ்நாட்டிலேயே பெரிய வெற்றி பெற்ற படம் ‘சங்கராபரணம்’.இது இப்போது  தமிழில் மொழிபெயர்ப்பாகி மெருகூட்டப்பட்ட புதிய பதிப்பாக வெளியாகியுள்ளது.இந்த வெளியீட்டிலும்வெற்றிவிழாவைக்  கொண்டாடும் என்று எதிர்பார்க்கலாம்.

இத்தனை ஆண்டுகள் கழித்து தமிழில் மொழிபாற்றுப் படமாக உருவாக்கும் அளவுக்கு வீரியமும் செறிவும் இருந்துள்ளது தான் சங்கராபரணம்’ படத்தின்சிறப்பு.அப்போது சிறந்த இயக்குநராக கே.விஸ்வநாத்துக்கும், சிறந்த இசையப்பாளராக கே.வி.மகாதேவனுக்கும், சிறந்த பின்னணிப் பாடகர் மற்றும் பாடகியாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராமுக்கும் நான்கு தேசிய விருதுகளை தேடித்தந்த  படமிது.

‘சங்கராபரணம்’ சங்கர சாஸ்திரிகள். ஒரு சங்கீத மாமேதை. நாதம் அவர் நாவில் குடியிருக்கும் சங்கீதம் சாரரத்தில் கொலுவிருக்கும். தன்வித்தை மீது அவருக்கு கர்வமுண்டு .இசையே வாழ்க்கை என்பதால் குடும்பம் எல்லாம் அவருக்கு இரண்டாம் பட்சம்தான். அவருக்கு ஒரு மகள் உண்டு பெயர் சாரதா.

கௌரவமும் பெருமிதமும் கொண்ட அவர், வெளியூருக்குக் கச்சேரிக்கு போகிறார். அங்கு அவரைப் பார்க்க துளசி என்பவள்  வருகிறாள். அவளுக்கு அவருடைய சங்கீதம் மீது ஈர்ப்பு ,காதல் ,மோகம் மதிப்பு எல்லாம் உண்டு.நடனம் அவளது தனி உலகம்,அவளுக்கு  நடனம் நேசம் என்றால்இசை சுவாசம்.அவர் பாடும் போதெல்லாம் அவள் அதைக்கேட்டு ஆடுவாள்.  சங்கர சாஸ்திரிகளைத் தன்  மானசீக குருவாக்கி அவரைத் தொடர்கிறாள் .அவர்களுக்குள் இருப்பது குரு சிஷ்யை என்கிற புனித உறவுதான். அவளது அம்மாவோ மகளுக்கு கலைகளைக் கற்றுக் கொடுத்துத் தாசியாக்கி காம வியாபாரம் செய்ய முயல்கிறாள். அச்சூழலில் அவளை ஒரு ஜமீன் கெடுத்து விடுகிறான்.
தொடர்ந்து தீண்ட முயன்ற  ஜமீனை தாங்க முடியாமல்  கண்ணாடியை உடைத்து குத்தி விடுகிறாள் துளசி.

தன்னை நாடி வந்த அப்படிப்பட்ட ரசிகை துளசியை அழைத்துக் கொண்டு வீடு வருகிறார் சங்கர சாஸ்திரிகள். துளசி பற்றி ஊர் தூற்றுகிறது. வீட்டிலிருந்த மனைவி இது அபச்சாரம் என்று கூறி வெளியேறி விடுகிறாள்.இதனால் சாஸ்திரியின் இசைப்பயணத்தில் இடையூறுகள்.

தன்னால் குருவுக்கு அவமானம் என்று கருதி  ஒருகட்டத்தில் விலகிச் சென்று விடுகிறாள் துளசி..தன் வயிற்றிலிருக்கும் கொடியவன் கொடுத்த பிள்ளையை வளர்த்து, தெரியாமல் குருவின் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறாள். தன்பிள்ளை என்று யாருக்கும் தெரியாமல்  அவனை சாஸ்திரியின் சங்கீத சீடனாக்குகிறாள்.

தன் மானசீக பீடத்தில் இருக்கும் குருவின் பெயரால் ஒரு கலையரங்கம் கட்டி ,வாய்ப்புகளின்றித் துவண்டிருக்கும் போது அவரை  மறு உயிர்ப்புடன் பாட வைக்கிறாள் துளசி. குருவின் இழந்த பெயர் மீட்கப் படுகிறது.

அது துளசியின் மண்டபம், சீடன் துளசியின் பிள்ளை என்று கடைசியில்தான் தெரிகிறது. தெரியும் போது சாஸ்திரியின் உயிர்பிரிய. தொடர்ந்து துளசியும் உயிர்விட. படம் முடிகிறது.

‘சங்கராபரணம்’என்றால் விஷப் பாம்பு என்று பொருள். அதாவது சங்கரனாகிய சிவன் ஆபரணமாக அணிந்திருக்கும் பாம்பு என்று பொருள்.
sankarabaranam2
படத்தில் சங்கர சாஸ்திரிகளாக சோமயாஜுலு வாழ்ந்திருக்கிறார். நடை உடை பாவனை பார்வை உடல்மொழி என எல்லாவற்றிலும் கச்சிதமான நடிப்பு.

சங்கீத திறமை காட்டும் காட்சிகளிலும், இசை பற்றிய சீண்டலின் போது சீற்றம் கொள்ளும் கட்டத்திலும் நிரபராதியான துளசிக்கு அடைக்கலம் தரும் போதும் நடிப்பில் நிமிர்ந்து நிற்கிறார் சோமயாஜுலு  . இது போன்று நிறைய இடங்கள் படத்தில் உண்டு.

பெண் பார்க்கும் தருணத்தில் மகள் ராகத்தை மாற்றிப் பாடிவிட வெகுண்டெழுகிறார்.

தன் மகளைத் திருமணம் செய்து கொள்ளப் போகிற மாப்பிள்ளை என்ற போதும் ரிஷபம் என்பதை சரியாகச் சொல்லத் தெரியாததால் இந்த சம்பந்தமே வேண்டாம் என்று ஒதுக்கும் கோபம் அட டா..

கர்நாடக சங்கீதமா மேற்கத்திய சங்கீதமா என்று இளைஞர்கள் சவால் விடும் காட்சியில் சவாலை எதிர்கொண்டு பதில் சவால் விடும் காட்சியில் அதிர வைக்கிறார்.

இப்படி பல இடங்களில் ஸ்கோர் செய்கிறார் சோமயாஜுலு.

துளசியாக வரும் மஞ்சுபார்கவி, படத்தில் முதல் 40 நிமிடங்கள்  பேசவே மாட்டார்.  அந்தக் குறை எதுவும் தெரியாதபடி  அவரது பாத்திரம் பற்றி அவரது கண்களே பேசி விடுகின்றன.

மஞ்சுபார்கவியின்  இடத்தில் அவரது பாத்திரத்தில் யாரையும் யோசிக்க முடியவில்லை.அப்படி ஒரு பொருத்தம்.அவர் படத்தில் பேசும் வசனங்களே மிகக் குறைவுதான் .ஆனால் இறுக்கமும் மௌனமும் பெரிய மொழி என்று நிரூபிக்கிறார் .அந்தப் பேசாத குறையை அவரது மகனாக வரும் சுட்டி குட்டிப் பையனாக வரும் துளசி போக்குகிறார். துறுதுறுவென நடை பேச்சு என கொள்ளை கொண்டு விடுகிறார் நடிகைதுளசி.

இந்த நடிகைதுளசி ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தில் அம்மா வேடம் போடுமளவுக்கு பெரியவராகிவிட்டார்.

‘சங்கராபரணம்’ராஜலட்சுமி இதில்தான் அறிமுகம். அவர் சோமயாஜுலுவின் மகளாக வருகிறார். மனதில் பதிகிறார். சோமயாஜுலுவின் மாப்பிள்ளையாக வருபவர், நண்பராக வருகிறவர் என எல்லாருமே தேர்ந்த நடிப்பால் கவர்கிறார்கள். இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஓங்கார நாதானு, ராகம் தானம் பல்லவி, சங்கரா நாதசரீரா வரா, யே திருக நானு, மாணிக்க வீணா, பலுகே பங்காரமையான, தொராகுன இதுவந்தி சேவா உள்ளிட்ட இனிய பாடல்களின் ரீங்காரம் காதுகளை விட்டு நீங்க பல நாட்கள் ஆகும்.படத்தின் பாடல்கள் இன்றும் இனிப்பவை .எஸ்.பி.பாலசுப்பிரமணியம்,வாணி ஜெயராம், ஜானகி குரல்களில்  தேன் சொட்டுகின்ற இனிமை; அருமை .

இப்போதெல்லாம் ஒருபாபடலுக்கே கழிப்பறை தேடி வெளிநடப்பு செய்கிறார்கள் ரசிகர்கள். இக்காலத்திலும் அனைத்துப் பாடல்களும் இனிக்கின்றன .உட்கார வைக்கின்றன காரணம் எல்லாமே சூழலுடன் பொருந்தி வருகின்றன.

சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதைக் காட்டி அழகுணர்ச்சி வழியும் காட்சிகளால் மெய்ப்பிக்கிறார் கேமராமேதை பாலுமகேந்திரா.

சீர்திருத்தக் கருத்து, சங்கீதப் பெருமை ,மேற்கத்திய மோகம் என எல்லாமும் பற்றியும் படம் பேசுகிறது.

விறுவிறுப்பு குன்றாத மொழிமாற்று முயற்சி.  குரல் கொடுத்துள்ளஅனைவரும் திறமையால் செழுமை சேர்த்துள்ளனர்.குறிப்பாக சோமயாஜுலுவுக்குக்  குரல் கொடுத்துள்ள ராமு துல்லியமாக தன் குரல் மூலம் நடிப்பையும் வழங்கியுள்ளார்.

படம் பார்த்து முடிந்ததும் இயக்குநர் கே.விஸ்வநாத், ,கேமராமேதை பாலுமகேந்திரா,இசைமேதை கே.வி. மகாதேவன் ஆகியோரை  பெருமையுடன் வணக்கம் செய்யத் தோன்றுகிறது