சங்கிலி முருகன் சொல்லாத ரகசியம் :சசிகுமார் ஆதங்கம்

bvt-press-meet-stills-13சசிகுமார் நடிப்பில் அதிரடி வேகத்தில் உருவாகியுள்ள  ‘பலே வெள்ளையத்தேவா’ படத்தைத்  தன்னுடைய கம்பெனி புரொடக்ஷன்ஸ் சார்பில் மிகக் குறுகிய காலத்தில் வெறும் 50 நாட்கள் படப்பிடிப்பு  மற்றும் பிற வேலைகள்  25 நாட்கள் என்று 75 நாட்களில் மொத்தப் படத்தையும் முடித்துவிட்டார் சசிகுமார்.

இந்தப் படத்தில்  நாயகன்.நாயகியாக பழம்பெரும் நடிகரான ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா அறிமுகமாகியிருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சங்கிலி முருகன், கோவை சரளா, ரோகிணி, பாலாசிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இயக்குநர்கள் பாலா மற்றும் சுதா கொங்காராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சோலை பி.பிரகாஷ், இப்படத்தின் மூலம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு வடபழனி ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடைபெற்றது.
நிகழ்வில் நடிகர் சங்கிலி முருகன் பேசும்போது,

“நானும் நிறைய படங்களில் நடித்துவிட்டேன்.. ஆனால் இந்தப் படத்தில் நடிக்கும்போது ஒரு விஷயத்தை நல்லா தெரிஞ்சுக்கிட்டேன். ஒரு படத்தை திட்டமிட்டு எடுத்தால் செலவை குறைத்து சிக்கனமாக விரைவாக எடுத்து முடிக்கலாம் என்பதை இந்தப் படத்தின் படப்பிடிப்பில் தெரிந்து கொண்டேன்.இந்தப் படத்தை ‘பலே வெள்ளையத் தேவா’ என்று சொல்வதைவிட ‘பலே சசிகுமார்’ என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தப் படத்தை வெறும் 50 நாளில் முடித்தார் இயக்குநர். நான் அந்த 50 நாட்களில் 35 நாட்கள் அவர்களுடன் இருந்தேன்.  அத்தனை வேகமாக படத்தை எடுத்து முடித்தார். இப்படி பக்கா பிளானோடு செயல்பட்டால் செலவு குறையும். திரைப்பட துறையும் வளரும்.” என்றார்.

நடிகை ரோகிணி பேசும்போது “இதுக்கு முன்னாடி ‘மகளிர் மட்டும்’ படத்துலதான் ரொம்ப இயல்பா நடிச்சிருந்தேன். அந்தப் படத்துல ஒர்க் பண்ணும்போது நடிக்க வந்த மாதிரியே தெரியாது. ரொம்ப ஜாலியா, என்ஜாய் பண்ணி நடிச்சேன். அதே மாதிரிதான் இந்தப் படத்தோட ஷூட்டிங்கும் இருந்துச்சு..”என்றார்.

bvt-press-meet-stills-15நடிகை கோவை சரளா பேசும்போது, “சசிகுமார் இனிமேல் வருடத்திற்கு பத்து படங்களை எடுக்க வேண்டும். அவர் எடுக்குற பத்து படத்துலேயும் எனக்கும், ரோகிணிக்கும் ஏதாவது ஒரு வேடம் கொடுத்திடணும். நான் வேற எந்தப் படத்துலேயும் நடிக்கவே மாட்டேன். இவருடைய படங்கள் மட்டுமே போதும்..!

ஏன்னா இந்தப் பட ஷூட்டிங்ல எங்களுக்குக் கிடைத்த மரியாதை, நாங்க அனுபவித்த சந்தோஷம்.. வேற எங்கேயுமே கிடைக்காது.. கிடைக்கலை.. அதோடு கேட்ட சம்பளத்தையும் டக்குன்னு கொடுத்தார் சசிகுமார். இதுவொண்ணு போதாதா..? இந்தக் கம்பெனி பிடிச்சுப் போக..?” என்றார்.

நடிகர் சசிகுமார் பேசும்போது “இந்தப் படத்தில் இருக்கும் செல்ஃபி ஆத்தா கேரக்டரில் மனோராமா ஆச்சி, கோவை சரளா இரண்டு ஆர்ட்டிஸ்ட்டுகள் மட்டும்தான் நடிக்க முடியும். ஆச்சி இல்லாததால சரளாம்மாவை நடிக்க வைச்சோம்.  அவங்ககிட்ட கத்துக்க வேண்டியது  நிறைய இருக்குன்னு எனக்கு அவங்ககூட நடிக்கும்போதுதான் தெரிந்த்து. அவர் இல்லாமல் நிச்சயமாக இந்தப் படம் உருவாகியிருக்காது.

ரோகிணி இதுல எனக்கு அம்மாவா நடிச்சிருக்காங்க. ‘அடிடா அவனை’ என்று சொன்னாலும் அவங்க நல்ல அம்மாதான்.

சங்கிலி முருகன் போன்ற சினிமா சாதனையாளர் என்னை மனமுவந்து பாராட்டியது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. அவர்கிட்டேயும் நிறைய தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு. கார்த்திக் ஸாரை வைச்சே படத்தை தயாரித்து கொடுத்திருக்காருன்னு அவர் எவ்வளவு பெரிய தயாரிப்பாளர்னு நினைச்சுப் பாருங்க. கார்த்திக்கை வைச்சு கரெக்ட்டா படப்பிடிப்பு முடிச்ச ரகசியத்தை நானும் அவர்கிட்ட பல மாதிரி கேட்டுப் பார்த்துட்டேன்.. கடைசிவரையிலும் சொல்லவே இல்லை..

இந்தப் படத்தை ஒரே ஷெட்யூலில் முடிப்பது என்று முன்பே முடிவு செய்திருந்தோம். அதையும் வெறும் ஐம்பதே நாட்களில் முடித்துக் கொடுத்தார் இயக்குநர் சோலை பிரகாஷ்.  ஒரு படத்தை இவ்வளவு சீக்கிரமாக முடிக்க முடியும்னு எனக்கே இப்போதான் தெரியுது…” என்றார்.

இயக்குநர் சோலை பிரகாஷ் பேசும்போது, “நவீன தொழில் நுட்பங்களினால் ஒரு கிராமத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதன் விளைவுகள் என்ன என்பதும்தான் இந்தப் படத்தின் கதைக் கரு.பொதுவா மதுரை என்றாலே அடிதடி, வெட்டுக் குத்து என்றுதான் படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதை மாற்றி இந்தப் படத்தில் நிறைய காமெடியோட கதையையும் கலந்து சொல்லியிருக்கேன்.” என்றார்.

‘பலே வெள்ளையத்தேவா’ படம் வரும் டிசம்பர் 23-ம் தேதி வெளிவருகிறது..!