‘சத்யா ‘ விமர்சனம்

தெலுங்கில் மிகப்பெரிய  வெற்றிப் படமாக அமைந்த ‘ஷணம்’ படத்தின் மறு உருவாக்கமே  இந்த  ‘சத்யா’ . 

சிபிராஜ், ரம்யா நம்பீசன்  இருவரும்  காதலர்கள். ஆனால்  இவர்களது காதலை  ரம்யா நம்பீசனின் அப்பாவான நிழல்கள் ரவி எதிர்க்கிறார். அவரது உடல்நிலை மோசமானதையடுத்து ரம்யா நம்பீசனுக்கு வேறொருவருடன் திருமணம் நடக்கிறது.

இதனால்  விரக்தியுற்ற சிபிராஜ்,  இங்கு இருக்க பிடிக்காமல் வெளிநாட்டில் வேலைக்குச் சென்று விடுகிறார். அப்படி  வெளிநாட்டில் செட்டிலாகி இருக்கும் சிபிராஜுக்கு, சில வருடங்களுக்கு பிறகு  போன் செய்யும் ரம்யா நம்பீசன், தனது குழந்தை காணாமல் போய்விட்டதாகவும், வந்து கண்டுபிடித்து தரும்படியும் கேட்கிறார்.

கற்பனையில் குழந்தை இருப்பதாக அவர் நினைத்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார் அவரது  கணவர். ஆனால் தனக்கு குழந்தை இருப்பது உண்மை என ரம்யா திட்டவட்டமாக கூறுகிறார்.

கடைசியில், என்ன நடந்தது? சிபிராஜ் யார் சொன்னதை நம்பினார்? ரம்யா மீது நம்பிக்கை வைத்து குழந்தையைத் தேடினாரா? உண்மையிலேயே குழந்தை  இருந்ததா?  அல்லது ரம்யாவின் கற்பனை தானா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்ற கேள்விக்களுக்கான பதில்களை பலவித திருப்புமுனைகளோடு சொல்லியிருப்பது தான் சத்யா படத்தின் கதை.

கடத்தப்பட்ட குழந்தையை தேடும் சிபிராஜுக்கு, அப்படிப்பட்ட குழந்தையே இல்லை, என்ற விஷயம் தெரிய வரும் போது, குழந்தையை தேடுவதைக் காட்டிலும் குழந்தை இருப்பது உண்மையா அல்லது பொய்யா, என்பதை அறிந்து கொள்ள முயற்சிக்கிறார். இப்படி ஒரு முடிச்சை அவிழ்க்கும் போது, அதில் இருந்து இன்னொரு திருப்பம்ட்  வர , படம் முழுவதுமே யாரும் யூகிக்க முடியாத அளவுக்கு பரபரப்பான காட்சிகளோடு நகர்கிறது.

தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இப்படத்தை எந்தவித மாற்றமும் இன்றி எடுத்தாலே போதும், படம் வெற்றி பெற்றுவிடும் என்பதை இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி நன்றாகவே அறிந்துள்ளார். செய்துள்ளார்.

காதல், சண்டை, உண்மை எது என புரியாமல் நடித்திருக்கும் காட்சிகளில் இயல்பாகவே நடித்திருக்கிறார். சிபிராஜ், திரைக்கதையின்  ஓட்டம் புரிந்து பல இடங்களில் அடக்கி வாசித்தாலும்,  சில இடங்களில்நடிப்பில் போதாமையை உணர்த்துகிறார். 

ரம்யா நம்பீசன் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தை ஏற்று அதை சிறப்பாகவே நடித்திருக்கிறார்.  ஒரு காதலியாகவும், குழந்தையை இழந்த ஒரு தாயாகவும்  அவரது  நடிப்பு கவரும்படியாக இருக்கிறது.

போலீஸ் அதிகாரியாக வரலட்சுமி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அதேபோல் ஆனந்த்ராஜின் கதாபாத்திரம் படத்திற்குப்பலம்.. யோகி பாபு தனது பங்குக்குச்  சிரிக்க வைக்கிறார். சதீஷ் இந்த படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நிழல்கள் ரவி அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சிபிராஜை சில பிரேம்களில் ரசிக்க முடிகிறது என்றால்,  காரணம் ஒளிப்பதிவாளர் அருண்மணி பழனிதான்.  ஒரு பட்ஜெட் படத்தை தனது ஒளிப்பதிவு மூலம் பல இடங்களில் பிரம்மாண்டப்படுத்தி இருக்கிறார். அதேபோல், இசையமைப்பாளர் சிமோன் கே.கிங், பின்னணி இசையால் படத்திற்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்துள்ளார்.

ஒவ்வொரு காட்சி முடிந்ததும் அடுத்தது என்ன நடக்கும், என்ற எதிர்பார்ப்பாடு ரசிகர்களைப்   படம் முழுவதுமே உட்கார வைக்கிறார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, 

மீண்டும் மீண்டும் பார்க்கும் ஆர்வத்தை தூண்டும் விதத்தில் இருந்த ’ஷணம்’,  ரீமேக்கிலும் சோடை போகாத  ’சத்யா’ வாகியுள்ளது. 

.