‘சபாபதி’ விமர்சனம்

நகைச்சுவை நாயகன் சந்தானம் கதையின் நாயகனாக மாறி நடித்திருக்கும் படம் ‘சபாபதி’.
இது வழக்கமான கேலி கிண்டல் நக்கல் கடி ஜோக் ஆக்கிரமிக்கும் சந்தானம் படமா? வேறு மாதிரியா என்பதைப் பார்க்கலாம்.

படத்தின் கதை என்ன?

சிறுவயதிலிருந்து பேச்சு சரியாக வராமல், திக்கித் திக்கி பேசுகிறார் சந்தானம். இவருடைய அப்பா எம்.எஸ்.பாஸ்கர், அரசு வேலையில் பணிபுரிகிறார். தான் ஓய்வு பெற வேண்டிய நிலை வருவதால் தன்னுடைய மகனை வேலைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கவலையில் இருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர்.

பல வேலைகளுக்குச் செல்லும் சந்தானம் போகிற இடங்களிலெல்லாம் அவமதிப்புகளையும் அவமானங்களையும் சந்திக்கிறார். இதனால் விரக்தி அடையும் சந்தானம், கோபத்தில் ஒருநாள் குடித்து விட்டு வீட்டில் பெரிய சண்டை வளர்க்கிறார். வீடே கலவரம் ஆகிறது.

போதையில் இருக்கும் சந்தானத்திற்கு தெரியாமலேயே ஒன்று நடக்கிறது. அதன் மூலம் விதி விளையாடுகிறது. பின் சந்தானம் விதியின் கையில் சிக்கிக் கொள்கிறார். இறுதியில் விதியின் விளையாட்டில் சிக்கிய சந்தானம் எப்படி எல்லாம் விளையாடுகிறார்? பிரச்சினைகளை எப்படி எதிர்கொண்டார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

வழக்கம் போல் படத்தில் சந்தானம் தன்னுடைய கலகலப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். திக்கித் திக்கிப் பேச மிகவும்சிரமப்பட்டு நடித்திருக்கிறார். அது காட்சிகளில் தெரிகிறது. நாயகி பிரீத்தி வர்மாவுக்கு வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகியைப் போலவே அதிகம் வேலையில்லை. படத்தில் சந்தானத்திற்கு அடுத்து எம்.எஸ் பாஸ்கரின் நடிப்பு கவனிக்கும் வகையில் இருக்கிறது. தந்தைக்குரிய பொறுப்புடன் நடித்து பார்வையாளர்களிடம் பதிகிறார். சில காட்சிகளில் மட்டும் வந்து செல்கிறார் புகழ். பெரிதாக எதிர்பார்த்த இவருடைய நடிப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றம்.

விதியின் விளையாட்டு செல்லும் பாதை தான் படம்.
அதையே படமாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ். கதைக்களத்தைச் சரியான முறையிலும் கொண்டு சென்றிருக்கிறார். படத்தில் நகைச்சுவை மட்டுமில்லாமல் சில கருத்துகளையும் சொல்லி இருக்கிறார். இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டிஇருந்தால் சுவை கூடியிருக்கும். படத்தில் டைமிங் பஞ்ச்சும், நகைச்சுவையும் படத்திற்கு நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி சிறப்பு.

சாம் சி.எஸ். இசையில் பாடல்களை விடப் பின்னணி இசை படத்திற்குப் பலம். பாஸ்கர் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு அருமை.

சந்தானம் படத்தில்

புதிய கதைக்களத்தை அறிமுகப்படுத்திய வகையில் ‘சபாபதி’க்கு சபாஷ் போடலாம்.