சம்பளத்தை உயர்த்திவிட்டு வரிவிலக்கு கேட்பது ஏன்…? –நடிகர்களுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி!

lakshmi_ramakrishnan_hot_pics_43-586x875நடிகர்கள் சம்பளத்தை அளவுக்கு அதிகமாக உயர்த்திவிட்டு வரிவிலக்கு கேட்டு போராடுவது ஏன்…?” என்று நடிகை,இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார்.

சினிமா டிக்கெட்டுகளுக்கு தமிழக அரசு 30 சதவீத கேளிக்கை வரி விதித்ததற்கு தமிழ் திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் பலர் கேளிக்கை வரியை ரத்து செய்யம்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் திரையுலகினரின் போராட்டம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்து கருத்து பதிவிட்டு உள்ளார்.

“திரைப்படத் தொழிலை வியாபாரமாகப் பார்த்தால் எதற்காக வரிவிதிப்புகளை எதிர்க்க வேண்டும்..? நடிகர் நடிகைகளுக்கு சம்பளத்தை அளவுக்கு அதிகமாக உயர்த்தி கொடுத்துவிட்டு வரிவிலக்கு கேட்க வேண்டுமா…? வரி கட்டுபவர்கள் அரசாங்கத்தின் வீண் செலவுகளைக் கேள்வி கேட்பார்கள்.

படம் 100 கோடி ரூபாய் வசூலித்து விட்டது என்கிறார்கள். இதற்காக கோடிகளில் விளம்பரமும் செய்கிறார்கள். நடிகர்கள் சம்பளத் தொகையை ஏற்றுகிறார்கள். அதன் பிறகும் வரிவிலக்கு கேட்டு நிற்கிறார்கள். இது சினிமாவை காப்பாற்றும் நடவடிக்கைகளா…?

நான் ஒட்டு மொத்தமான தமிழ் சினிமாவுக்காக எனது கருத்துக்களை வெளியிடுகிறேன். நம்மிடம் அற்புதமான திறமைகள் இருக்கிறது. ஆனாலும் பக்கத்து மாநில சினிமாவைபோல் சிறந்த படங்கள் எடுப்பது இல்லை.

நடிகர்களும், தயாரிப்பாளர்களும் வியாபார ரீதியிலான சினிமாவை விடுத்து புதிய கதைகளை ஊக்குவித்தால் மட்டுமே தமிழ் சினிமாவை காப்பாற்ற முடியும். ‘ஜோக்கர்’ போன்ற படங்களையும் எடுக்க முடியும்.

இயக்குநர்களுக்கு இலக்கியம், வரலாறு, நமது கலாசாரம் ஆகியவை பற்றிய அறிவு வேண்டும். பெரிய நடிகர்கள் தங்கள் நட்சத்திர அந்தஸ்தை விட்டுவிட்டு, நல்ல கலைஞர்களாக மாற வேண்டும். நடிகர்கள் கதைகளுக்கு பின்னால் ஓட வேண்டும். எழுத்தாளர்களையும் இயக்குநர்களையும் கொண்டாட வேண்டும். அவர்கள்தான் நடிகர்களை உருவாக்குகிறார்கள்.  வரி விலக்கால் மட்டும் சினிமாவை காப்பாற்ற முடியாது…”

இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.