‘சாம்பியன்’ விமர்சனம்


 இயக்குநர் சுசீந்திரன் ‘வெண்ணிலா கபடிக்குழு ‘படத்தில் கபடியையும் ‘ஜீவா’ படத்தில் கிரிக்கெட்டையும் பின்புலமாக வைத்து திரைப்படமாக உருவாக்கியதைப் போல கால்பந்து விளையாட்டின் பின்புலத்தில் உருவாகியுள்ள படம்தான் ‘சாம்பியன்’. தன் படங்களில் விளையாட்டின் பின் உள்ள அரசியலையும் திறமைக்கு எதிராக  முரண்பாடுகளையும் சொல்லியிருப்பார். இதில் அவர் எடுத்துக் கொண்ட விளையாட்டு கால்பந்தாட்டம்.


பந்தாட்ட பின்புலத்தில் ஒரு பழிவாங்கும் கதை என்றும் இதைக் கூறலாம். படிக்கும் வயது மாணவன் கையில் கத்தி இருக்கக்கூடாது என்பதையும் சொல்லும் படம்.
சரி கதை என்ன?
விஷ்வா பள்ளி மாணவன்.அவனுக்கு, கால்பந்து விளையாடுவது என்றால் பயங்கர ஆர்வம்.. ஆனால், அம்மா அவனைக் கால்பந்து விளையாட அனுமதிப்பதில்லை. காரணம் அவனுடைய அப்பா மனோஜ் கால்பந்து விளையாடும்போது இறந்து போனதால்,அந்த பயத்தில்    அனுமதிப்பதில்லை .ஆனாலும், அம்மாவுக்குத் தெரியாமல் விளையாடுகிறான்.

பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் அவனுடைய திறமையைப் பார்த்து வியக்கிறார். நரேனிடம் அனுப்பி வைக்கிறார் . நரேன் கால்பந்து பயிற்சி அகாடமி ஒன்றின் கோச். தன் நண்பன் மனோஜின் மகன்தான் விஷ்வா என அறியும் நரேன், அவனிடம் சிறப்புக் கவனம் எடுத்துப்பயிற்சி தருகிறார்.

அடுத்த நிலைப் போட்டிக்காகத் தயாராகும் நேரத்தில், அவனுடைய தந்தையின் இறப்பு இயற்கை மரணமல்ல அது ஒ,ரு கொலை எனத் தெரிகிறது. 
தந்தையின் இறப்புக்குக் காரணமானவர்களைப் பழிவாங்கத் துடிக்கிறான் மகன் விஷ்வா. நினைத்தபடி அவன் பழிவாங்கினானா? இல்லையா? என்பது படத்தின் மீதிக்கதை செல்லும் பாதை.

விஷ்வாவுக்கு இதுதான் முதல் படமாம். சிறப்பாக நடித்துள்ளார். நிஜமான கால்பந்து விளையாட்டு வீரராக இருப்பாரோ என்று நினைக்கும் அளவுக்கு,  நடித்துள்ளார். இளம்பருவத்தில் இருக்கும்  கோபம்,  ஆர்வம், காதல் என எல்லா உணர்வுகளையும் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

பொறுப்பான கோச்சாக நடித்துள்ளார் நரேன். தன் நண்பனின் மகனின் எதிர்காலம் பாழாகிவிடக்கூடாது என்பதற்காகத் தன்னையே  கொடுக்கும் அழுத்தமான கதாபாத்திரம். வில்லனாக  வரும் ஸ்டன்ட் சிவாவின் நடிப்பு கவனிக்க வைக்கிறது. நாயகிகளாக நடித்துள்ள மிருணாளினி, செளமிகா இருவரும் கறிவேப்பிலைகள்.

நாயகனின் அம்மாவாக  வாசவி. தன் மகனுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்ற பரிதவிப்பைக் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். மனோஜ், ‘பிச்சைக்காரன்’ வினோத் இருவரும் கதைக்குத் தேவையானதைக் கொடுத்துள்ளனர்.அடுத்தடுத்த காட்சிகள் இப்படித்தான் இருக்கும் என எல்லோராலும் எளிதில் கணித்துவிடக்கூடிய திரைக்கதை அப்படியே நடப்பது சலிப்பைத் தருகிறது.

சுஜித் சாரங்கின் உறுத்தாத ஒளிப்பதிவு இதம். அரோல் கரோலியின் இசையில் சில இடங்களில் ரசிக்கவைத்த பின்னணி இசை, பல காட்சிகளில் சத்தம் அதிகம்.

‘சாம்பியன்’ எனத் தலைப்பு வைத்திருந்தாலும், விளையாட்டு தொடர்பான காட்சிகள் மிகக் குறைவாகவே உள்ளன. அதைவிட, ரவுடியிஸம், பழிவாங்கல் சம்பந்தப்பட்ட காட்சிகளே அதிகம் உள்ளன. ‘சாம்பியன்’  உள்ளடக்கத்தைவிட்டு வெளியே போன உணர்வு.