’சாஹோ’ விமர்சனம்

இது ஒரு திருடன் போலீஸ் கதைதான்.ஆனால் போலீஸ் திருடன் சாகச ஆடு புலி  ஆட்டத்தில் போலீசே  திருடன் பக்கத்துக்கு மாறினால் எப்படி இருக்கும் என்கிற கற்பனைதான் படக்கரு.

உலகின் மிகப்பெரும் கேங்க்ஸ்டர், உலக தாதாக்களின் தலைவர்  ராய் (ஜாக்கி ஷெரப்) .இவர் இந்தியாவுக்கு வர முயற்சி செய்யும் நேரத்தில் சிலரால் தாக்கப்பட்டு இறக்கின்றார். இதைத் தொடர்ந்து அவர்கள் இந்தியாவிற்குள் கொண்டு வந்த பல லட்சம் கோடி பணமும் எரிந்து நாசமாகிறது.

அதே நேரத்தில் பணம் இன்னும் இருக்கிறது, அதை எடுக்க வேண்டும் என்றால் ப்ளாக் பாக்ஸ் வேண்டும் என ராய் மகனாக வரும் அருண்விஜய் மற்ற கேங்ஸ்டர்களிடம் சொல்ல, அந்த ப்ளாக்பாக்ஸை எடுக்க பல கேங்ஸ்டர்கள் குறி வைக்கின்றனர், மேலும் அடுத்த ராய் யார் என்ற போட்டியும் தொடங்குகிறது.

அப்போது பிரபாஸ் இந்த கேஸைக் கையில் எடுக்கிறார். அதிரடியாக ஒரு திட்டம் தீட்டி அந்த ப்ளாக்பாக்ஸை பிரபாஸ் கைப்பற்றுகிறார். அதன் பின் பல மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கிறார். பிரபாஸ் யார், எதற்காக அந்த ப்ளாக்பாக்ஸை எடுத்தார், அதை வைத்து என்ன செய்யப்போகிறார் என்று கதை நீள்கின்றது.

படம் பிரமாண்டமாக எடுக்க வேண்டும் என்று மட்டுமே தான் இயக்குநர் சுஜித் நினைத்துள்ளாரே தவிர, படத்தின் பிரதானமாக இருக்க வேண்டிய திரைக்கதையில் கவனம் செலுத்த மறந்துவிட்டார். லாஜிக்கே இல்லாமல் சோர்வாக செல்லும் திரைக்கதை.அதிலும் படத்தின் முதல் பாதி, அட எப்படா இடைவேளை விடுவீர்கள் என்ற மனநிலைக்கு வரவைக்கின்றன,  பிறகு வரும் ஆக்‌ஷன் காட்சிகள் கொஞ்சம் நிமிர வைக்கின்றன.

 ஷ்ரத்தா கபூர் கொஞ்சம் கூட பிரபாஸிற்கு பொருத்தம்  இல்லை.  சேஸிங் டைமில் டூயட் சாங் பாடுவது எல்லாம் ஓவர். ஒரு நாயகன் என்றால் ஒரு முறையாவது தோற்க வேண்டும், பிறகு எழுந்து வரும் போது தான் நமக்கே விசில் அடிக்க தோன்றும்.அதுதான் எம்ஜிஆர் பாணி.இதில் பிரபாஸுக்கு முழுமையான தெலுங்கு பட நாயகனாகவே தோன்ற வைக்கும் வேடம்.  இதில் பிரபாஸ் நூற்றுக்கணக்கானவர்களைக்  கொல்லுவார், அவர் மீது  சுடப்பட்டு  புல்லட் மழையே பெய்யும்.ஆனால்  அதில் ஒரு புல்லட் மட்டுமே அவர் மீது படுகின்றது .மொத்தப் படத்தில், இப்படி நிறைய்ய உள்ளன.நாயக சாகசத்தைச் சொல்லும் படங்களுக்கு அதில்  நோக்கம் மிகவும் முக்கியம். அடிப்படை ரசிகனுக்கும் புரியும் வண்ணம் அது சொல்லப்பட வேண்டும். இந்தப்படத்தில் நம்பகம் இல்லாமல் போனதே படத்தை முழுமையாக ரசிக்க முடியாமல் போவதற்குக் காரணம்.

படத்தின் ஆறுதலான விஷயம் கிளைமாக்ஸ் காட்சிகள், அதன் ஆக்‌ஷன் காட்சிகள், அடுத்தடுத்து வரும் திருப்பம் இது படம் முழுவதும் இல்லாதது பெரிய மைனஸ், மேலும், ஜிப்ரானின் பின்னணி இசை மிரட்டல், மதியின் ஒளிப்பதிவு விழிகளை விரிய வைக்கும் தனித்துவம்.


பிரமாண்டம் ஒன்று மட்டும் இருந்தால் போதும், மற்றவை எதும் தேவையில்லை என முடிவு செய்துவிட்டே படத்தை எடுத்திருக்கிறார் சுஜீத். மருந்துக்கு கூட லாஜிக் என்பது இல்லவே இல்லை. 
 பழைய ஃபார்முலாவில் ஹாலிவுட் ஆக்ஷன் மசாலாவைச் சேர்த்துப் பரிமாற முயன்றிருக்கிறது சாஹோ. படத்தின் இறுதி பத்து நிமிடக்காட்சிகளில் ஏகப்பட்ட ட்விஸ்ட்களையும் ஆச்சரியங்களையும் வைத்துவிட்டு மொத்தப் படத்தையும் அதை நோக்கி நகர்த்தியிருக்கிறார்கள். அதுவரை படம் எதை நோக்கிச் செல்கிறது என்பதே தெரியாமல் போகிறது. 
பாகுபலிக்குப் பிறகு கிடைத்த மிகப் பெரும் எதிர்பார்ப்பு  ஒளிவட்டத்தோடு,  வந்திருக்கிறார் பிரபாஸ். ஆனால், காட்சிக்குக் காட்சி திரையில் தெரியும் பிரம்மாண்டம் கதையில் இல்லை. 
பிரமாண்டத்தோடு பிரதானமான கதையிலும் கவனம் செலுத்தியிருந்தால் சாஹோ,  ஓஹோவென்று இருந்திருக்கும்.