சிக்ஸ் பேக் வைத்தால் மட்டும்தான் பெரிய கதாநாயகனா? ஏ.ஆர். முருகதாஸ் பேச்சு

IMG_7942சிக்ஸ் பேக் வைத்தால் மட்டும்தான் பெரிய கதாநாயகனா?  என்று ஒரு சினிமா விழாவில் ஏ.ஆர். முருகதாஸ் பேசினார்.

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் படம் ‘கணிதன்’. அதர்வா, கேத்தரின் தெரசா நடித்துள்ள இப்படத்தை டி.என்.சந்தோஷ் இயக்கியுள்ளார். இவர் ஏ.ஆர். முருகதாஸின் மாணவர். படத்தின் இசை வெளியீட்டுவிழா இன்று சென்னை க்ரீன் பார்க் ஓட்டலில் நடந்தது. இசையை ஏ.ஆர் ரகுமான் வெளியிட  ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் சிறப்பு விருந்தினர்   பெற்றுக் கொண்டனர்.

விழாவில்  இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் பேசும்போது ” இது பத்திரிகையாளர் சம்பந்தப் பட்ட கதை. இதைத் தயாரிக்கும் தாணு சாரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.ரஜினி சாருக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் கொடுத்தவர் அவர். கடின உழைப்பாளி ராசியானவர்.
நான் ‘துப்பாக்கி’ படம் எடுத்த போது அதன் முதல் தோட்டாவாக இருந்தவர் அவர்தான். நான் ‘கத்தி’ படம் இயக்கிய போது நான் ஒரு கத்திதான் எடுத்தேன். ஆனால் ஊரில் யார் யாரோ 100 கத்திகள் எடுத்தார்கள். நான் படத்தில் பாம் வைத்தால் நிஜமாகவே தியேட்டரில் பாம் வைத்தார்கள்.அப்போது நான் செய்வது அறியாமல் தவித்த போது எனக்குத் துணை நின்றவர் தாணு சார்தான். அவர் தயாரிக்காத படத்துக்குக்கூட எனக்கு அவ்வளவு பக்க பலமாக இருந்தார்.சத்யம் திரையரங்கில்  திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் நடந்தபோது  படம் வெளிவருமா வராதா என்று நான் தவித்துக் குழம்பிய போது அவர் அங்குஅவர்கள்  நடுவில் வந்து சொன்னார், படத்தை திரையிடுங்கள் எது நடந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். என்ன பாதிப்பு வந்தாலும் நான் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்றார். அப்படிப்பட்டவர்தான் இந்த  தாணு சார்.
என் உதவியாளர்கள் ‘அரிமா நம்பி’ ஆனந்த் சங்கர், ‘கணிதன்’ சந்தோஷுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். ‘துப்பாக்கி’ படத்தில் வேலை பார்த்த என் ஆறு உதவியாளர்களும்  இப்போது படம் இயக்குகிறார்கள்.

IMG_7944தமிழ்த்திரையுலகில் ‘கபாலி’, ‘தெறி’ என்கிற இரண்டு பெரிய படங்களை எடுத்து வருகிறார். அந்தப் படத்தோடு என் உதவியாளர் இயக்கும் ‘கணிதன்’ படமும் தயாரிக்கிறார் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. ‘கபாலி’, ‘தெறி’ என்கிற இரண்டு பெரிய படங்களோடு அதற்கு எந்த அளவிலும் குறையில்லாமல் இந்தப் படத்தையும் நேசிப்பார் என்பது எனக்குத் தெரியும்.

‘கணிதன்’ இயக்கும் சந்தோஷ் நல்ல உழைப்பாளி, சுறுசுறுப்பானவர்.

நாயகன் அதர்வாவைப்  எனக்குப் பிடிக்கும்.,காரணம் அவரது அப்பா முரளிசார் எனக்குப் பிடிக்கும்.,. தமிழ்ச் சினிமாவில் அதிகமான  புதுமுக இயக்குநர்களுக்கு முதல் படம் கொடுத்த நாயகன் முரளிசார்தான். அவர். நமக்கு அதர்வாவையும் கொடுத்தவர் என்பதால் அவரைப் பிடிக்கும். அதே போலஅதர்வாவும் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார். ஒரு கதாநாயகன் சிக்ஸ் பேக்
வைத்தால் மட்டும் பெரிய கதாநாயகன் என்றில்லை.  காலையில் 9 மணிக்குப் படப்பிடிப்புக்கு வந்தால் பெரிய உண்மையான நடிகர் என்று கூறமுடியாது.
காலை 7 மணிக்கே சீருடையுடன் பள்ளிக்குப் போகும் குழந்தைகளைப் பார்க்கிறோம். அவர்களை சின்சியரானவர்கள் என்று நாம் கூறுவதில்லை.

நல்ல கதையைத் தேர்வு செய்து நடிப்பதுதான் திறமை.  கதாநாயகன் 50 கதைகள் கேட்டால்தான் ஒரு நல்ல இயக்குநரை  கண்டுபிடிக்கமுடியும்;அடையாளம் காணமுடியும்.நல்ல கதை கேட்டது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயமோ அதே போல் மோசமான கதை கேட்பதும் கொடுமையான விஷயம். அஜீத்சார் ,விஜய்சார் போல அதர்வாவும் புதுமுக இயக்குநருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

இதில் நடித்துள்ள கேத்தரின் தெரசா முன்னணி நாயகியாக வருவார். இசையமைத்திருக்கும் சிவமணியும் நானும் ஒரு முறை விமானத்தில் போனோம். அவர் கண்ணை மூடிக் கொண்டு இருந்தார். அட கவலையில்லாத மனிதர் என்று நினைத்தேன். சற்று நேரத்தில் என் காதில் ஹெட் போனை மாட்டிவிட்டு விமானத்தின் ஒலியை அடிப்படையாக வைத்து  ஒரு ரிதம் போட்டுள்ளேன்  கேளுங்கள் என்றார். கேட்டு விட்டு அசந்து விட்டேன்.

நான் வெளியிட ரகுமான் சார் பெற்றுக் கொள்ள வேண்டும். அதுவும் என் படத்துக்காக இருக்க வேண்டும் என்பது என் ஆசை. ஆஸ்கார் விருது வாங்கும் போது வெள்ளைக்காரர்கள் மத்தியில் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்றார். அப்போது எனக்கு எல்லாப் புகழும் தமிழனுக்கே என்று தோன்றியது.

சாப்பாடு எப்படி இருக்கும் என்பதற்குச் சாப்பிடவே வேண்டாம்.சமையல் கட்டிலிருந்து வரும் வாசனையிலேயே தெரியும்.  இந்த’கணிதன்’ படமும் அப்படித்தான்.  எடிட்டிங், டீஸர், பாடல் நிலையிலேயே  நன்றாகத் தெரிகிறது. நம்பிக்கை வருகிறது. இப்படம் வெற்றிப் படமாகி சந்தோஷ் சந்தோஷமாக இருக்க வாழ்த்துகிறேன்.” இவ்வாறு முருகதாஸ் பேசினார்.