‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ விமர்சனம்

தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் முகம் தெரிந்த நடிகராகி தனக்கென்று ஒரு அடையாளத்தை தேடிக் கொண்டிருக்கும் மிர்ச்சி சிவா கதை நாயகனாக நடித்திருக்கும் படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’

மிர்ச்சி சிவாவுடன் மேகா ஆகாஷ், அஞ்சு குரியன், ஷா ரா, மகாபா ஆனந்த், திவ்யா கணேஷ், மொட்டை ராஜேந்திரன், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் நீண்ட இடைவேளைக்கு பின்னர் பாடகர் மனோ இந்தப்படத்தில் நடித்துள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். லார்க் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளது.

இன்ஜினியரிங் படித்தவர் சிவா. படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் உணவு டெலிவரி செய்து வருகிறார். ஷா ரா புதிய தொழில் நுட்பத்தில் சாப்ட்வேர் ஒன்றை உருவாக்குகிறார். இது எதிர்பாராமல் மிர்ச்சி சிவாவின் கைகளில் கிடைக்கிறது. இதனால் அவர் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைக் கலகலப்புடன் சொல்லியுள்ளனர்.

ஷங்கராக சிவா காமெடியிலும் ஆக்க்ஷன் காட்சிகளிலும் சிறப்பான நடனத்திலும் நன்றாக நடித்திருக்கிறார். படம் முழுக்க தனது பாணியில் ஒன் லைன் பஞ்ச் வசனங்கள் பேசி ரசிகர்களைச் சிரிக்க வைத்துள்ளார் .ஸ்மார்ட்போன் பெண் “சிம்ரன்” ஆக மேகா ஆகாஷ் அழகாலும் நடிப்பாலும் நம்மைக் கவர்கிறார். சிங்காரவேலன் படத்தில் மனோவை பார்த்தது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிர்ச்சி சிவாவின் அப்பாவாக திரையில் தோன்றியுள்ளார். அவரும் தன் பங்குங்கு நகைச்சுவை செய்துள்ளார்.துளசியாக அஞ்சு சூரியன், சிவாவின் நண்பராக மாகாபா ஆனந்த் என அனைவரும் நினைவில் பதியும் நடிப்பை வழங்கி உள்ளனர்.

சாப்ட்வேட் தொழில்நுட்பம் மூலம் பேசும் பெண்ணாக வரும் மேகா ஆகாஷுடன் இவருக்கு நடக்கும் உரையாடல்களும் கலகலப்பானைவை.படத்தில் மிர்ச்சி சிவா, மேகா ஆகாஷ் சந்திக்காத காட்சிகள் தான் சிறப்பம்சம்.

படம் ஆரம்பிக்கும் போதே லாஜிக்கை எதிரபார்க்காதீர்கள் என்கிறார்கள்.லாஜிக் மீறல்களில் நம்மைக் கவனம் செலுத்த விடாமல் நகைச்சுவைக் காட்சிகளால் படத்தை நகர்த்திக்கொண்டு சென்றுள்ளார் இயக்குநர்.

லியோன் ஜேம்ஸ் இசையில் ‘ஸ்மார்போன் சென்யோரிட்டா’ பாடல் படம் முடிந்த பின்பும் முணுமுணுக்க வைக்கிற ரகம்.ஆர்தர் ஏ வில்சனின் கேமரா கதைக்களத்திற்கு தேவையான அளவு உள்ளது.

சராசரி கிராஃபிக்ஸ் காட்சிகள் பட்ஜெட்டை நினைவூட்டுகின்றன.

மொத்தத்தில் லாஜிக் தாண்டிய நகைச்சுவை மேஜிக் இந்த ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’ படம்.