‘சித்திரைச் செவ்வானம்’ விமர்சனம்

பிரபல சண்டை பயிற்சி இயக்குநர் ‘ஸ்டண்ட் சில்வா’ முதல் முறையாக இயக்குநராகியுள்ள படம். சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பூஜா கண்ணன் ,சிறுமி மானஸ்வி, ரீமா கல்லிங்கல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் CS இசையமைப்பாளராகவும், ஒளிப்பதிவாளர்களாக மனோஜ் பரமஹம்சா மற்றும் K.G . வெங்கடேஷ்,படத்தொகுப்பாளராக பிரவீன் கே.எல் ம்,
பணிபுரிந்துள்ளனர். பிரபல இயக்குநர் ஏ.எல்.விஜய் இப்படத்தை எழுதி வெளியிடுகிறார். A.L அழகப்பன் மற்றும் P. மங்கையர்க்கரசி இணைந்து தயாரித்துள்ளனர்.

‘சித்திரைச் செவ்வானம் ’ டிசம்பர் 3 அன்று நேரடியாக ஜீ5 OTT தளத்தில் வெளியாகவுள்ளது.

இதன் கதை என்ன? விவசாயி சமுத்திரக்கனி முன்னேற்றம் இல்லாத கிராமத்தில் வாழ்கிறார். மின்மோட்டாரில் மின்கசிவின் அதிர்ச்சிக்குள்ளான தன் மனைவியை ஊரில் மருத்துவ வசதி இல்லாததால் பறி கொடுக்கிறார்.தன் மகளை படித்து டாக்டராக்க வேண்டும் என்ற கனவில், நீட் பயிற்சி மையத்துக்கு நகர்ப்பகுதிக்கு அனுப்பி வைக்கிறார்.ஆஸ்டலில் குளிக்கும்போது ரகசியவீடியோ எடுத்து இணையத்தில் பரப்பி மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்கிறார்கள் அங்கே படிக்கும் பணக்கார வீட்டுத் தறுதலைகள்.தன் பாசமுள்ள மகளை இழந்த தந்தை சமுத்திரக்கனி எப்படிக் கயவர்களைப் பழி வாங்குகிறார் என்பதுதான் கதை.

நாயகன் சமுத்திரக்கனி படத்தின் மொத்தக் கதையை தனது தோளில் சுமந்து சென்றிருக்கிறார். தனது முதிர்ந்த வயது கதாபாத்திரத்தை தனது அனுபவத்தால் அனாயாசமாகச் செய்துள்ளார்.

தனது உலகமே மகள் என நினைத்து வாழும் சமுத்திரக்கனியின் கதாபாத்திரம் மிகவும் அழுத்தமானது.பல இடங்களில் மகளுக்காக உருகி அழும் காட்சிகளில் நம்மையும் கலங்க வைத்து விடுகிறார் சமுத்திரக்கனி.

அம்மா இறந்துவிட்டதை அறிந்து மானஸ்வி கதறி அழும் காட்சிக்கு யாரும் அழாமல் இருக்க முடியாது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் வரும் மிடுக்கான ரீமா கல்லிங்கல், இக்கதைக்கு சரியான தேர்வு தான்.

சமுத்திரகனி ஒரு அப்பாவாக வாழ்ந்திருக்கிறார். பூஜா மகளாக அற்புதமாக நடித்திருக்கிறார் என்றால் அபாரமான நடிப்பைவெளிப்படுத்தியிருக்கிறார் பூஜா கண்ணன்., தனது முதல் படம் என்பது போல் அல்லாமல் பல படங்களில் நடித்தவர் போன்ற அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார் .தனக்கான ஒரு நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி பாராட்டுப் பெறுகிறார் பூஜா.


படத்தில் பாலியல் வன்கொடுமைக் காட்சிகளை இவ்வளவு நீளமாகக் காட்டியிருக்க வேண்டாம்.படத்துக்கு சாம் சி எஸ்-ன் பின்னணி இசை கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது.சில இடங்களில் மிகை ஒலி எரிச்சல் மூட்டுகிறது.

கிராமத்து அழகையும் கதையின் போக்கையும் கண்முன்னே நிறுத்திய ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் மற்றும் வெங்கடேஷ் ஒளிப்பதிவு சபாஷ்.

நல்லதொரு கதைதான் உருக்கமான காட்சிகள்தான் முடிவை நம்பிக்கை தரும் விதத்தில் அளித்திருக்கலாம்.இயக்குநராக
முதல் பட அனுபவம் சில்வாவுக்கு வெற்றியைத் தேடி தந்துள்ளது எனலாம்.