லட்சியமா ? சமூகமா? விடை தேடும் படம் ’விரைவில் இசை’

vi-prஇன்றைய இளைஞர்களிடம் சுய நலம் இருக்கிறது லட்சியம் இல்லை என்று புகார் சொல்லப்படுகிறது

லட்சியம் உள்ளவர்களிடம் சமூக அக்கறை இல்லை என்று குறை கூறப்படுவதுண்டு.
லட்சியமா? சமூகமா ?என்று முடிவெடுத்கும் நிர்ப்பந்தம் இரண்டு இளைஞர்களுக்கு வருகிறது.

கனவு கை கூடும் நேரம் கடமை ஒன்று எதிரே நிற்கிறது.


லட்சியமா? சமூகமா?
கனவா கடமையா?
சுயநலமா ?பொது நலமா?

என்கிற கேள்விகள் அவர்களை அதிரவைக்கின்றன..முடிவெடுக்கும் நிர்ப்பந்தம் வரும் போது அவர்களின் முடிவு என்ன என்பதைச் சொல்கிற படம்தான் ‘விரைவில் இசை’திரையுலகக் கனவில் இருக்கும் இரண்டு இலட்சிய இளைஞர்களின் தேடலின் கதை இது.வெவ்வேறு திசையில்,  போக்கில் செல்கிற இருவேறு காதல்கதைதான் என்றும் இதைக் கூறலாம்.

இப்படத்தை திருமாருதி பிக்சர்ஸ் சார்பில் மாருதி T. பாலகிருஷ்ணன் தயாரித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் வி.எஸ்.பிரபா இயக்கியுள்ளார். இவர் ‘நினைத்தாலே இனிக்கும்’ ‘யுவன் யுவதி’ ‘ஹரிதாஸ்’ படங்களின் இயக்குநர் ஜி.என்.ஆர். குமரவேலனின் உதவி இயக்குநர். மதுரை வானொலி நிலையத்தில் பத்தாண்டுகள் பணிபுரிந்து பல்வேறு நாடகங்கள் நிகழ்ச்சிகள் என நூற்றுக் கணக்கில் படைத்தவர்.

குழந்தை நட்சத்திரமாக பரவலாக அறியப்பட்ட மாஸ்டர் மகேந்திரன் வளர்ந்து இளைஞனாகி ‘விழா’வுக்குப் பின்  நடித்துள்ள படம்  இது. அவருடன் ‘உடும்பன்’ நாயகன் திலீப்பும் சமபங்கு வேடமேற்றுள்ளார்.

ஸ்ருதி ராமகிருஷ்ணா,  அர்ப்பணா என இரு நாயகிகள். இருவருமே   பெங்களூர் அழகிகள் .டெல்லி கணேஷ், நெல்லை சிவாவும் நடித்திருக்கிறார்கள். மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் இரண்டாவது மகன் சஞ்சய் சங்கர் இதில் முழுநீள நகைச்சுவை நடிகராக அறிமுகமாகிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் வி.எஸ்.பிரபா கூறும்போது  “இது சினிமா உதவி இயக்குநர்கள், வாய்ப்பு தேடுவோரின் கதைதான் என்றாலும் படத்தில் சினிமாவே இருக்காது.  இதை லவ் ஸ்டோரி என்று சொல்வதைவிட லைவ் ஸ்டோரி என்றே கூறலாம்..அப்படி ஒரு யதார்த்தமான  கதை .சினிமாக் கனவில்  கிராமத்திலிருந்து சென்னை வந்து போராடும் இரு இளைஞர்களின் கதை இது.
சினிமாத்துறை சார்ந்து எத்தனையோ கதைகள் படமாகி வந்துள்ளன. இப்படம் சினிமாவின் அகத் தோற்றத்தை பதிவு செய்யும்படி இருக்கும்.

ஒளி வீசும் நட்சத்திரங்களைப் பற்றி மட்டும் பேசுகிறோம். ஆனால் எரிநட்சத்திரங்களாக உருகி உதிர்பவை பற்றி யாரும் பேசுவதில்லை. இப்படம் சினிமாவில் போராடும் உதவி இயக்குநர்களின் வலிகளை பேசுகிறது வாழ்க்கையைக் கூறுகிறது..“என்கிறார்.

vi-gpசென்னை, மதுரை, பாண்டிச்சேரி, பெங்களூர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

படத்தில் ஆறுபாடல்கள். அறிமுக இசை எம்.எஸ்.ராம்.பாடல்கள் அண்ணாமலை, வைரபாரதி, ஸ்ரீநிக்.படத்தில் வரும் ‘ஏ நண்பா ‘ பாடல் உதவி இயக்குநர்களின் தேசிய கீதமாகும்.

‘தப்பாட்டம்’ பாடல் வாழ்க்கையின் யதார்த்தத்தை பிரதிபலிக்கும். ‘போடுபோடு ஆட்டம் போடு’ பாடல்  குழந்தைகளைக் கவரும்.

மேலும் இரண்டு டூயட்பாடல்களும் உண்டு . படத்தின் பாடல்கள்  வெளியாகி ஏற்கெனவே பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளன. படம் வெளியான பின் அவை மேலும் அர்த்தம் பெறும்..

ஒளிப்பதிவு அறிமுகம் V.B. சிவானந்தம். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம்மின் மாணவர்.
ஆர்ட் -M.D.பிரபாகரன்,நடனம் -ஷ்யாம் சுந்தர், ஷாண்டி. எடிட்டிங் -யுரேஷ்குமார். ஸ்டண்ட்- சங்கர்.

சினிமாவில் உதவி இயக்குநர்கள்  பற்றி இயக்குநர் பிரபா எழுதியுள்ள கவிதை ஒன்று இப்படத்தில் வருகிறது. இது அனைத்து உதவி இயக்குநர்களுக்கும் சமர்ப்பணமாக இருக்கும்  என நம்புகிறார் பிரபா.

சினிமாவுக்காக காதலைத் துறக்கிறவன். சமூகத்துக்காக சினிமாவை துறந்தானா இல்லையா என்பதே க்ளைமாக்ஸ்.

நாட்டையே அதிர்ச்சிக் குள்ளாக்கிவருகிற குழந்தை பாலியல் வன்முறை  படத்தின் க்ளைமாக்ஸை மையம் கொண்டுள்ளது.

‘விரைவில் இசை’ படம் வெளியிடும் தருணத்தை நெருங்கி வருகிறது. அக்டோபரில் வெளியாகும்.