சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் ஜி.வி பிரகாஷ்!

நடிகராக ஜி.வி பிரகாஷ் தனது தடத்தை அழுத்தமாகப் பதிய வைத்துள்ளார். நாச்சியார், சர்வம் தாளமயம் என வெரைட்டியான கேரக்டர்களில் நடித்து மக்களின் கவனத்தை பெரிதாக ஈர்த்த  அவருக்கு, அவரின் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக Provoke  magazine சிறந்த நடிகருக்கான விருதை வழங்கியுள்ளது. இவ்விருது சர்வம் தாளமயம் படத்தில் ஜி.வி பிரகாஷ் சிறப்பாக நடித்ததிற்காக வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதை மகிழ்வோடு பெற்றுக்கொண்ட ஜி.வி பிரகாஷ், ட்விட்டரில்  இயக்குநர் ராஜீவ்மேனனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

\சர்வம் தாளமயம் படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. ராஜீவ்மேனன் இயக்கிய இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். ஜி.வி பிரகாஷுடன் அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினித், குமரவேல் ஆகியோர் நடித்திருந்தனர். இசைஞானம் மனிதரின் பிறப்பு பார்த்து வருவதில்லை என்ற கதைக் கருவை அடிப்படையாக கொண்ட இப்படம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களைப் பெற்றது.

ஜப்பானில் நடைபெற்ற டாக்கியோ இண்டெர்நேஷனல் பிலிம் பெஸ்டிவெலில் கலந்து கொண்ட சர்வம் தாளமயம் ஜப்பான் ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்தது. உலகெங்கும் பல்வேறு மக்களின் ஆதரவைப் பெற்றும் பல திரைப்பட பிரிவுகளில் திரையிடப்பட்டு பாராட்டுக்களைக் குவித்தும் வந்த இப்படத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக Provoke magazine விருது அமைந்துள்ளது. ஜி.வி பிரகாஷ் இவ்விருதைப் பெற்றுள்ளதை தெரிந்ததும் இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்  ஜி.வி பிரகாஷுக்கு வாழ்த்துகள் என ட்விட்டரில் தெரிவிக்க உற்சாகமான ஜி.வி, ஏ.ஆர் ரகுமானுக்கு தனது நன்றியினை தெரிவித்துள்ளார். இந்த விருது வழங்கும் விழா நேற்று இரவு மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இசை அமைப்பாளராக வெயில் படத்தில் அறிமுமாகி தமிழில் பல்வேறு படங்களில் வெற்றிகரமான பாடல்களையும் அசத்தலான பின்னணி இசையையும் வழங்கியவர் ஜி.வி பிரகாஷ். தற்போது நடிகராகவும் பிரமாதமாக பயணித்து வருகிறார்.