’சிவகுமாரின் சபதம் ’ விமர்சனம்

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம், தயாரிப்பு என அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுள்ளார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.
காஞ்சிபுரத்தில் பட்டு செய்வதில் சிறந்தவர் வரதராஜன். இவர்கள் குடும்பம் பாரம்பரியமாக பட்டு நெய்து வருகிறார்கள். இவருடன் வேலை பார்த்து வந்த சந்திரசேகர் சூழ்ச்சி செய்து சென்னையில் பெரிய துணிக்கடை ஆரம்பித்து விடுகிறார். வரதராஜனின் மகன் முருகன், சந்திரசேகர் பெண்ணை திருமணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாகிறார்.

ஒரு பிரச்சினையில் முருகனை, சந்திரசேகர் வீட்டை விட்டு துரத்தி விடுகிறார். இவருடன் இருக்கும் வரதராஜனின் பேரன் சிவகுமார், சந்திரசேகரிடம் ஒரு  சபதம் போடுகிறார். அதை சிவகுமார் நிறைவேற்றினாரா? இல்லாயா என்பதே படத்தின் மீதிக்கதை.

ஹிப்ஹாப் தமிழா ஆதி தான்  படத்தின் நாயகன்.அவர்தான் சிவகுமார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் வழக்கமாகக் குறும்புத்தன ஜாலியான ஆதியை இப்படத்திலும் பார்க்க முடிகிறது. 


காஞ்சிபுரம் பட்டின் பெருமை, தறி செய்யும் தொழிலாளர்கள் என்று நல்ல கதையை எடுத்துக் கொண்ட ஆதி, அதைப்பற்றி ஆழமாகச் சொல்லாமல் மேலோட்டமாகச் சென்றது ஒரு பலவீனம். முதல் பாதியில் தடுமாறும்  திரைக்கதை இரண்டாம் பாதியிலும் ஏமாற்றுகிறது.. நிறைய தத்துவங்கள் பேசுவது செயற்கை. முதல் பாதியில் அடுத்தடுத்து வரும் நான்கு பாடல்கள் பெரிதாகக் கவரவில்லை. இரண்டாம் பாதியில் வரும் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை ஓகே.

நம்பி முக்கியத்துவம் கொடுத்துள்ள காமெடி பெரிதாகக் கைகொடுக்கவில்லை.  நடனம் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளில் கவர்ந்திருக்கிறார் ஆதி.

நாயகியாக வரும் மாதுரி கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்.

சிவகுமாராக, படத்தின் மொத்தத்தையும் தாங்கும் பொறுப்பு ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதிக்கு! கலகல காட்சிகளை ரகளையுடன் செய்பவர், நெகிழவைக்கும் சென்டிமென்ட் காட்சிகளில் மட்டும் சற்று சிரமப்படுகிறார். இசையமைப்பாளராக, இயக்குநராக ‘ஹிப்ஹாப் தமிழா’ டீம் தங்களின் திறமையை நிரூபித்திருந்தாலும், நடிகராக இன்னும் பல படிகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது.

தாத்தா வரதராஜனாக வரும் இளங்கோ குமணன் தமிழ் சினிமாவுக்கு நல்வரவு! வாஞ்சையுடன் பேரனை வளர்க்கும் தாத்தா நம் வீட்டுத் தாத்தாக்களை அப்படியே கண்முன் நிறுத்துகிறார்.

முருகன் சித்தப்பாவாக வரும் பிராங்ஸ்டர் ராகுல், ஒரு சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். ஆதியின் நண்பராக வரும் கதிர், ரசிக்கும் படியான நடிப்பைக் கொடுத்து இருக்கிறார். பிற பாத்திரங்கள் திரைக்கதைக்குப் பெரிதும் உதவியுள்ளன.

அர்ஜுன் ராஜாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். பல இடங்களில் காட்சிகள் தெளிவு. ஆதி தலைக்குமேல் இத்தனை பொறுப்புகளை ஏற்று இருப்பதால், சரியாக எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலையில் இருந்திருக்கிறார் . அது படத்தின் முடிவில் தெரிகிறது.

மொத்தத்தில் ‘சிவகுமாரின் சபதம்’ வெல்லவில்லை.