‘சிவனே’ன்னு செட்டிலான நயன்தாரா: விவேக் ஜாலி பேச்சு!

vivek_tamilநயன்தாரா ‘சிவனே’ன்னு செட்டிலாய்ட்டாங்க ‘ என்று மனோரமா முதலாண்டு நினைவு விழாவில் விவேக் கிண்டல் செய்தார் .

இது பற்றிய விவரம் வருமாறு:

ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்து மறைந்த ஆச்சி மனோரமாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் விழா நேற்று மாலை ரஷ்யன் கலாச்சார மையத்தில்  நடைபெற்றது.

விழாவுக்கு நடிகர் சிவகுமார் தலைமை தாங்கினார்.

விழாவில் , பத்திரிகையாளர் ‘மக்கள் குரல் ‘ராம்ஜி ,நடிகைகள் குமாரி சச்சு, குட்டி பத்மினி, நடிகர்கள் விவேக்,  எஸ்.வி. சேகர்.நடிகர் சங்கத்துணைத் தலைவர் பொன்வண்ணன், மைம் கோபி, பதிப்பாளர் காந்தி கண்ணதாசன் , சக்தி மசாலா அதிபர் துரைசாமி , மனோரமாவின் மகன் பூபதி குடும்பத்தினர் , நண்பர் வெங்கடாசல பாண்டியன்ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்டு நடிகர் விவேக் பேசும்போது,

“நான் இங்கு நிறைய பேசலாம் என்று நினைத்து தான் வந்தேன். ஆனால் நான் பேச நினைத்தது எல்லாமே சிவகுமார் சார் பேசி விட்டார்.
நான் என்ன செய்வது?

இன்று எத்தனையோ நடிகைகள் வருகிறார்கள், எத்தனையோ நடிகைகள் இருக்கிறார்கள்.
எல்லாருமே வந்தவுடன் ஹன்சிகா மோத்வானி ஆக நினைக்கிறார்கள். நயன்தாரா ஆக நினைக்கிறார்கள். நயன்தாரா  ‘சிவனே’ன்னு செட்டிலாகி விட்டார்.நயன்தாரா  ‘சிவனே’ன்னு செட்டிலாய்ட்டாங்க ‘ ன்னு சொன்னால்  புரிந்தவர்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.

இன்றைக்குள்ள நடிகைகள் ஆச்சியை நினைத்துப் பார்க்க வேண்டும். நடிக்க வருகிறவர்கள்  அவரைப் பின்பற்ற வேண்டும். அவர் நடித்த  எல்லாப்படங்களையும் கூட பார்க்க வேண்டாம்.அவர் நடித்த  ‘தில்லானா மோகனாம்பாள் ‘என்கிற ஒரு படத்தையாவது பார்க்க வேண்டும். அதில் அவருடைய நடிப்பு, உடல் மொழி, டைமிங், நாட்டியத்திறமை , நடிப்பை வெளிப்படுத்தியுள்ள விதம் எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளலாம்.

அது ‘அன்னக்கிளி’ கால கட்டம். அப்போது ஆச்சி அவர்கள்  ஒரு வானொலி பேட்டியில் இளையராஜாவை இந்தத் தம்பி எதிர்காலத்தில் பெரிய ஆளாக வருவார் என்று கூறினார். என்ன ஒரு தீர்க்க தரிசனம்.!

நான் திடீரென அவரைப் பார்க்கத் தோன்றினால் போய்ப் பார்த்துப் பேசிவிட்டு வருவதுண்டு.
அப்படி ஓர் உள்ளுணர்வு ஒருநாள் எனக்குத் தோன்றியது. போய் ஆச்சியைப் பார்த்து விட்டு போட்டோ எல்லாம் எடுத்துக்கொண்டு  விட்டு வந்தேன்.
சில நாட்களில் அவர் நம்மை விட்டு சென்று விட்டார். ஆச்சி மாதிரி நடிப்பின் எல்லா வகைகளிலும்  சாதித்த ஒரு நடிகைஆச்சியைத் தவிர வேறு ஒரு நடிகை உலகிலேயே யாருமில்லை.
குடும்பத்தினர் ஆச்சி மறைந்து விட்டதாக வருந்த வேண்டாம்.
அவர் மறையவில்லை.
ஆச்சி நம்முடன்தான் இருக்கிறார். அவருக்கு மறைவில்லை.” இவ்வாறு விவேக் பேசினார்.