‘சீதாராமம்’ விமர்சனம்

அடிதடி வன்முறை க்ரைம் படங்கள் நடுவே மனம் வருடும் தென்றலைப் போல வந்திருக்கும் படம் இது.போர்க்களத்தின் நடுவே பூவாகச் சொல்லப்பட்டுள்ள காதல் கதை இது.

காஷ்மீரில் நடக்கும் ஒரு மதக்கலவரத்தில் இளவரசி நூர் ஜஹானை (மிருணாள் தாகூர்), ராணுவ வீரர் ராமன் ( துல்கர் சல்மான்) காப்பாற்றுகிறார். இதனையடுத்து துல்கரின் மீது காதல் கொள்ளும் நூர் ஜஹான், அவருக்கு யாருமில்லை என்பதை அறிந்து கொண்டு, காதல் கடிதங்களை எழுதுகிறார்.

ஒரு கட்டத்தில் இருவரும் சந்தித்து காதல் வளர்த்து வர, திடீரென்று வரும் போர்க்களப் பணிக்காக கிளம்புகிறார் துல்கர் சல்மான். இறுதியில் அவர் மீண்டும் நாடு திரும்பினாரா..? அவரின் காதல் என்னவானது..? அங்கு அவரது காதலிக்காக எழுதிய கடிதத்தின் நிலை என்ன ? அதற்கும் அஃப்ரீனாவிற்கும் (ராஷ்மிகா) என்ன தொடர்பு..?
உள்ளிட்ட கேள்விகளுக்கான விடைதான் சீதா ராமம் படத்தின் கதை. 

நிச்சயம்  ‘சீதா ராமம்’ ஒரு காவியச் சுவை கொண்ட திரைப்படம்தான். ராணுவ வீரராக வரும் துல்கர், தான் ஒரு காதல் இளவரசன் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார். ஜெமினி கணேசன் போல காதல் காட்சிகளில் உருக வைக்கும் துல்கர்,  ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் முதிர்ந்த நடிப்பைக் கொடுத்து இருக்கிறார்.

மிருணாள் தாகூர் இன்னும் கொஞ்சம் ஆழமான நடிப்பைக் கொடுத்திருக்கலாம். காமெடி கதாபாத்திரங்களாக காட்டப்படும் வெண்ணிலா கிசோர், முரளி சர்மாவின் கதாபாத்திரங்கள் பெரிதாக எடுபடவில்லை. கவுதம் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பிற நடிகர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கின்றனர். 

 படத்தின் ஒன்லைன் மிக எளிதாகத தெரிந்தாலும், அந்தக்கதையை அழகான காதல் ஓவியமாக மாற்றியிருக்கிறது திரைக்கதை. ஹனு ராகவபுடி மற்றும் படக்குழுவின் மெனக்கெடலுக்கு பாராட்டுகள். அதற்கு முழுக்க முழுக்க துணை நிற்கிறது பி.எஸ்.வினோத்தின் ஒளிப்பதிவு . படத்தின் லொகேஷன்கள் படத்திற்குப் பெரிய பலமாக உள்ளன.

அந்த அரண்மனை சார்ந்த காட்சிகளும் ராணுவப் பின்புலம் சார்ந்த காட்சிகளும் இதற்குச் சாட்சிகள்.

காஷ்மீரின் கொள்ளை அழகாகட்டும், காதல் காட்சிகளை நெஞ்சுக்கு அருகில் கொண்டு வந்ததாகட்டும் அனைத்து ஃப்ரேம்களும் அசத்தல்.
வெல்டன் வினோத்.

1964 காலக்கட்டங்களை காட்சிப்படுத்த கலை இயக்குநர் எடுத்துக்கொண்ட சிரத்தை நிச்சயம் பாராட்டத்தக்கது.

மதன் கார்க்கி வசனம் பாடல்கள் எழுதியுள்ளார். அவரது வரிகளில் சிறு சிறு பாடல்கள் படத்தில் கவனிக்கும் படி ஒலிக்கின்றன. பின்னணி இசையும் ஓகே தான்.  ‘ சீதா ராமம்’ காவியச் சுவை கொண்ட ரசிக்க வைக்கும் திரைப்படம்.