சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘வீரபாண்டியபுரம்’

சத்ரு, சரத், ஜேபி, காளி வெங்கட், பால சரவணன், முத்துக்குமார், அர்ஜெய் ப்ரின்ஸ், அருள் தாஸ், இயக்குநர் முக்தார் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். எம்.காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்துள்ளார்.இப்படத்தில் நடிப்பதோடு இசையமைப்பாளராகவும் ஜெய் அறிமுகமாகியிருக்கிறார். லெண்டி ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.ஐஸ்வர்யா தயாரித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சுசீந்திரன், “இது மிக முக்கியமான தருணம் முதலில் இப்படத்திற்கு சிவ சிவா என தலைப்பு வைத்திருந்தேன். இதற்கு முன்னால் ஒரு படம் செய்தேன். லாக்டவுனில் என்னால் வேலை செய்யாமல் இருக்க முடியவில்லை மிகவும் கஷடப்பட்டேன். வேல்ராஜ் சாரிடம் கேமரா மட்டும் இருக்கா சார் என கேட்டு ஜெய்யை வைத்து லைட் இல்லாமல் நேச்சர் லைட்டில் அந்தப்படத்தை எடுத்தோம். அந்தப்படத்தை உயிர் பயத்துடன் தான் எடுத்தோம். அந்த நேரத்தில் ஆர்டிஸ்ட் எல்லாம் நடிக்க பயந்தார்கள். ஜெய்யிடம் கேட்டேன் கதை சொல்கிறேன் என்றேன் ஆனால் கதையெல்லாம் வேண்டாம் சார், உங்க படத்தில் நடிக்க ஆசை உடனே வருகிறேன் என்று நடிக்க வந்தார். அந்தப்படம் முடிந்தபிறகு இந்தப்படத்தின் கதை சொன்னேன் உடனே பண்ணலாம் என்று பார்டனர்ஷிப்பில் சம்பளம் வாங்காமல் நடித்தார் ஜெய். இந்தப்படத்தை தெலுங்கிலும் ஆதியை வைத்து எடுத்தோம். தெலுங்கில் சுனில் முதற்கொண்டு நிறைய நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

இந்த கொரோனா எல்லோருக்கும் நிறைய இழப்புக்களை தந்துள்ளது என் வாழ்விலும் நிறைய இழப்புக்கள் நடந்தது. கண் முன்னால் நிறைய மரணங்கள் பார்த்தேன். எனக்கு இரண்டு அம்மா அதில் ஒருவர் இந்த கொரோனா காலத்தில் இறந்தார் அவர் என்னுடைய எல்லா நிகழ்ச்சிக்கும் வந்துள்ளார். அவர் இல்லாமல் நடக்கும் முதல் நிகழ்ச்சி இது தான். சினிமா வேலை தான் என்னை எல்லாவற்றையும் மறக்க வைக்கும் அதனால் தான் தொடர்ந்து வேலை செய்கிறேன். ஜெய் இசை கேட்டு வைரமுத்து சார் பெரிய இசையமைப்பாளராக வருவார் என வாழ்த்தினார். கிராமத்து இசையை முதல் படத்திலேயே அழகாக தந்துள்ளார் ஜெய். நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு இப்படம் ஒரு பழிவாங்கும் ஆக்சன் படம். க்ளைமாக்ஸ் ஃபைட் ஜெய்க்கு சூப்பராக வந்துள்ளது. நான் நன்றாக இருக்க வேண்டுமென நினைக்கும் நிறைய சினிமா நண்பர்கள் என்னை சுற்றி இருக்கிறார்கள் அது எனக்கு மகிழ்ச்சி. அடுத்தடுத்து இன்னும் தரமான படங்கள் செய்வேன். அண்ணாத்த படத்தில் சூரி பாண்டியநாடு படம் ரஜினி சாருக்கு பிடித்ததாக சொன்னார். ரஜினி சார் சொன்னது தான், நான் யானை அல்ல குதிரை கண்டிப்பாக எழுந்து விடுவேன். அஜித் சார் அரசியலுக்கு வர வேண்டுமென நான் சொன்னது பெரிய வைரலானது. அந்த பிரச்சனையில் நான் டிவிட்டரில் இருந்தே போய் விட்டேன். இப்போது எனக்கு அது தவறு என தோன்றுகிறது. அரசியல் மிக சிக்கலான கடினமான விசயம், அஜித் சார் நிம்மதியான ஒரு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார். அது தான் சரி. இந்தப்படம் எனக்கு ஒரு திருப்பு முனையாக இருக்கும்.” என்றார்.

நடிகர் ஜெய் பேசுகையில், “இசை எங்கிருந்து வருது என கேட்டு விடாதீர்கள். 2012 லிருந்தே இசை கற்றுக்கோண்டேன். முதலில் டிரிப்பிள்ஸ் என சீரிஸ் செய்தேன். அதன் கதை சொன்ன போது, நான் இசையமைப்பதை பார்த்துவிட்டு, ஒரு பாடல் மியூசிக் பண்ண சொன்னார் அதன் இயக்குநர். செய்கிறேன் ஆனால் நன்றாக இருந்தால் மட்டுமே பயன்படுத்துங்கள் என்றேன், அந்த பாடலை மிக்ஸிங் செய்து கொண்டிருந்த போது சுசி சார் கேட்டுவிட்டு யார் மியூசிக் என்றார், நான் தான் இசையமைத்தேன் என்றேன், அவர் ஆச்சரியப்பட்டு பாராட்டினார். இந்தப்படத்திற்கு இசையமையுங்கள் என்று சொன்ன போது முதலில் பிராங்க் செய்கிறார் என்று நினைத்தேன், சீரியஸாக சொன்னார். கொஞ்சம் தயக்கமாக இருந்தது ஆனால் சுசி சார் என்னை நம்பினார். இப்போது படத்தை முடித்து விட்டு பார்க்கும் போது என்னால் இசையமைக்க முடியும் என்ற நம்பிக்கை வருகிறது. அதறகு சுசி சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். முதல் பாடலே வைரமுத்து சார் எழுதினார் அவருக்கு இசை பிடித்திருந்தது என்று இயக்குநர் சொன்னார், மகிழ்ச்சியாக இருந்தது. நான் இசை கற்றுக்கொண்டதற்கு என் குடும்பம் தான் காரணம், என் குடும்பத்திற்கு நன்றி. நான் எது செய்தாலும் என்னை நம்பி, செய் என ஊக்கம் அளித்த என் அப்பாவுக்கு நன்றி. சுந்தர் சி சார் படத்திலும் ஒரு பாட்டுக்கு இசையமைத்துள்ளேன் பெரிய நம்பிக்கை வந்துள்ளது. இந்தப்படத்தில் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். சுசி சார் ஒரு நாள் வேல்ராஜ் சார் அப்பா இறந்ததற்கு செல்வதற்காக, என்னை அன்றைக்கு என்னென்ன எடுக்க வேண்டும் என எழுதி கொடுத்துவிட்டு போய்விட்டார், நான் தயங்கினேன் தைரியம் தந்தார். எனக்கு இயக்கவும் வரும் என நம்பிக்கை தந்த சுசி சாருக்கு நன்றி.” என்றார்.