‘சுழல்’ விமர்சனம்

அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளம் முதல்முறையாக தமிழில் நேரடியாக ‘சுழல்’ என்ற வெப் சீரிஸைத் தயாரித்துள்ளது.

விக்ரம் வேதா புகழ் புஷ்கர் காயத்ரி தம்பதி கதை உருவாக்கியுள்ள இந்த வெப் தொடரில் கதிர், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், , ஷ்ரேயா ரெட்டி உள்பட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த வெப் தொடரை பிரம்மா மற்றும் அணுசரண் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். இந்த வெப் தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

உலகம் எங்கும் வெளியான இந்தச் சுழல் வெப்சீரிஸ் எப்படி இருக்கிறது..?

கொங்கு மண்டலத்தில் சாம்பலூர் என்கிற கிராமத்தில் ஒரு தொழிற்சாலை இயங்கி வருகிறது. அதற்கு எதிராக அங்கு வேலை செய்யும் பார்த்திபன் தனது தலைமையில் ஒரு போராட்டத்தை நடத்துகிறார். அவர் போராட்டம் நடத்திய பிறகு அந்தப் தொழிற்சாலைக்குத் தீ வைத்து விடுகிறார்கள்.
பார்த்திபன்தான் செய்தார் என்பதற்கான ஆதாரம் இல்லை என்றாலும்
இதற்குக் காரணம் அவர்தான் என இன்ஸ்பெக்டர் ஷ்ரேயா ரெட்டியும், எஸ்.ஐ கதிரும் சந்தேகப்படுகிறார்கள்.
இந்நேரத்தில் பார்த்திபனின் 15 வயது மகள் காணாமல் போகிறார். அதற்குக் காரணம் இன்ஸ்பெக்டர் ஷ்ரேயா ரெட்டியின் மகன்தான் என்பது தெரிய வருகிறது. அதிலும் ஒரு திருப்பம்வர.. ஐஸ்வர்யா ராஜேஷ் கதைக்குள் நுழை கிறார்.

தொழிற்சாலையைக் கொளுத்தியது யார்? பார்த்திபன் மகளைக் கடத்தியது யார்? அடுத்தடுத்து என்ன நடந்தது? எனப் பல கேள்விகளுக்குப் பதிலாகக் காட்சிகள் இந்தச் ‘சுழல்’ வெப் சீரிஸில் இருக்கிறது

படத்தின் பிரதான பாத்திரத்தில் கதிர் நடித்துள்ளார். சாம்பலூர் என்ற கிராமத்தில் சாட்சாத் ஒரு எஸ்.ஐ. எப்படி இருப்பாரோ… அப்படி கதிர் தோன்றி நடித்துள்ளார். சண்டைக்காட்சிகள் பெரிதாக இல்லாவிட்டாலும் இருக்கும் கிடைத்த வாய்ப்பில் சோபிக்கிறார். உணர்ச்சிமிக்க காட்சிகளில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். அவர் போலவே நடிப்பில் கடும் போட்டியாக நின்றுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

எட்டாவது எபிசோடில் ஐஸ்வர்யா பொங்கி வெடிக்கும்போது சீரிஸ் பார்க்கும் அனைவருக்கும் மனம் உருகிவிடும். பார்த்திபன் தனது அனுபவத்தால் அவரது பாத்திரத்தை அழகாகத் தாங்கியுள்ளார்.

மகள்களை நினைத்து அவர் உடையும் இடங்கள் எல்லாம் சபாஷ் நடிப்பு.
ஷ்ரேயா ரெட்டி எதிர்பாரா வரவு. இன்ஸ்பெக்டராக கச்சிதமாகச் செய்துள்ளார். கம்பீரம் பீறி ஓர் அன்பான அம்மாவாகவும் ஈர்க்கிறார்.

மேலும் நிலா என்ற கேரக்டரில் நடித்துள்ள பெண்ணும் சிறந்த தேர்வு. நடிகை லதாராவ் ஒரு கேரக்டரில் இயல்பாக நடித்துள்ளார்.

நடிகர்களின் தேர்வும் நடிப்பும் போல தொழில்நுட்பக் கழகம் நன்றாக உழைத்துள்ளது. முகேஷின் ஒளிப்பதிவு மிகவும் நேர்த்தி. சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசையும் இதம்.

படத் தொகுப்பாளரின் உழைப்பையும் பல காட்சிகளில் காண முடிகிறது. கலை இயக்குநரின் பணியும் பாராட்டுக்குரியது.

இந்த வெப்சீரிஸின் சிறப்பம்சமே தொய்வே இல்லாத திரைக்கதைதான். கதை, யாரை சந்தேகிப்பது, யாரை சந்தேகப்படாமல் இருப்பது என்றே தெரியாத அளவுக்கு திரைக்கதையை அட்டகாசமாக வடிவமைத்துள்ளனர் புஷ்கர் மற்றும் காயத்ரி.ஒவ்வொரு எபிசோடிலும் மிகச் சிறப்பான ஒரு திருப்புமுனையை வைத்து ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து விடுகிறார்கள்.

வசனங்களில் ஆங்காங்கே அரசியல் நெடி இருப்பதும் சீரிஸுக்கு பலம் சேர்த்துள்ளது.

இந்து மதத்திற்குள் இருக்கும் வேற்றுமையையும், தீண்டாமையையும் அழுத்தமாகச் சொல்லியிருப்பது பளிச் .

மொத்தத்தில் இந்தச் ‘சுழல்’ உள்ளடக்கத்திலும் தோற்றத்திலும் முத்திரை பதிக்கிறது.