சென்னையில் 3-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு வரும் அக்டோபர் 2-ம் தேதி தொடக்கம்!

wtc4தமிழர்களை உலக அளவில் தொழிலில் மேம்படுத்தும் நோக்கில் சென்னையில் 3-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு வரும் அக்டோபர் 2-ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது என்று மாநாட்டு அமைப்பாளர் வி.ஆர்.எஸ்.சம்பத் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

உலகத் தமிழ் பொருளாதார அற நிறுவனம், சென்னை வளர்ச்சிக் கழகம், சென்னை நகர மக்கள் ஆகியோர் சார்பில் சென்னையில் மூன்றாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு அக்.2-ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. அக்.2-ம் தேதி நடைபெறும் தொடக்க விழாவுக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் தலைமை தாங்குகிறார். உலக நாடுகளில் முதன்முதலாக ஒரு தமிழர் பிரதமராக முடியும் என்று நிரூபித்த கயானா நாட்டு பிரதமர் மோசஸ் வீராசாமி நாகமுத்து மாநாட்டைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

மொரீஷியஸ் நாட்டு துணை குடியரசுத் தலைவர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, ஐ.நா.வின் பண்பாட்டு உறவுகள் உயர் நிலைப் பிரதிநிதி நசீர் அப்துல்லாசீர் அல்-நாசர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர். இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள், பொருளாதார நிபுணர்கள், தொழிலதிபர்கள் என 750 பேர் பங்கேற்கின்றனர். வெளிநாட்டைப் பொருத்தவரை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், துபாய், மஸ்கட், ஓமன், இங்கிலாந்து, கனடா உட்பட 15-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

பொருளாதாரம், தொழில், வணிகத் துறைகளில் தமிழர்களை முன்னுக்கு கொண்டு வருவதே இம்மாநாட்டின் நோக்கமாகும். பதினாறு அமர்வுகளில் 100-க்கும் மேற்பட்ட தொழில்துறை வல்லுநர்கள் பங்கேற்கின்றனர். தொடக்க நாளிலும், நிறைவு நாளிலும் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நிறைவு நாளில், 12 நாடுகளைச் சேர்ந்த 12 பேர் கவுரவிக்கப்படவுள்ளனர். அன்றைய தினம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

இவ்வாறு வி.ஆர்.எஸ்.சம்பத் கூறினார்.

wtcபேட்டியின்போது, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், பிரசிடெண்ட் ஓட்டல் அதிபர் அபுபக்கர், தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம், மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி ஆகியோர் உடனிருந்தனர்.