‘செம்பி ‘விமர்சனம்

கொடைக்கானல் பகுதியில் வாழும் பழங்குடியினப் பெண் வீரத்தாயி தனது பத்து வயது பேட்டி செம்பிடன் வாழ்ந்து வருகிறாள்.
மலை, காட்டுப் பகுதிகளின் விளைபொருள்களான கிழங்கு தேன் என்று தேடிச் சேகரித்து விற்றுப் பிழைத்து வருகிறாள்.சுற்றுலா வந்த சில அயோக்கியர்களால் செம்பி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறாள்.
இதை அறிந்து
மனம் உடைந்து போன பாட்டி பயந்து போய்விடவில்லை. இந்தக் கொடுமைக்கு நியாயம் கேட்டுப் போராடுகிறாள். அவள் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்ததா இல்லையா என்பது தான் கதை.

கோவை சரளாதான் அந்த பாட்டி.நிலா தான் அந்தப் பேத்தி செம்பி.
இதுவரை கோவை சரளா நடித்த நகைச்சுவை பாத்திரங்களில் வந்து பலரையும் கிச்சுகிச்சு மூட்ட வைத்துள்ளார். சிரிக்க வைத்துள்ளார். ஆனால் இந்தப் படத்தின் பாத்திரத்தின் மூலம் அனைவரையும் கலங்க வைத்துள்ளார் .அதற்கான தோற்றம் நடை உடை பாவனைகள் என அனைத்திலும் வேறுபட்டு மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

செம்பியாக வரும் சிறுமி நிலா, நேர்த்தியான நடிப்பால் மனதில் ஆழமாகப் பதிகிறார்.

அஸ்வின் தனக்கான கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, நாஞ்சில் சம்பத், பழ.கருப்பையா, ஞான சம்பந்தன் உள்ளிட்டோர் துணைக் கதாபாத்திரங்களில் வந்து பலம் சேர்க்கின்றனர்.

காடு மலை என்று சார்ந்து வாழும் அந்த மக்களின் வாழ்க்கைக்கும் நம்மை அழைத்துக் கொண்டு செல்கிறார் பிரபு சாலமன்.

ஒளிப்பதிவாளர் எம்.ஜீவன் அங்கிருக்கும் காடுகளையும், மலைகளையும் உயிரோட்டத்துடன் ஒளிப்பதிவு செய்துள்ளார்:

வீரத்தாயைத் தாங்கும் செம்பி… செம்பியைத் தாங்கும் வீரத்தாய்.பரஸ்பரம் ஒருவரை ஒருவர் ஒட்டிக் கொண்டு வாழ்கிறார்கள்.இந்த உலகம் நமக்கு புதிதாகத் தெரிகிறது.சற்று நேரத்தில் நாமும் அதில் ஐக்கியமாகி விடுகிறோம்.

பாலியல் வன்கொடுமை எப்படி அவரவர் லாபத்திற்கு பயன்படுத்தப்படுகிறது என்கிற அரசியலைப் பேசுகிறது படம்.

கதையின் போக்கு கோவை சரளாவிலிருந்து விலகி அஸ்வின் பக்கம் செல்வதால் தடுமாற்றம் உணர முடிகிறது.

‘மைனா’ படத்தை நினைவூட்டும் பேருந்து காட்சிகளும், அதில் நீளும் அறிவுரை விளக்க வசனங்களும், அதீத உரையாடல்களும் அலுப்பூ ட்டுகின்றன.

சென்டிமென்ட் காட்சிகளில் பிரபு சாலமன் எதிர்பார்த்த விளைவு கிடைத்து விடுகிறது.
கலங்க வைக்கும் சில காட்சிகளுக்கு நிவாஸ் கே.பிரசன்னாவின் பின்னணி இசை பக்கா பக்க பலம்.

‘‘உண்மையை புரிய வைக்க மொழி தேவையில்லை வலி போதும்” வசனம் சாம்பிள் நறுக்’

சிறுமிகளின் வன்கொடுமைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய படம் சில தடுமாற்றங்களுடன் முடிகிறது.
கோவை சரளாவைச் சரியாக சித்தரித்து அவர் உயரத்தை சற்று உயர்த்தியதால் இப்படம் அவருக்கும் முக்கியமான ஒன்றாக இருக்கும்.