ஜெய் பீம்: சூர்யா,ஞானவேலுவை வாழ்த்திய,மூத்த தலைவர் நல்லக்கண்ணு!

தமிழ் சினிமா உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஜெய்பீம் திரைப்படத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பார்த்தார். அவருடன் நடிகர் சூர்யா, சூர்யாவின் தந்தை சிவகுமார், இயக்குநர் த.செ.ஞானவேல், 2D நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் ஆகியோரும் படத்தைப் பார்த்தனர்.
முன்னதாக படத்தை தொலைக்காட்சியில் பார்த்த நல்லக்கண்ணு, திரையில் காண விருப்பம் தெரிவித்திருந்தார். அதற்கேற்ப படத்தை என் எப் டி சியில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று வியாழக்கிழமை இரவு படத்தைத் திரையில் கண்டு ரசித்தார்.
படத்தைப் பார்த்துவிட்டு நல்லக்கண்ணு அவர்கள், நடிகர் சூர்யாவையும், படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேலுவையும் வெகுவாகப் பாராட்டினார். நடிகர் சூர்யாவின் கன்னத்தில் செல்லமாக வருடிக் கொடுத்து தனது பாராட்டை நல்லக்கண்ணு பதிவு செய்தார்.


தமிழகத்தில் 1990களில் நடந்த பல்வேறு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு காண்போரின் சிந்தையைத் தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் ‘ஜெய் பீம்’. நீதிபதி சந்துருவின் வழக்காடு பயணத்தில் இருந்து நிறையவே ஈர்க்கப்பட்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு வழக்கறிஞராக, நீதிபதியாக நீதியரசர் சந்துரு தனது கடமையைச் செய்ய, நீதியை நிலைநாட்டு தன் எல்லைகளைத் தாண்டியும் எப்படிப் போராடினர் என்பதற்கான சாட்சி  ‘ஜெய் பீம்’.  
இத்திரைப்படத்தை த.செ.ஞானவேல் எழுதி, இயக்கியுள்ளார். படத்தில் சூர்யாவுடன், பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபிலோமின்ராஜ் எடிட்டராகவும், கலை இயக்குநராக கதிரும் பணியாற்றியுள்ளனர்.
நவம்பர் 2 ஆம் உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பிராந்தியங்களில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் பரவலாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினரும் படத்திற்கு பாராட்டும், படக்குழுவினருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.
அந்த வரிசையில், தற்போது ஜெய்பீம் திரைப்படத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பார்த்துவிட்டு நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேலுவையும் பாராட்டியுள்ளார்.
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரின் பாராட்டு, நடிகர் சூர்யாவையும் ஜெய்பீம் படக்குழுவினரையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.