டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவின் ‘அமல்கம்’ இசை ஆல்பத்தை வெளியிட்ட ஏஆர் ரகுமான்!

கர்நாடக இசை மாமேதை, பத்மவிபூஷன் செவாலியர் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் ‘அமல்கம்’ என்ற ஃபியூஷன் இசை ஆல்பத்தை சமீபத்தில் வெளியிட்டார் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். நவீன, சமகால இசை பாணியில் அவரே இசை அமைத்து பாடிய இந்த ஆல்பத்தில் மொத்தம் 7 பாடல்கள் . அவற்றை சரிகம நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. தற்செயலாக இதுவே மாமேதை வக்கேயகரா அவர்கள் கடைசியாக ரெக்கார்டு செய்த ஆல்பமாகவும் அமைந்துள்ளது. ஷ்யாம் ரவிஷங்கர், நிகில் என இரண்டு இளம் இசைக் கலைஞர்கள் இந்த ஆல்பத்திற்கான பின்னணி இசைக் கோர்ப்பு ஏற்பாடுகளை கவனித்தனர்.

21 வயதான ஷ்யாம், பாலமுரளி கிருஷ்ணாவின் மாணவன் மட்டுமல்லாது 650 இசை நிகழ்ச்சிகளில் வாசித்த முழுமையான ஒரு இசைக்கலைஞன். 24 வயது இளைஞரான நிகில் கேஎம் இசைக்கல்லூரி மற்றும் பெர்க்லீ இசைக்கல்லூரியில் பயின்ற ஒரு திறமையான இசை அமைப்பாளர். 30க்கும் மேற்பட்ட குறும்படங்களுக்கும், பல்வேறு விளம்பர படங்களுக்கும் இசை அமைத்திருக்கிறார் நிகில்.

இந்த இசை ஆல்பத்தில் ராகவன், அக்‌ஷய் ராம், பசந்த் ஆகியோர் முறையே கிடார், மிருதங்கம், சாக்ஸ்ஃபோன் வாசிக்க, ஜெகன் லைப் டிரம்ஸ் மற்றும் பெர்கஸன் இசைக்க, மிதுல் டேனியல் பேஸ் வாசித்தனர்.

ஷ்யாம் தன் குரு பாலமுரளி கிருஷ்ணாவை தன் ஃபியூஷன் பேண்ட் அமல்கம் முதல் இசை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்தபோது தான் இந்த ஆல்பத்திற்கான ஐடியா வந்திருக்கிறது. இசை நிகழ்ச்சியை பாலமுரளி கிருஷ்ணா மிகவும் ரசித்திருக்கிறார். அதன்பிறகு பாலமுரளி கிருஷ்ணாவின் ஒரு பாடலை எடுத்து, கிடார், டிரம்ஸ், பேஸ் மட்டும் உபயோகித்து இசைத்து காட்டியிருக்கிறார். அதை கேட்ட பாலமுரளி கிருஷ்ணா உடனடியாக தான் பாட, 7 பாடல்கள் கொண்ட இசை ஆல்பத்தை செய்யலாம் என பரிந்துரைக்கிறார். ஆல்பத்தை இன்னும் மெறுகேற்ற நிகிலையும் இணைத்து கொண்டார் ஷ்யாம்.

அமல்கம் இசையின் பலவித பரிமாணங்களையும் இணைத்து, இந்திய பாரம்பரிய இசையின் கூறுகளை கொண்டும், ஜாஸ், புளூஸ், மேற்கத்திய இசையின் ஆர்க்கெஸ்ட்ரல் ராக், சமகால ஃபியூஷன், பாலமுரளி கிருஷ்ணாவால் உருவாக்கப்பட்ட ராகங்கள், இந்திய இசைக்கருவிகளான மிருதங்கம் ஆகியவற்றோடு மேற்கத்திய இசைக்கருவியான சாக்ஸ்ஃபோன் மூலம் இரண்டு இருபது வயது இளைய இசைக்கலைஞர்கள் கொண்டு பாடல்களை உருவாக்கியிருக்கிறார் 86 வயதான மாமேதை பாலமுரளி கிருஷ்ணா. உண்மையிலேயே இந்த ஆல்பம் ஒரு கலவை தான்.

பாலமுரளிகிருஷ்ணா ட்ரஸ்ட் சார்பில் விபு பாலமுரளி, இசைக்கலைஞர் கிருஷ்ணகுமார், சரிகம நிறுவனத்தின் சார்பில் ஆனந்த ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் போது உடன் இருந்தனர்.