‘டாக்டர் ‘விமர்சனம்

பெண் பார்க்கப் போன டாக்டருக்கு, அந்தப் பெண் தன்னை வேண்டாம் என்று கூறினாலும்,பிடிக்கிறது. அவர்கள் வீட்டுச் சிறுமி காணாமல் போனது அறிந்து, எப்படிக் கண்டு பிடிக்கிறார் என்பதே கதை.கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்க ஒரு டாக்டர் போராடினால், அதற்கு ராணுவமும் உதவினால் அதுவே ‘டாக்டர்’

சிறுமியைக் கடத்தியது யார், அந்த கடத்தல் கும்பல் நெட்வொர்க் எப்படி இயங்குகிறது, கண்டுபிடித்து மீட்க முடிந்ததா, டாக்டரான சிவகார்த்திகேயனின் காதல் கைகூடியதா போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது திரைக்கதை.

‘கோலமாவு கோகிலா’ மூலம் அறிமுகமான நெல்சன் திலீப்குமாரின் இரண்டாவது படம் இது.

சிவகார்த்திகேயன்  வணிக மதிப்புள்ள நாயகனாக அடுத்தகட்டப் பாய்ச்சலில்  ஏறி அடித்திருக்கிறார். மென்மையான குரலில் பேசுவது, டாக்டருக்கே உரிய உடல் மொழி, திட்டங்கள் தீட்டும் புத்திசாலித்தனம் என  நடிப்பில் பலபடிகள் மேலேறுகிறார். 
 நாயகிக்கு உரிய பங்களிப்பை பிரியங்கா அருள் மோகன் குறையில்லாமல் செய்துள்ளார். அதேபோல் வினய் கதாபாத்திரமும். ரெடின் கிங்ஸ்லீக்குப் பெயர் சொல்லும் படம் இது. யோகி பாபு குணச்சித்திரமும் காமெடியும் கலந்து  நடித்துள்ளார். சுனில் ரெட்டி, அவரது அடியாள் சிவா ஆகியோரும் கிடைத்த கேப்பில்  கைதட்டல்களை அள்ளுகிறார்கள். உணர்வுபூர்வமான காட்சிகளிலும் காமெடி சரவெடிகள் வெடிக்கின்றன .

இளவரசு, அருண் அலெக்ஸாண்டர், அர்ச்சனா ஆகியோரும்  இயல்பு மீறா நடிப்பில் பதிகிறார்கள். தீபா  தனித் தடம் பதிக்கிறார். ஆல்வின், மெல்வினாக ரகுராமும், ராஜீவ் லட்சுமணனும் திரைக்கதையின் திருப்பத்துக்குப் பயன்பட்டுள்ளனர். மிலிந்த் சோமன் ஓரிரு காட்சிகளில் வந்தாலும் பளிச்சிடுகிறார்.

மிக மிக சீரியஸான காட்சிகளிலும் காமெடியைத் தூவி இயக்குநர் சிரிக்க வைத்திருக்கிறார்.   

விஜய் கார்த்திக் கண்ணன் சென்னையின் இயல்பையும், கோவாவின் அழகையும் கேமராவுக்குள் கடத்தியுள்ளார். அனிருத் பின்னணி இசை பக்கா. செல்லம்மா பாடல் ரசிக்க வைக்கும் ரகம். நிர்மலின் படத்தொகுப்பு கச்சிதம்.

படத்தின் முதல் பாதியில் இருந்த கதைக் கட்டுமானம் இரண்டாவது பாதியில் தளர்வடைந்து சமரசங்களுக்குள்ளாகி  வணிகமயப் படுத்தப்பட்டு விட்டது .எனவே இரண்டாவது பாதியில் நேர்த்தி குறைந்துள்ளது. இறுக்கமும் குறைந்து உள்ளது.  
பல லாஜிக் மீறல்கள் இருக்கின்றன.அந்த லாஜிக்குகளைத் தாண்டிப் பார்த்தால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிரிக்க வைத்திருக்கிறார்கள்.அதுவே படத்தின் பலம்.


எப்படிப்பட்ட நெருக்கடியான சூழலிலும் கதாபாத்திரங்கள் பேசுவதும் அவர்கள் நடந்து கொள்வதும் சிரிப்பை வரவழைக்கிறது. ரசிகர்களை கவலை மறந்து சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக பல இடங்களில் சமரசம் செய்து அதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் .நம்ப முடிகிறதோ இல்லையோ சிரிக்க முடிகிறது. அந்த வகையில் இந்தக் கோவிட் காலத்தில் ரசிகர்களுக்கு நல்லதொரு சிரிப்பு மருந்து. எனவே நம்பி செல்லலாம் டாக்டர் மன அழுத்தத்தைப் போக்குவார்.