‘டிக்கிலோனா’ விமர்சனம்

ஜென்டில்மேன் படத்தில் வரும் டிக்கி லோனா விளையாட்டு மிகவும் புகழ்பெற்றது. அந்த பிரபலமான வார்த்தையைப்படத் தலைப்பாக்கி சந்தானத்தை நாயகனாக்கி வெளிவந்துள்ள படம் டிக்கிலோனா.

ஹாக்கி வீரர் ஆக வேண்டும் என்று கனவில் இருப்பவர் நாயகன் சந்தானம். ஆனால் ஆசையை போல அதிர்ஷ்டம் வாய்ப்பதில்லை. சாதாரண ஈபி மேனாக வேலை பார்க்கிறார்.அவர் 2020 ஆம் ஆண்டு தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்.
ஆனால் திருமண வாழ்க்கை நிம்மதி இல்லை.விரக்தியில் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், 2027ஆம் ஆண்டு சந்தானத்திற்கு மின்சாரம் சரி செய்ய போன இடத்தில் டைம் மிஷின் ஒன்று கிடைக்கிறது. இதன் மூலம் 2020 ஆம் ஆண்டுக்குச் சென்று தன்னுடைய திருமணத்தைத் தடுத்து நிறுத்த முயல்கிறார். இறுதியில் தனது திருமணத்தைத் தடுத்து நிறுத்தினாரா? மீண்டும் 2027 ஆம் ஆண்டிற்கு திரும்பி வந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.டைம் மெஷின் பாதையை எடுத்துக்கொண்டு ஒரு ஜாலியான படம் எடுக்க முயன்றுள்ளார்கள்.

கதாநாயகன் சந்தானம் படம் முழுக்க தன்னுடைய வழக்கமான பாணியில் நக்கல் நையாண்டி கேலி கிண்டல் என நடித்திருக்கிறார். சில இடங்களில் இவருடைய டைமிங் காமெடி சிரிக்க வைத்தாலும் சில இடங்களில் நெளிய வைக்கிறது.

உடல் மெலிந்து இருப்பதால் தோற்றத்தில் சோனி சந்தானமாக இருக்கிறார்.

கதாநாயகிகளாக நடித்திருக்கும் அனகா, மற்றும் ஸ்ரின் காஞ்வாலா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிந்துவிடுகிறார் யோகிபாபு. ஆனந்த் ராஜ் மற்றும் முனிஸ்காந்த்தின் நடிப்பு, படத்திற்கு பெரிய பலம். இவர்களுடைய காமெடி திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஊக்குவிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து கவர்ந்திருக்கிறார்.

டைம் டிராவலை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குநர் கார்த்திக் யோகி. இதுபோன்ற கதைகளில் திரைக்கதையைக் கையாள்வது மிகவும் கடினம். ஒரு கட்டத்தில் பார்ப்பவர்களை குழப்பத்தில் ஆழ்த்தும் திரைக்கதை, கிளைமாக்ஸில் தெளிவடைகிறது. வெவ்வேறு டைம்லைன்களில் பயணிக்கும் ஒரு குழப்பமான கதையைத் தெளிவாகவும், காமெடியாகவும் சொன்னதற்கே அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகியைப் பாராட்டலாம்.ஏற்கனவே வெளியான ‘ஓ மை கடவுளே’ போன்ற படங்களின் சாயல்கள் அவ்வப்போது வந்து செல்கிறது.

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையும் அர்வியின் ஒளிப்பதிவும் படத்திற்குப் பலம்.

மொத்தத்தில் ‘டிக்கிலோனா’ ஜாலியாக விளையாடலாம்.