‘டிராமா’ விமர்சனம்

இப்படத்தை ஒரே ஷாட்டில் எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

இது ஒரே இரவில் நடக்கும் கதை.ஒரு காவல்நிலையத்தில் ஒருநாள் இரவு திடீரென மின்சாரம் நின்று போகிறது. அந்நேரம் அங்கு பணிபுரியும் தலைமைக்காவலர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.

அவரைக் கொன்றது யார்?எதற்காகக் கொன்றார்கள்? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்பதை விடிவதற்குள் கண்டுபிடிப்பதுதான் ‘டிராமா’ படத்தின் கதை.

படத்தில் நடிகர் கிஷோர் பிரதான வேடத்தை ஏற்று நடித்துள்ளார்.
விசாரணை அதிகாரியாக நடித்திருக்கிறார் அவர். காவல்துறை உயரதிகாரிகளுக்கு எடுத்துக்காட்டான தோற்றம், உடல் மொழி,நடிப்பு எனப் பதிகிறார்.

ஜெய்பாலா காவ்யாபெல்லு ஆகியோரின் காதல்காட்சிகள் இளமைத்துள்ளலாக அமைந்திருக்கின்றன.

சார்லி, வின்சென்ட் நகுல் உள்ளிட்ட காவல்துறையினருக்குள்ளான மோதல்கள், காவல்நிலைய நடைமுறைப் போக்கின் இயல்புகளை காட்சிகளின் மூலம் எடுத்துக்காட்டி இருக்கிறார்கள்.

ஒரு காவல் நிலையத்தில் ஒரே இரவில் நடக்கும் கதையை ஒரே சாட்டில் படமாக்கும் சவாலான விபரீத முயற்சியில் இறங்கி இருக்கிறார் இயக்குநர் அஜுகிழுமலா.இதனால் படத்தின் பெயரைப் போலவே நாடகத்தனம் சில காட்சிகளை தென்படுகின்றது .சில காட்சிகள் தொய்வையும் உணர முடிகிறது. இடையிடையில்
காதல், காமம், காவல்துறைப்பெண்களின் நிலை, திருநங்கைகள் ஆகியவற்றைக் காட்டிச் சமாளித்திருக்கிறார்கள்.

இறுதியில் சார்லி ஏன் கொலை செய்யப்படுகிறார் என்று அறிய வைக்கிற போது அதற்கான காரணம் அதிர வைக்கிறது.

நீட் தேர்வு அதனால் ஏற்படும் மரணங்கள் ஆகியனவற்றைக் கண்முன் கொண்டுவரும் இறுதிக்காட்சியும் அதை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் மரியா பிரின்ஸும் இது சாதாரண டிராமா இல்லை அதாவது பொழுதுபோக்கும் படம் அல்ல பழுது நீக்கும் முயற்சி என்று உணர வைக்கிறார்கள். பட உருவாக்கத்தில் படக் குழுவினரின் உழைப்பு தெரிகிறது. ஆனால் அதை நேர்த்தியாகச் செய்திருந்தால் படம் மேலும் அழுத்தமாக மாறி இருக்கும்.