‘டிரைவர் ஜமுனா ‘விமர்சனம்

கால் டாக்ஸி டிரைவராக இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் .அவரிடம் சாதாரண பயணியைப்போல புக் செய்த ஒரு ரவுடி கும்பல் காரில் ஏறிக்கொண்டு அவரை பயமுறுத்தி நினைத்த இடத்திற்கு போகச் சொல்லி மிரட்டுகிறது.

போகிறவர்கள் கொலை செய்கிறார்கள் .இப்படித் தங்கள் சட்டவிரோத காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டு ஐஸ்வர்யா ராஜேஷை மிரட்டுகிறார்கள்; துன்புறுத்துகிறார்கள்.

ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி மகனைக் கொன்று விட்டு அவர்கள் திரிய, போலீஸ் கண்காணித்து வலைவீசித் தேடுகிறது.

போலீசுக்கு பயந்து தப்பித்து விட முயற்சி செய்கிறார்கள்.பின் தொடர்ந்து வரும் போலீசுக்குப் பயந்து திசைமாற்றி ஓட்டச் சொல்கிறார்கள். அவரை மிரட்டிக் காரை இயக்குகிறார்கள். இதில் அவர்களிடமிருந்து அவர் எப்படித் தப்பிக்கப் போகிறார் என்ற கவலை வரும் போது வேறு ஒரு எதிர்பாராத திருப்பம் கதையில் வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ் தந்தை பாண்டியனும் ஒரு டாக்ஸி டிரைவர் தான். அவர் அரசியல் காரணங்களுக்காகக் கொலை செய்யப்படுகிறார். அதற்கும் இந்த பரபரப்பு சம்பவங்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதை முடிச்சு போட்டு மெல்ல அவை அவிழும் போது நமக்கு ஏற்படும் அதிர்ச்சிகள் தான் மீதிக்கதை.

இப்படத்தை கின்ஸ்லின் இயக்கி உள்ளார்.18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் எஸ் பி சௌத்ரி தயாரித்துள்ளார்.டிரைவர் ஜமுனாவாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.அரசியல்வாதி மரகத வேலாக வருகிறார் ஆடுகளம் நரேன்.அபிஷேக், மணிகண்டன் ஆகியோரும் நடித்துள்ளார்கள். கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார் . அனல் அரசு சண்டை காட்சிகள் அமைத்துள்ளார்.

கால் டாக்ஸி டிரைவர் ஜமுனாவாக ஐஸ்வர்யா ராஜேஷ் அற்புதமாக நடித்துள்ளார். சின்ன சின்ன அசைவுகள் மூலம் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவருக்கு பலதரப்பட்ட நடிப்பையும் வெளிப்படுத்த வாய்ப்புள்ள பாத்திரமாக அமைந்துள்ளது. படத்தின் மொத்த எடையையும் ஐஸ்வர்யா ராய் தான் தாங்கிப் பிடித்து தூக்கிச் சுமக்கிறார்.

இப்படிப்பட்ட வாய்ப்பு கொஞ்சம் காதல், கொஞ்சம் டூயட்,கொஞ்சம் கண்ணீர் என்று நடிக்கும் டெம்ப்ளேட் கதாநாயகி நடிகைகளுக்குக் கிடைப்பதில்லை .கதையின் நாயகியாகத் தன் பாதையை தேர்வு செய்துள்ளதால் தான் இப்படிப்பட்ட அரிய வாய்ப்பு ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கிடைக்கிறது.இப் பாதை அவருக்குத் திரையுலகில் நீண்ட காலம் பயணிக்கும் வாய்ப்பை அளிக்கும்.

மற்றபடி நல்லவர் போல் தெரியும் கெட்டவராக ஆடுகளம் நரேன் நடித்துள்ளார் .ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரும் நடித்துள்ளார்.

படத்தின் கதை பெரும்பாலும் கார் பயணத்திலேயே நிகழ்கிறது.பரபரப்பான சாலையில் விரைந்து ஓடும் கார் அது சம்பந்தப்பட்ட காட்சிகள் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நம்மைக் கட்டிப் போடுகின்றன.

ஓடி ஓடி கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்துள்ள ஒளிப்பதிவாளருக்குப் பாராட்டுக்கள். உடன் பயணிக்கும் ஜிப்ரான் பின்னணி இசைக்கும் பாராட்டு தரலாம்.

வழக்கமான கதைகளை தவிர்த்து சற்று வேறுவித கதையை அனைவரும் ரசிக்கும் விதத்தில் எடுத்துள்ள இயக்குநர் கின்ஸ்லின் நம்பிக்கை ஊட்டுகிறார் .காவல்துறையையும் அதன் அதிகாரத்தையும் வசதிகளையும் டம்மியாகச் சித்தரிக்கும் சின்ன சின்ன குறைகளைத் தவிர்த்து படத்தை ரசிக்கலாம்.

‘டிரைவர் ஜமுனா’ முழு நீள க்ரைம் த்ரில்லர்.