ட்ரெய்லரைப் பார்த்து படத்தை முடிவு செய்யக் கூடாது.! -கே. பாக்யராஜ்

bakyaraj-dharanisgrpட்ரெய்லர் பார்த்து சில காட்சிகளைப் பார்த்து  படத்தைப் பற்றி முடிவு செய்யக் கூடாது என்று ஒரு படவிழாவில்  கே. பாக்யராஜ்  பேசினார்.இதுபற்றிய விவரம் வருமாறு:

வி.ஜி. எஸ் நரேந்திரன் வழங்க  . மெலடி மூவீஸ்  தயாரிக்கும் படம் ‘தரணி’. குகன் சம்பந்தம் இயக்கியுள்ளார்.

ஆரி, மதுமிதா, குமரேசன், அஜய் கிருஷ்ணா, சாண்ட்ரா நடித்துள்ளனர்.பல படங்களில் இசைப்பணி நடத்துநராக பணியாற்றி அனுபவம் பெற்றுள்ள என்சோன், இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ‘தரணி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

கே. பாக்யராஜ் வெளியிட்டார். படக்குழுவினரும் வந்திருந்த திரையுலக முன்னணியினரும் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசும் போது ” இந்தப்படத்தின் இசையமைப்பாளர்  என்சோனை நான்  என் முதல் படத்திலிருந்து பார்த்து வருகிறேன்.  இந்தியாவிலேயே நான் பார்த்த ஒரே கண்டக்டர் இவர்தான். நிறைய கண்டக்டர்களை வீடியோவில் தான் பார்ப்பேன். மியூசிக் கண்டக்டர் என்பது மிகவும் கடினமான வேலை. இயக்குநர் இசையமைப்பாளர் வேலைக்கு உயிர் கொடுப்பதே இவர்கள்தான். அவ்வளவு கடினமான வேலை..இவரது வேலையை நான் வேடிக்கை பார்த்ததுண்டு..பாக்யராஜ் வரும்போதே குகனிடம்  கேட்டார் யாரிடம் வேலை பார்த்தீர்கள் என்று. ‘நான் யாரிடமும் வேலை பார்க்கவில்லை’ என்றார் பெருமையாக.  இந்த ‘தரணி’ தமிழ்சார்ந்த  நல்ல தமிழ்ப் படமாகத் தெரிகிறது.இங்கே வருடத்துக்கு 365 படங்கள் வருகின்றன.எல்லாப் படங்களும் ஓடவேண்டும் .’தரணி’ யும் ஓடவேண்டும்” என்றார்.

இசைத்தட்டை வெளியிட்டு கே.பாக்யராஜ் பேசினார். அவர் பேசும் போது “இங்கே மிஷ்கின்  பேசும்போது சின்ன சஸ்பென்ஸ் வைத்தார். இந்தியாவிலேயே நான் பார்த்த ஒரே கண்டக்டர் என்றதும் நான் ரஜினிகாந்தா என்று நினைத்தேன் இந்தப் படத்தின் இசையமைப்பாளரைப் பற்றிப் பலரும் பேசும்போது அவரது பணி அனுபவத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. கூடவே இருந்து அவரது  பணியைப் பார்த்தவர்கள் சொல்லும் போது  என்சோன் திறமையை அறிய முடிந்தது. அந்த அனுபவங்கள் அவர் இசையமைப்பாளராக பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்று நினைக்கிறேன். குகன் எடுத்த ட்ரெய்லர் சில காட்சிகளைப் பார்க்கும் போது இது எப்படிப்பட்ட படம் என்று புரியவில்லை. ட்ரெய்லர் பார்த்து சில காட்சிகளைப் பார்த்து படம் பற்றி முடிவு செய்யக் கூடாது.இந்தப் படத்தின் சில காட்சிகளைப் பார்க்கும் போது இது நாடகக்கலை பற்றிய கதையோ என நினைத்தேன்.ஆரி வரும் சில காட்சிகளைப் பார்க்கும் போது, வேறு மாதிரி தெரிந்தது. மணல் லாரிகள் வரும் காட்சிகளைப் பார்க்கும் போது அது வேறு மாதிரி தெரிந்தது. புரிந்து கொள்ள முடியவில்லை. பாடல் காட்சிகள் வேறுமாதிரி இருக்கின்றன.

ஆனால் வித்தியாசமான படமாக இருக்கும் என்று மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. ” என்று கூறி படக்குழுவினரை வாழ்த்தினார்.

பிரபு சாலமன் பேசும் போது ” இந்தப்படத்தின் பாடல்களின் வரிகள் மண்ணின் மணம் பேசும்படி கலாச்சாரம் பேசும்படி இருக்கின்றன.இந்தப்படம்  கலைசார்ந்த படமாகத் தெரிகிறது.. சரியாக எதையும் சொல்ல முடியும் என்று காட்டுகிற படமாக தெரிகிறது.” . என்றார்.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ”  என்சோன் திறமையான கண்டக்டர். இதில்
இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.இவர்  என்னிடம் மட்டுமல்ல பலரிடமும் வேலை பார்த்தவர். நல்ல அனுபவம் உள்ளவர். இதில் ஆறுபாடல்களுக்கு அழகான இசை கொடுத்திருக்கிறார். ” என்றார்.

படத்தின் இயக்குநர் குகன் சம்பந்தம் படம் பற்றிய பேசும் போது ” வாழ்க்கையில் சரியான முடிவு எடுக்கும் தருணம் முக்கியமானது .ஆனால் ஒரு கட்டத்தில் முடிவெடுத்துதான் ஆக வேண்டும் அந்த முடிவு எங்கு கொண்டு சேர்க்கும் என்று தெரியாது. இதைப் பேசும் படம்தான் ‘தரணி’ “என்றார்.

“இது சராசரியான படமல்ல. முக்கியமான படம். மனித வாழ்க்கை புதிர்களும் மர்மங்களும் நிறைந்தது உணவுக்கு வேட்டையாடி உண்டு உறங்குவது மிருக வாழ்க்கை. மனித வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டது பொருளாதாரம், அரசியல் சிக்கல்கள் நிறைந்தது. நாம் நினைத்தது நடப்பதில்லை. இன்று வெற்றி அடைபவன் அடுத்த சுற்றில் தோல்வி அடைகிறான் வெற்றிக்குப்பின் அவன் எண்ணம் எப்படி மாறுகிறது எப்படி முடிவு எடுக்கிறான் என்பதே படம். இவ்வளவு பெரிய தத்துவத்தை அழகாகச் சொல்லியிருக்கிறார். இயக்குநர். “என்றார் நாசர்.

” இசையமைப்பாளர் என்சோன் எனக்குத் தெரிந்தவர் இசையும் தெரிந்தவர். அன்று முதல் அண்மையில் முடித்த ‘கயல்’ படம் வரை என்னுடன் பணியாற்றியவர் ” என்றார்  இசையமைப்பாளர் டி.இமான்.

படம் பற்றி கவிஞர்கள் பழனிபாரதி, முத்துலிங்கம், இசையமைப்பாளர்கள் சத்யா, ஜி.வி.பிரகாஷ், கே. நடிகர்கள் சிம்பு, ஆரி, குமரேசன், அஜய் கிருஷ்ணா, நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன் ,சாண்ட்ரா, மதுமிதா ஆகியோரும் பேசினார்கள்.