‘தங்கரதம் ‘ விமர்சனம்

tempo2மார்க்கெட்டுக்கு காய்கறி ஏற்றி வரும் ஒரு டெம்போ வேனின் பெயர் தான் தங்கரதம். அப்படிப்பட்ட ஒரு டெம்போவின் பின்னணியை வைத்துக்கொண்டு  கதை பின்னியிருக்கிறார்கள். அதுவும் ஒரு காதல் கதை.

கதை எப்படி?

காதலைச்சொல்ல ஆயிரம் படங்கள் வருகிற நிலையில் காதலையும் காதல் தோல்வியையும் சொல்லியிருக்கும் படம்தான் தங்கரதம் எனலாம் .

தங்கரதம் என்கிற டெம்போ வேனில் காய்கறி ஏற்றி வருபவர் தான் நாயகன்  வெற்றி.  அதே ஊரில் உள்ள மற்றொரு டெம்போ வேனான பரமன் வேனின் , முதலாளி சவுந்தரராஜா. இரிவரும்  தொழில் ரீதியாக அடிக்கடி மோதிக்கொள்கிறார்கள்.

இதற்கிடையே பரமனின் தங்கை நாயகி அதிதி கிருஷ்ணாவுக்கும், வெற்றிக்கும் இடையே காதல் . ஒரு கட்டத்தில்  டெம்போ வேன் மோதல் முற்றிப்போய், சவுந்தரராஜா வெற்றியை கொலை செய்ய முயல்கிறார். சவுந்தரராஜாவைச் சமாதானப்படுத்தும் முயற்சியாக அவரது தங்கையை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க, தங்கரதம் டெம்போவின் முதலாளி நரேன் தீர்மானிக்கிறார்.

வெற்றியின் காதல் விவகாரம் தெரியாமல், அதிதியை தனது மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கும் வேலைகளில் நரேன் இறங்குகிறார். அதிதியோ வெற்றியை திருமணம் செய்யத் தீவிரம் காட்டுகிறார். ஒரு புறம் தன்னை மகனாக பார்க்கும் முதலாளி, மறுபுறம் தனக்காக வாழும் காதலி, என்ற இக்கட்டான சூழலுக்கு தள்ளப்படும் நாயகன்,தன்  காதலில் ஜெயித்தாரா இல்லையா என்பதே  க்ளைமாக்ஸ்.

காதலை நாகரிகமாக கையாண்டுள்ள இப்படத்தில் புதிதாக ஏதும் இல்லை என்றாலும், சொல்ல வேண்டியதை தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு சுற்றுப்புறக் கிராமத்தில் இருந்து பலர் காய்கறிகளை ஏற்றி வருகிறார்கள் என்பதே ஒரு நல்ல பின்புலமாகியுள்ளது.
tempo1நாயகனாக நடித்துள்ள புதுமுகம் வெற்றிக்கு கிராமத்து முகம் இல்லை என்றாலும், தன்னால் முடிந்தவரை திண்டுக்கல் மண்ணின்  மனிதராக தன்னைக் காட்டிக் கொண்டிருக்கிறார். தோற்றம், உடல் மொழி போன்றவற்றில் தப்பிக்கிறார்.

கதை, நாயகியைத்தான் மையப்படுத்தியது  என்றாலும், அவருக்கு நடிக்க வாய்ப்பு  குறைவு தான். அந்த குறைந்த வாய்ப்பிலும் நிறைவான பணியை செய்திருக்கிறார் அதிதி கிருஷ்ணா.

பரமன் என்ற கதாபாத்திரத்தில் நாயகியின் அண்ணனாக நடித்துள்ள சவுந்தரராஜா  தன் வேலையைச் சரியாக செய்திருக்கிறார். தங்கரதம் டெம்போ வேனின் முதலாளியாக வரும் ஆடுகளம் நரேன், தனது நடிப்பால் கவர்கிறார்  வழக்கம் போல.

இசையமைப்பாளர் டோனி பிரிட்டோவின் பாடல்களும், பின்னணி இசையும் திரைக்கதைக்கு ஏற்பட பயணித்திருக்கிறது.

எதிர்ப்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களை சாமர்த்தியமாக ஏமாற்றி, திரைக்கதையை வேறு திசையில் பயணிக்க வைத்துள்ள இயக்குநர் க்ளைமாக்ஸை கையாண்ட விதமும் நேர்த்தி.

மொத்தத்தில், இந்த ‘தங்கரதம்’ காதலை மட்டுமல்ல, காதல் தோல்வியையும் தெளிவாக கூறியுள்ள படம் எனலாம்.