தங்க மீன்களுக்கு மேலும் ஒரு விருது:புதுவை அரசு வழங்கியது

 

py-award-thangameenglராம் இயக்கத்தில் கடந்த ஆண்டு  வெளியாகி பல விருதுகளைப் பெற்ற படம் ‘தங்க மீன்கள்’. இதில் ராம், சாதனா, செல்லி போன்றோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

தந்தை மகளுக்கு இடையான பாசத்தை அழகான திரைக்கதை அமைத்து உருவாக்கியிருந்தார் ராம். ஏற்கனவே 3 தேசிய விருதுகளை பெற்ற இப்படம், தற்போது புதுவை திரைப்படவிழாவில் சிறந்த படத்திற்கான விருதையும் பெற்றுள்ளது.

புதுச்சேரி செய்தி விளம்பரத்துறை அமைச்சகம், மத்திய அரசின் திரைப்பட விழா இயக்குநரகம், நவதர்சன் திரைப்பட கழகம் ஆகியவை இணைந்து 30-வது இந்திய திரைப்பட விழாவை நடத்துகிறது. மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படங்களில் இருந்து ஒரு படத்தை தேர்ந்தெடுத்து புதுவை அரசு விருது வழங்குவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டும் ராம் இயக்கிய தங்க மீன்கள் படத்திற்கு விருது வழங்கியுள்ளனர். இந்த விருதை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வழங்க இயக்குநர் ராம் மற்றும் படத்தை வெளியிட்ட ஜேஎஸ்கே சதீசும் பெற்றுக்கொண்டனர்.