தட்டிக் கொடுத்த விக்ரம் : நெகிழும் நடிகர் மாஸ் ரவி!

தான் ‘ஸ்கெட்ச் ‘படத்தில் நடித்த போது நடிகர் விக்ரம் தட்டிக் கொடுத்ததாக நடிகர் மாஸ் ரவி நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

விக்ரம் நடித்து பொங்கலுக்கு வந்துள்ள படம் ‘ஸ்கெட்ச்.’ இதில் விக்ரமுடன் மோதும் எதிர் தரப்பு அணியில் ஆர்.கே.சுரேஷின் தம்பியாக நடித்துள்ளவர் நடிகர் மாஸ் ரவி.

ஒரு பெரிய நடிகரான விக்ரம் படத்தில் நடித்ததில் தன் மேல் விளம்பர வெளிச்சம் விழுந்துள்ளதாகப் பரவசத்துடன் கூறுகிறார் மாஸ் ரவி.

தான் கடந்து வந்த பாதை பற்றி அவர் கூறும் போது, ” எனக்குச் சின்ன வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் .
டி வி யில் கூட ஒரு நாளைக்கு நாலைந்து படம் பார்க்கிற அளவுக்கு மோகம். எங்கள் ஊரிலிருந்து சினிமா தியேட்டருக்கு ஏழெட்டு கி.மீ. போக வேண்டும்.. நான் அந்த தூரத்தை நடந்தே செல்வேன். அப்படி நடந்து சென்றே பல படங்கள் பார்த்திருக்கிறேன்.

பள்ளியில் எக்ஸாம் இருந்தால் கூட படம் பார்க்காமல் இருக்க மாட்டேன். பள்ளி நாட்களில் சிவாஜி நடித்த “ஜிஞ்ஜினுக்கான்” பாட்டுக்கு நடனம் ஆடினேன். அதற்கு முதல் பரிசு கிடைத்தது. விருதும் கொடுத்தார்கள், மேடையேற பயப்படுகிற எனக்கு அது ஊக்கமாக இருந்தது.

எனக்குள் சினிமா ஆர்வம் அதிகமாகவே, சென்னை வந்தேன். பலவிதமான இடங்களில் பலவிதமான வேலைகள் பார்த்தேன். எங்கு ஷூட்டிங் நடந்தாலும் வேடிக்கை பார்க்க ஓடி விடுவேன். அது டிவி சீரிய லோ சினிமாவோ எதுவாக இருந்தாலும் போய்ப் பார்ப்பேன். பிறகு,சினிமா வாய்ப்பு தேட ஆரம்பித்தேன்.

எனக்கு உடம்பை கட்டாக வைத்துக் கொள்ளப் பிடிக்கும். எனவே ஜிம் போய் உடற்பயிற்சி செய்தேன். அங்கு நிறைய சினிமாக்காரர்கள் வருவார்கள். அந்தப் பழக்கத்தில் வாய்ப்பு தேடலாம் என்பதும் ஒரு காரணம். நிறைய பேர் வந்தார்கள். பழக்கமும் ஆனார்கள். ஆனாலும் பெரிதாக வாய்ப்பு ஒன்றும் வரவில்லை. பிறகு கம்பெனி கம்பெனியாக ஏறி வாய்ப்பு கேட்டேன். தினமும் 25 கம்பெனியாவது போவேன். இப்படி 1000 கம்பெனியாவது ஏறி வாய்ப்பு கேட்டிருப்பேன். சிறு சிறு காட்சிகளில் வந்த எனக்கு ‘மாஸ் ‘படத்தில் அடையாளம் தெரிகிற மாதிரி சில காட்சிகளில் நடிக்க வைத்தார் வெங்கட் பிரபு சார்.

என்னை நம்பி பெரிய ரோல் கொடுத்தவர் சுப்ரமணிய சிவா சார் தான். அவர் ‘உலோகம் ‘என்கிற படத்தில் எனக்குப் பெரிய கேரக்டர் கொடுத்தார். அது ஜெயமோகனின் கதை. இலங்கைப் பின்னணியிலான கதை. படம் வந்தால் எனக்குப் பரவலான பெயர் கிடைக்கும். சுப்ரமணிய சிவா சாருக்கு மிக பெரிய நன்றி

வாய்ப்புக்குப் போராடுவதை விட நமக்கு நாமே ஏதாவது செய்து திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று ‘தாகம்’ என்றொரு குறும்படம் எடுத்தேன். பலரும் பாராட்டினார்கள். பிறகு ‘ஒன் லைக் ஒன் கமெண்ட்’ என்றொரு குறும்படம் எடுத்தேன். அதைத் திரையிட்ட போது சந்தானம் , சுப்ரமண்ய சிவா , சரவண சுப்பையா போன்று திரையுலக விஐபிக்கள் பலரும் வந்தார்கள். பாராட்டினார்கள் . அதற்கு விஜய் சந்தர் சாரை அழைத்து இருந்தேன். அவரால் வர முடியவில்லை. பிறகு அவரைச் சந்தித்த போது அதைப் பார்த்து விட்டுப் பாராட்டிப் பேசினார். வாழ்த்தி ஊக்கமாகச் சில வார்த்தைகள் சொன்னார். அவர் தன் இயக்கத்தில் அடுத்த பட வாய்ப்பான ‘ஸ்கெட்சி ‘ல் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். ”
என்றவர் ‘ஸ்கெட்ச்’ படத்தில் நடித்த அனுபவம் பற்றிப் பேசினார்.

” நான் 12 ஆண்டுகள் சினிமாவில் போராடி வருகிறேன். இந்திய அளவில் சிறந்த நடிகராக விருது பெற்ற விக்ரம் சாருடன் நடிக்கப் போகிறோம் என்பதை நினைத்துப் பெருமையாக இருந்தது. அப்படிப்பட்ட வாய்ப்பை வழங்கிய இயக்குநர் விஜய் சந்தர் சாரை நான் என்றும் மறக்க மாட்டேன். பத்து படங்களில் நடித்த அனுபவத்தையும் புகழையும் அந்த ஒரு படத்தின் மூலம் பெற்றேன். காரணம் இயக்குநர் தான். இன்றைய இளைய தலைமுறையை நடிப்பின் மூலம் கவர்ந்திருக்கும் விக்ரம் சார் பெரிய நடிகர் மட்டுமல்ல பெருந்தன்மைக்கும் சொந்தக்காரர் என்பதை அவருடன் நடித்த போது நேரில் பார்த்த போது உணர்ந்து கொண்டேன்.

என் கேரக்டருக்கு யாரோ பெரிய நடிகரைக் கூட போட்டிருக்கலாம். என்னைப் போல ஒரு சிறிய நடிகனுடன் அவர் நடிக்கச் சம்மதித்தது பெரிய விஷயம். அது மட்டுமல்ல அவருடன் நான் சண்டைக் காட்சிகளில் மோதும் காட்சிகளில் நடிக்க சம்மதித்தது அவர் மனசால் எவ்வளவு உயர்ந்தவர் என்பதைக் காட்டியது. உடன் நடிக்கும் போதும் சகஜமாகப் பேசினார். ஒரு தம்பியைப் போல அன்பு காட்டி ஊக்கம் கொடுத்தார் .

படப்பிடிப்பின் போது எனக்குக் காலில் அடிபட்டு இருந்தது அதை மறைத்தபடி நடித்தேன். நிறைய டேக் வாங்கினேன் – ஏன் என்று விசாரித்தார் காலில் அடிபட்டு இருந்ததைச் சொன்னேன். ஏன் என்னிடம் இதை முன்னாடியே சொல்லவில்லை? என்றார். அப்போது தன் காலைக் காட்டினார். அதிலும் பேண்டேஜ் போட்டிருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘ஸ்கெட் ச்’ படத்தைப் பொறுத்தவரை அது எனக்கு மறக்க முடியாத அனுபவம். தாணு சாரின் மிகப் பெரிய கம்பெனியில் பெரிய ஹீரோவுடன் நான் நடித்து பொங்கல் படமாக வெளியாகியிருப்பது எனக்கு பெருமை யான விஷயம். ஏதோ கனவு போல நம்ப முடியாத சந்தோஷத்தில் இருக்கிறேன். ” என்கிறார் மாஸ் ரவி.

இவர் நடித்து ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படங்கள் வெளியாகவுள்ளன.

இப்போது சுப்ரமண்ய சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனியுடன் ‘வெள்ளையானை ‘ படம் , திருமுருகன் இயக்கத்தில் ஒரு படம் என நடித்து வரும் மாஸ் ரவி , மேலும் 3 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.மாஸ் ரவி டைரக்ஷனில் அன்லாக் குறும்படம் விரைவில் வெளியாக உள்ளது இக்குறும்படத்தை பார்த்த பிரபலங்கள் பாராட்டி உள்ளனர் மாஸ் ரவிக்கு கூடுதல் மகிழ்ச்சி