தப்பாக பேசினாலும் தமிழில் தான் பேசுவேன் : நடிகர் அல்லு அர்ஜுன் !

img_9775தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமாக 10-வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும்  ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 12வது தயாரிப்பான அல்லு அர்ஜுன் நடிக்கும் இயக்குநர் லிங்குசாமி இயக்கும் திரைப்படத்தின் அறிமுக பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது .
இதில் நடிகர் அல்லு அர்ஜுன் , தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா , இயக்குநர் லிங்குசாமி , நடிகர் சிவகுமார் , நடிகர் அல்லு அர்ஜுனின் சகோதரர் அல்லு சிரிஷ் , எழுத்தாளர் கவிஞர் பிருந்தா சாரதி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் நடிகர் சிவகுமார் பேசியது ,” தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கார்த்தியுடன் படித்தவர் , அவர் இன்று மிகப்பெரிய தயாரிப்பாளராக இருக்கிறார். அவர் சூர்யா , கார்த்தி ஆகியோரை வைத்து பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார். அவர் இவ்வளவு பெரிய தயாரிப்பாளராகி சூர்யா கார்த்தி ஆகியோரை வைத்து திரைப்படத்தை தயாரிப்பார் என்று நான் நினைத்ததில்லை. இப்போது அவரை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
சூர்யா , கார்த்தி ஆகியோரை வைத்து படங்களை தயாரித்த அவர் தற்போது அல்லு அர்ஜுனை வைத்து தமிழ் தெலுங்கில் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார். தமிழ் சினிமாவுக்கும் , தெலுங்கு சினிமாவுக்கும் பல வருடங்களாக நல்ல தொடர்பு இருந்து வருகிறது. எம். ஜி .ஆர் , சிவாஜி ஆகியோர் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய அதே காலகட்டத்தில் என்.டி.ஆர் , நாகேஷ்வர ராவ் ஆகியோரும் இங்கே மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இங்கும் வெற்றி படங்களை கொடுத்து வந்தனர். அல்லு அர்ஜுன் மிகவும் அழகாக உள்ளார் , அவருக்கு கண் , காது மூக்கு என அனைத்தும் அழகாக உள்ளது. நல்ல வேளை அவர் 1960ல் நடிக்க வரவில்லை அப்படி வந்திருந்தால் எனக்கு போட்டியாக வந்திருப்பார். முருகர் வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று  அக்காலத்தில் என்னை  தேர்வு செய்தனர். இவர் அக்காலத்தில் இருந்திருந்தால் இவரை தான் தேர்ந்தெடுத்து இருப்பார்கள். இப்படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார் நடிகர் சிவகுமார்.
img_9693நடிகர் அல்லு அர்ஜுன் பேசியது ,
”நான் பிறந்து வளர்ந்து படித்தது எல்லாம் சென்னையில் தான் , 2௦ வருடமாக இங்கே தான் இருந்தேன். எனக்கு சொந்த ஊர் சென்னை தான். நான் மேடைக்கு வந்து தமிழில் தான் பேசவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். தப்பாக பேசினாலும் தமிழில் தான் பேசுவேன். நான் தெலுங்கில் நடித்த  எந்த ஒரு படத்தையும் தமிழில் டப் செய்து ரீலீஸ் செய்யவில்லை. அதற்க்கு காரணம் நான் பிறந்து வளர்ந்த சொந்த மண்ணில் நேரடி தமிழ் படம் நடிக்க வேண்டும் என்பது தான். எந்த மண்ணில் ஜெயித்தாலும் என்னுடைய சொந்த மண்ணில் ஜெயித்தது போல் வராது. நான் இதற்காக பல நாட்களாக காத்திருந்தேன்”என்றார் அல்லு அர்ஜுன்.
இயக்குநர் லிங்குசாமி பேசியது ,
”நான் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளேன் என்று என்னுடைய கிராமத்தில்  உள்ளவர்களிடம் சொன்னபோது அவர்களில் சிலர் என்னிடம் ” நாங்கள் அல்லு அர்ஜுனின் நடனத்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் ” என்றனர். அவருக்கு தமிழிலிலும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரையும் கவரும் வகையில் நான் அல்லு அர்ஜுனை வைத்து நான்  தமிழில் இயக்கும் நேரடி தமிழ் படம் இருக்கும். நான் சண்ட கோழி திரைப்படத்தை முடித்த பின்னர் இப்படத்தை துவங்கவுள்ளேன்” என்றார் இயக்குநர் லிங்குசாமி.