‘தப்பாட்டம்’ விமர்சனம்

கணவன் மனைவியிடையே வரும் சந்தேகக்கோடு அது சந்தோஷக்கேடு  என்பதுதான் கதை.சந்தேகம் தப்பாட்டமாக மாறி சம்சார சங்கீதம் ஸ்ருதி பிசகுவதே கதைப்போக்கு.

அறிமுக நடிகர் துரை சுதாகர் நாயகனாகவும், அறிமுகம்  டோனா ரொசாரியா நாயகியாகவும் நடித்துள்ளனர்.மேலும், கோவை ஜெயக்குமார், பேனா மணி, கூத்துப் பட்டறை துளசி, பேராசிரியை லட்சுமி, ரூபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நாயகன் பறையடிக்கும் -அதாவது  தப்படிக்கும் தொழில்  கலைஞன்.  அவனுடைய அக்காள் மகளை நேசிக்கிறான். 

திடீரென்று நாயகனுக்கும், நாயகிக்கும் திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள்.

அந்த ஊர்ப் பண்ணையாரின் மகன் ஒரு பெண்பித்தன். பார்க்கிற பெண்களையெல்லாம் தன் வலையில் சிக்க வைத்து காரியம் முடிந்தும்  பஞ்சாயத்திதில்  கட்டும் சிறு அபராதத்துடன் கதையை முடிப்பவன்.

இதே  பண்ணையார்  மகன்நாயகனின் அக்கா மகளையும் ஒரு நாள் கையைப் பிடித்திழுத்து அடிவாங்கிக் கொண்டு சத்தமின்றி போய் விடுகிறான். இதில் ஏமாற்றமடைந்த அவன்  சாராயக் கடைக்கு வந்த இடத்தில் அவளை தான் ஏற்கெனவே அடைந்து விட்டதாகச் சொல்கிறான். இதனைக் கேட்டு ஆவேசப்படும் நாயகன் அவனுடன் மோதுகிறான்.

ஆனால் அங்கே நாயகியோ கர்ப்பமாக இருக்கிறாள். தன் மனைவியின் கர்ப்பத்துக்குத் தான் காரணம் இல்லை என்று நினைக்கிறான் கணவன். இதனால் மனைவியைப் பிரிகிறான்.. அக்காவும், அம்மாவும் சொல்லியும் கேட்காமல் சதா குடியிலேயே மிதக்கிறான்.

நாயகியோ கணவரின் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறாள்.

சந்தேக  நாயகன் திருந்தி திரும்பி வந்தானா இல்லையா..? என்பதுதான் படத்தின் திரைக்கதை.

படத்தின்  செலவைக் கருத்தில் கொண்டுதானோ  என்னவோ  படம் 1980-களில் நடப்பதாக காட்டியிருக்கிறார்கள்.

 தென்னந்தோப்புக்குள் சாராயக் கடை நடப்பதாக காட்சி  எல்லாம் உண்டு.

நடித்தவர்கள் புதுமுகங்கள் என்பதால் தெரிந்ததை செய்துள்ளார்கள்.நடிப்பைப் பற்றிப்பெரிதாக  சொல்ல  ஒன்றுமில்லை. அதிலும் ப்ப்ளிக் ஸ்டார் என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்ளளும்துரை சுதாகர் தன்னால் எந்த அளவுக்கு முடியுமோ அதைச் செய்திருக்கிறார்.

என் ராசாவின் மனசிலே ராஜ்கிரணை மனதில் நினைத்துக் கொண்டு  கதை பண்ணியிருக்கிறார்கள். காமெடி என்கிற பெயரில் கடித்து துப்பியிருக்கிறார்கள்

1980-களில் நடக்கும் கதையை இப்போது ஏன் எடுக்க வேண்டும் என்பதற்கான நியாயமான ஒரு பின்னணியைக்கூட படத்தில் காட்டவில்லை. ஆனால் ஒன்று புரிகிறது படமான விதம்  தரம் எண்பதுகளை நினைவுபடுத்துகிறது.பாடல்களை ஒரு முறை கேட்கலாம் என்கிற அளவுக்கு இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர். இசை – பழநி பாலு, ஒளிப்பதிவு – ராஜன்.

‘மனைவியை சந்தேகப்படாதே’ என்பது நல்ல கருத்துதான்.ஆனால் அதைச்சொல்லியிருக்கும் விதத்தில் நமக்கு ஆயிரம் சந்தேகங்கள் வருகின்றன.

 படம் முழுக்க நம்மை சோதித்து விட்டு ‘உண்மையை ஆராய்ந்து தெரிந்து கொள்’ என்பதை மட்டும் கிளைமாக்ஸில் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

பாவம் சினிமாவின் வீச்சு தெரியாமல் வீரியம் அறியாமல் கிரிக்கெட் மைதானத்தில் கபடி ஆடுவதைப்போல தப்பாட்டம் ஆடியிருக்கிறார்கள்.