தமிழக விவசாயிகள் பற்றிய ஆவணப்படத்துக்கு டெல்லி முதல்வர் தந்த அங்கீகாரம்!

 
 பல ஆண்டுகளாக இழுத்து வந்த காவிரி நதி நீர் பங்கீடு பிரச்னையில் ‘ஆறு வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு விட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் சரியான விகிதத்தில் தண்ணீர் தரவேண்டுமே என்பதால் கர்நாடகா மாநிலம் அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்நிலையில் காவிரி பொய்த்ததால் தமிழ்நாட்டில் விவசாயம் சிதைந்து விவசாயிகள் பலியானதை உயிர்ப்போடும் உருக்கத்தோடும் எடுத்து சொன்ன கொலை விளையும் நிலம் ஆவணப்படம் நேற்று யுட்யூபில் மக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டது.
 
கொலை விளையும் நிலம் படத்தை இயக்கியிருக்கும் பத்திரிகையாளர் க.ராஜீவ் காந்தி முன்பே ‘இது விழாவுக்காகவோ விருதுக்காகவோ எடுக்கப்பட்ட படம் அல்ல. எனவே பொத்தி வைக்க மாட்டேன். மக்கள் பார்வைக்கு பொதுவெளியில் வெளியிடுவேன்’ என்று சொல்லியிருந்தார். அதனை நிகழ்த்திக் காட்டும் நிகழ்வு நேற்று 7.3.18 அன்று பிரசாத் லேபில் நடந்தது.
 
காங்கிரஸ் கமிட்டியின் தமிழக தலைவர் க. திருநாவுக்கரசர், அற்புதம் அம்மாள், போராளி வளர்மதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலபாரதி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்வப்பெருந்தகை, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி ஆர் பாண்டியன், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சுதா, நடிகர் அபி சரவணன், இயக்குநர் சுப்ரமணிய சிவா ஆகியோர் தங்களது கொள்கை வேறுபாடுகளை மறந்து விவசாயிகளுக்காக ஒரே மேடையில் ஏறினார்கள். 
 
ஒரு திரைப்படம் பார்த்த உணர்வை தந்தது என்று பாராட்டிய அனைவரும் தாங்கள் வெகுகாலம் கழித்து ஒரு படத்தை பார்த்து கண்கலங்கியது இப்போது தான் என்று பகிர்ந்துகொண்டனர். இறுதியாக ஏற்புரை வழங்கிய க.ராஜீவ் காந்தி ஒரு ஆவணப்படம் எடுப்பதற்கும் அதனை கொண்டு சேர்ப்பதற்கும் தமிழ்நாட்டில் உள்ள சிரமங்களை எடுத்து சொன்னதோடு எதிர்காலத்தில் தான் எந்த பணியில் இருந்தாலும் ஆண்டுக்கு ஒரு ஆவணப்படம் எடுப்பேன் என்று உறுதி தந்தார். 
 
படம் வெளிடப்பட்ட சில நிமிடங்களிலேயே டெல்லி முதல் அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கொலை விளையும் நிலம் ஆவணப்படத்தை பகிர்ந்துள்ளார். படத்தை பகிர்ந்ததோடு ‘இந்த ஆவணப்படம் தமிழக விவசாயம் மற்றும் விவசாயிகளின் தற்போதைய நிலையை தெளிவாக விளக்குகிறது’ என்று பாராட்டியுள்ளார். நேற்று வெளியிடப்பட்ட கொலை விளையும் நிலம் ஆவணப்படம் தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் இந்திய நாட்டின் அரசியலிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விழாவில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் க.திருநாவுக்கரசர் ஆற்றிய உரை உங்கள் பார்வைக்கு….
 
அன்புத்தம்பி ராஜீவ்காந்தி மிகுந்த சிரமப்பட்டு கிராமங்களுக்கு சென்று செயற்கரிய செயலை செய்து இந்த ஐம்பது நிமிட குறும்படத்தை உருவாக்கியுள்ளார்.
 
இது அவரின் முதல் படம் என்றார்கள்…பொதுவாகவே முதல்படம் என்றால்  இன்றையகால கட்டத்தில் கமர்ஷியலாக ஹிட் கொடுத்து பெயரும் புகழும் எடுத்து பணம் சம்பாதிக்கவே பிரியப்படுவார்கள். நானும் திரைப்படங்களை எடுத்திருக்கிறேன் முதல்படம் கொஞ்சம் லாபம் கொடுத்தது அடுத்தபடம் நஷ்டம் அதன் பிறகு அந்தப்பக்கமே நான் போகவில்லை.
 
தம்பி ராஜீவ்காந்தி தன் முதல்படமாக இதை எடுத்திருக்கிறார் அவர் நினைத்திருந்தால் நாலு பைட் ரெண்டு சண்டை கொஞ்சம் காமடி டிராக் என்று எடுத்து காலம் தள்ளியிருக்க முடியும்.
 
அதுவும் மிகச்சிறப்பான தொழிற்நுட்ப கலைஞர்கள் லாங் ஷாட் ஏரியல்ஷாட் என பத்திற்கும் மேற்பட்ட கேமராக்களை வைத்து எடுத்தால் மட்டுமே சிறப்பாக வரும் காட்சிகளை இவர்கள் எத்தனை கேமராக்கள் வைத்து எடுத்தார்கள் என தெரியவில்லை நல்ல உழைப்பு தெரிகிறது.
 
மரணமடைந்த விவசாயிகளின் வீடுகளுக்கே சென்று அவர்களின் யதார்த்தப் பேச்சை நாடகத்தனமில்லாமல் அவர்களின் மொழியிலேயே, ரிகர்சல்பார்க்கும் ஆர்ட்டிபீஷியல் தனமில்லாமல் பதிவு செய்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது. பார்ப்பவர்கள் எவராலும் கண்கலங்காமல் கண்ணீர் விடாமல் இருக்கவே முடியாது
கல் நெஞ்சுக்காரர்களைக் கூட ஒருகணம் சிந்திக்கவைக்கும் சிறப்பான படைப்பு இது.
 
விவசாயப் பெருமக்களின் அவஸ்தையை அவர்களின் துன்பத்தை துயரத்தை வேதனையை அருகிலிருந்து அனுபவித்தவன் நான். இதே டெல்டா பகுதியில் காவிரியின் கடைபகுதியை சேர்ந்தவன் நான். பேராவூரனிக்கும் அறந்தாங்கிக்கும் இடைப்பட்ட இடத்தில் உள்ள நாகுடி என்ற கிராமத்தில் எனக்கும் இருபத்திஐந்து ஏக்கர் இருக்கிறது. 
என்தம்பி அங்கு விவசாயம் பார்க்கிறார்.நிலத்திற்கு நடுவே இரண்டு கிணறுகள் இருந்தும் வரவேண்டிய வெள்ளாமையில் பாதி எடுப்பதற்கே படாத பாடு படவேண்டிய சூழல். 
எங்கள் நிலத்தின் அருகில் சுற்றுவட்டாரத்தில் எல்லோருமே சிறுகுறு விவசாயிகள் அவர்களின் வயல்கள் எல்லாம் வறண்டுபோய் பாலம் பாலமாய் பிளந்து காய்ந்து கட்டாந்தரையாக பலவருடங்களாக காய்ந்து கிடக்கின்றன அவர்களின் அவஸ்தையை  புரிந்தவன் நான்.
 
இன்றைக்கு நம்மை ஆளும் மத்திய அரசு நயவஞ்சகமாக நரித்தந்திரத்தோடு விவசாயிகளை தமிழக மக்களை  ஏமாற்றிவருவதை கண்கூடாக பார்க்கிறோம். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிலே இறுதித்தீர்ப்பிலே ஆறு வாரத்திற்குள் காவிரி மேலாண் வாரியம் அமைக்கவேண்டும் என்றார்கள். இதோ மூன்று வாரங்கள் ஓடிவிட்டது.இப்போதுதான் செயலாளர்களுக்கான மீட்டிங்கையே அந்தத்துறை அமைச்சர் கூட்டப்போகிறார்.
 
செயலாளர்கள் கூடி எந்த முடிவும் எடுக்கமுடியாது இது முழுக்க முழுக்க தமிழர்களை ஏமாற்றும் வேலை…
 
காவிரிப்பிரச்சனையை உச்சநீதிமன்ற தீர்ப்பை மேலாண்மை வாரியம் அமைக்கும் வேலையை நீர்த்துப்போகச் செய்வதற்கான தள்ளிப்போடுவதற்கான காலம் கடத்துவதற்கான முயற்சி என குற்றம் சாட்டுகிறேன். தமிழகத்திலே அனைத்துக்கட்சிகளும் பதினைந்து ஆண்டுகளுக்குப்பிறகு காவிரிப்பிரச்சனைக்காக ஒன்று சேர்ந்து பாஜக உள்ளிட்ட தலைவர்களும் விவசாய சங்கத்தலைவர்களும் கலந்து கொண்டு பிரதமரை நேரில் சந்தித்து காவிரி மேலான்வாரியம் அமைக்க வற்புறுத்துவோம் என தீர்மானம் நிறைவேற்றி நேரம் கேட்டால் தர மறுக்கிறார் இந்தப்பிரதமர்.
 
கலைஞரோ எம்ஜியாரோ ஜெயலலிதாவோ இருந்திருந்தால் மோடிக்கு இந்த அலட்சியத்தனம் குருட்டு தைரியம் வந்திருக்குமா?
 
இந்தப் படத்தில் டீமானிடேசஷனில் இறந்த விவசாயியின் கதை வருகிறது கண்கள் குளமாகும் காட்சிகள் அவை.
 
இந்த நாட்டை நாட்டுமக்களை ஏமாற்றி ஆளுக்கு பதினைந்து லட்சம் தருவதாக பொய்சொல்லி ஆட்சிக்கு வந்து இங்கே அன்றாடம்காய்ச்சிகள் தங்கள் சுருக்குப்பையில் வைத்திருந்த சிறுவாட்டுப்பணத்தைகூட பிடுங்கி அவர்களை பிச்சைக்காரர்களாக்கிவிட்டு
 
அவர்களின் பணத்தை எடுத்து மல்லையா நிரவ் மோடி என பெரிய கார்ப்பரேட்காரர்களுக்கு அள்ளிக்கொடுத்து அவர்களை பணத்தோடு வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்து கொள்ளை அடிக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.
 
இவர்கள் பணக்காரர்களுக்கான கொள்ளைக்கார அரசு விவசாயிகளை எல்லாம் இவர்களுக்கு பார்க்க நேரமில்லை.
 
நேற்றுகூட வாட்சப்பிலே வேடிக்கையான ஒரு கதைவந்தது.
 
ஏர் இந்தியா விமானத்தில் ஒரு அமெரிக்கர் செல்வந்தர் பயணம் செய்கிறார்.
 
அந்த விமானத்தின் பணிப்பெண்ணை அவருக்கு பிடித்துப்போகிறது.. அந்த விமானத்தின் கேப்டனிடம் சென்று “இந்த ஏர் ஹோஸ்டஸை என் நிறுவனத்திற்கு வேலைக்கு அமர்த்திக்கொள்ளலாமா?” என கேட்கிறார்
கேப்டன் “முடியாது முடியாது…
 அவர் ஏர் இந்தியாவின் ஊழியர்” என்கிறார்…
 
அமெரிக்க செல்வந்தர் கோபமாகி “ஏர் இந்தியாவையே நான் வாங்கிவிட்டால் 
 
இந்தப் பெண் ஆட்டோமெட்டிக்காக என் பணிப்பெண் ஆகிவிடுவாரல்லவா?
 
சோ நான் ஏர் இன்டியாவை வாங்க முடியுமா?” எனக்கேட்கிறார்.
 
அதற்கும் அந்த கேப்டன் “இல்லை இல்லை இது எங்கள் இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமானது இதை யெல்லாம் வாங்க முடியாது” என்கிறார்.
 
இதைக்கேட்டு மிகுந்த கோபமான அந்த அமெரிக்கர் “நாங்கள் பல நாடுகளின் அரசாங்கங்களையே விலைக்கு வாங்குபவர்கள்…
 
நான் இந்த அரசாங்கத்தையே விலைக்கு வாங்கிவிடுகிறேன் அந்தப்பெண் எனக்கு வேண்டும்” ” என்கிறார்.
 
அதற்கும் அந்த கேப்டன் “அய்யா நீங்க இந்த விஷயத்திலும் டூ லேட்…
 
எங்கள் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த அடுத்த நொடியே 
 
இந்த அரசாங்கத்தை  அதானி என்ற பெரிய முதலாளியிடம் விலைபேசி விற்றுவிட்டார்” 
 
என்று சொல்வதாக இன்றைக்கு வாட்ச் அப்பில் கேலியாக #உண்மையை சொல்லிக் கொள்ளும் நிலையில் மக்கள் இருக்கிறார்கள்.
 
மத்திய அரசுதான் இந்த லட்சனத்திலிருக்கிறதென்றால் மாநிலத்திலிருக்கும் எடப்பாடி பன்னீர் அரசு ஒரு அடிமை அரசாக கோழை அரசாக ஊழல் அரசாக மன்டியிடும் அரசாக பினாமி அரசாக இருக்கிறது.
 
வெரும் 98 எம்எல்ஏக்களின் ஆதரவை மட்டும் வைத்துக்கொண்டு 
 
மோடியின் பாஜகவின் கவர்னர்களின் காலடியை பிடித்து தொங்கிக்கொண்டு கொள்ளையடிக்கும் கமிஷன் அரசாங்கமாக இந்த மாநில அரசு இருக்கிறது.
 
இவர்களின் பலஹீனத்தை பயன்படுத்தித்தான் பாஜகவின் மோடி தமிழக மக்களை கிள்ளுக்கீரையாக எண்ணி பார்க்ககூட மறுக்கிறார்.
 
விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு என்னோடு சட்டக்கல்லூரியில் ஒன்றாகப்படித்தவர்.
 
அவரும் நூற்றுக்கணக்காணவர்களை அழைத்துச்சென்று டெல்லியில் பலவிதமான போராட்டங்களை நடத்திப்பார்த்துவிட்டார்
 
கோமணம் கட்டிப்போராட்டம் எலிக்கறி தின்று போராட்டம்
அழுது உருண்டு பிறண்டு அம்மணமாகக்கூட போராடிப்பார்த்துவிட்டார் அவரை ஒரு பத்து நிமிடம் சந்திக்க மோடிக்கு மனமில்லை.
 
ஆனால் எங்கள் தலைவர் #ராகுல்காந்தி அரைநாள் முழுவதும் அவர்களோடு இருந்து கருணையோடு அவர்களின் குறையை கேட்டு அதை நாடாளுமன்றத்திலும் பதிவு செய்தார் 
 
என்பதை நாமெல்லாம் நன்றாக அறிவோம்.
 
இப்படி மக்களை விவசாயிகளை தமிழக பிரதிநிதிகளை சந்திக்க மறுக்கும் மத்திய ஆட்சியிலும் 
 
பொம்மையாக பணம் பண்ணும் ரோபோக்களாக மட்டுமே வாழும் மாநில ஆட்சியாளர்களாலும் நமக்கு எந்தப்பயனும் ஏற்படப்போவதில்லை.
 
தம்பி ராஜீவ்காந்தியின் இந்தப்படம் மக்கள் அனைவரின் பார்வைக்கும் செல்ல வேண்டும் 
 
முதலில் மோடி எடப்பாடி பன்னீர்செல்வம் அரசு அதிகாரிகள் என முதலில் இவர்கள் பார்க்கவேண்டும் அப்போதாவது 
 
அவர்களுக்கு புத்திவருகிறதா?உரைக்கிறதா? பார்ப்போம்.
 
ராஜீவ்காந்தி இந்தப்படத்தை எடுக்க எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பது தெரிகிறது.
 
அவரின் பளுவை அவரின் சிரமத்தை தமிழக காங்கிரஸ் கட்சியும் கொஞ்சம் குறைக்க விரும்புகிறது.
 
இந்த படத்தை வெகுஜனங்களிடம் கொண்டு செல்லும்வேலையை தமிழக காங்கிரஸ் கமிட்டியும் பங்கெடுக்கும் என்ற உறுதியினை சொல்லி
 
தம்பி ராஜீவ்காந்தி இதைப்போல இன்னமும் மக்கள் பிரச்சனைகளைபற்றிய
கருத்துச் செரிவுள்ள குறும்படங்களை எடுக்க எங்களால் ஆன ஒத்துழைப்பை கட்டாயம் கொடுப்போம் என்ற உறுதியினை சொல்லி இந்த இளைஞர்களை வாழ்த்தி அமர்கிறேன்.நன்றி!