தமிழ்பேசும் நடிகைகளுக்கு வாய்ப்பு தரமாட்டார்கள் : ஒரு நடிகையின் குமுறல்

IMG_8978 தமிழ்பேசும் நடிகைகளுக்கு இங்கே வாய்ப்பு தருவதில்லை என்று சினிமா விழாவில் ஒரு நடிகை குமுறினார்.இது பற்றிய விவரம் வருமாறு:

அவ்னி மூவீஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி முதன் முதலாகத் தயாரித்துள்ள படம்
‘ஹலோ நான் பேய்பேசுறேன் ‘ .  வைபவ்,ஐஸ்வர்யா ராஜேஷ் ,ஓவியா,விடிவி. கணேஷ், கருணாகரன்,சிங்கம்புலி,சிங்கப்பூர் தீபன்  நடித்துள்ளனர்.  புதுமுக இயக்குநர் பாஸ்கர் இயக்கியுள்ளார்.இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடந்தது.அப்போது நடிகை ஐஸ்வர்யா  ராஜேஷ்பேசும் போது ‘தமிழ்பேசும்  நடிகைகளுக்கு இங்கே வாய்ப்பு தருவதில்லை’ என்று குமுறினார்.அவர் பேசும் போது

“எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு இயக்குநர் பாஸ்கர் சாருக்கு நன்றி. தமிழ் பேசி நடிக்கும் நடிகை என்பதால் என்னை தேர்வு செய்ததாகக் கூறினார்..தமிழ்பேசும்  நடிகைகளுக்கு இங்கே அவ்வளவாக வாய்ப்பு தருவதில்லை. இந்த வகையில் எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்காகப் பெருமைப் படுகிறேன்.

‘ஹலோ நான் பேய்பேசுறேன் ‘படம் நல்லதொரு பொழுதுபோக்குப் படம். எல்லாமும் இதில் இருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் சிரிப்பை வரவழைப்பவை. நடித்த போதே எங்களுக்குச் சிரிப்பு வந்தது. இதில் நான் விடிவி கணேஷின் சகோதரியாக நடித்திருக்கிறேன்.

IMG_9061நான் இதுவரை சரினபடி நடனம் ஆடி நடித்ததில்லை இதில் சிரமப்பட்டு ஆடியிருக்கிறேன். ‘சில்லாக்கி டும்மா’ பாடலில் பிணத்தின் மீது எல்லாம் ஏறி நடனம்  ஆடியிருக்கிறேன். எனக்கு ஜோடி வைபவ். படத்தில் அது புதிதாகத் தெரியும். இதில் நாங்கள் ஆடும் சாவுக்குத்து  பக்கா லோக்கலாக இருக்கும், அது பேசப்படும். இது ஒரு நல்ல அனுபவம். என்னை அன்று முதல் இன்றுவரை உயர்த்தி வருபவர்கள் மீடியாக்கள் தான் .அவர்களுக்கு நன்றி.” என்றார்.

இயக்குநர் பாஸ்கர் பேசும் போது ” நான் அடிப்படையில் மிகவும் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவன். மார்க்கெட்டிங் துறையில் அலைந்து கொண்டிருந்தவன்.

எட்டு குறும்படங்கள் இயக்கியிருக்கிறேன். நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்கு சுந்தர்.சி.சார் நடுவராக வந்தார் .என் குறும்படம் பிடித்துப் போய் இன்று இந்த அளவுக்கு வாய்ப்பு வரை வந்திருக்கிறது. அவருக்கு நன்றி என்று ஒரு வார்த்தையால் மட்டும் கூறிவிட முடியாது.

இதில் தமிழ் பேசத் தெரிந்ததால் ஐஸ்வர்யாவை நடிக்க வைத்தேன். வைபவ் இருக்கிறார். ஓவியாவும் நடித்திருக்கிறார். விடிவி கணேஷ் படத்தின் ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை வருவார். படம் பார்த்துவிட்டு வீட்டுக்குப் போனாலும் வருவார். கருணாகரன் படத்துக்கு தூண்மாதிரி இருப்பார்.  இது ஹாரர் காமெடி  படம், பயப்படவும் வைக்கும். சிரிக்கவும் வைக்கும்.வழக்கமாக பழைய பங்களாவில் பேய்வரும். செத்தவர் உடம்பில் பேய்வரும். இதில் போனிலிருந்து பேய்வரும் ,பயமுறுத்தும்.இப்படத்தில் 5 பாடல்கள். ‘மஜா’ பாடலை விஜய் சேதுபதி சார் பாடிக்கொடுத்தார். அவர் பாடியதும் அது எங்கேயோ போய் விட்டது..அதைப்பாடாத கல்யாண மண்டபங்கள் இல்லை.  .ஒளிப்பதிவாளர் பாலமுருகன் ,எடிட்டர் ஸ்ரீகாந்த் எல்லாரும் நன்றாக செய்துள்ளார்கள் .நிச்சயம் இது வெற்றிப் படமாகும். ”என்றார்.

IMG_9572நடிகர் வைபவ் பேசும் போது. ” நான் இதில் பிக்பாக்கெட் அடிப்பவனாக வருகிறேன். இயக்குநர் புதியவர் என்றாலும் நினைத்ததை எடுப்பவர். நினைத்தது வரும் வரைவிட மாட்டார். ஒரு வசனம் ‘உய்யோ கவிதா’ என்கிற வசனம் எனக்குச் சரியாக வரவில்லை. 30 முறை எடுத்தார். அன்றுதான் சுந்தர்.சி சார் படப்பிடிப்புக்கு வந்திருந்தார். பார்த்துவிட்டு ‘ஐயோ’ என ஓடிவிட்டார். இதில் நான் சிரமப்பட்டு சாவுக் குத்து ஆடியிருக்கிறேன். அது தரை லோக்கலாக இருக்கும் ” என்றார்.

நிகழ்ச்சியில் நடிகர்கள் விடிவி கணேஷ், சிங்கம்புலி,சிங்கப்பூர் தீபன்,  நடன இயக்குநர் சிவராஜ் சங்கர், ஒளிப்பதிவாளர் பாலமுருகன். இசையமைப்பாளர் சித்தார்த் விபின் ஆகியோரும் பேசினார்கள்.