தமிழ் சினிமாவை அழிக்கும் தீய சக்தியாக ஒரு தியேட்டர் உரிமையாளர்: தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை

விஷால் நடித்த ‘பாயும்புலி’ படம் வருகிற 4-ந் தேதி தமிழகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது. இந்த படத்தை வெளியிடக் கூடாது என்று தியேட்டர் உரிமையாளர் பன்னீர் செல்வம் ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டு செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை சந்தித்து ஒரு அ danuறிக்கையை வெளியிட்டனர். அதில், கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கோயம்பேடு ரோகினி தியேட்டர் உரிமையாளர் பன்னீர் செல்வம், தன்னுடன் ஒரு தவறான கூட்டத்தை வைத்துக் கொண்டு, தொடர்ந்து தமிழ் சினிமாவை அழிக்கும் தீய சக்தியாக வேலை செய்து வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக ‘பாயும் புலி’ திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார். தங்களுக்கு ஒரு பெருந்தொகை தரவேண்டும் என்றும் அந்த தயாரிப்பாளரை மிரட்டி வருகிறார். இதனை கண்டிக்கும் வகையிலும், இதற்கு தீர்வு காணும் விதத்திலும் வருகிற 4-9-2015 முதல் புதிய நேரடித் தமிழ் படங்கள் மற்றும் மாற்று மொழிப் படங்களும் வெளியிடுவதில்லை என்றும், மேலும் 11-9-2015 முதல் அனைத்து திரைப்படங்களும் தமிழகம் முழுவதும் திரையிடுவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த பிரச்சனையில், தமிழக அரசு தலையிட்டு இதுபோன்ற தீயசக்திகளிடமிருந்து தமிழ் திரையுலகை மீட்டுத்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு, துணை தலைவர்கள் பி.எல்.தேனப்பன், கதிரேசன், செயலாளர்கள் டி.சிவா, ராதாகிருஷ்ணன் மற்றும் தயாரிப்பாளர்கள் வேந்தர் மூவிஸ் மதன், கே.எஸ்.சீனிவாசன், திருப்பதி பிரதர்ஸ் போஸ், எல்ரட்குமார், பெப்சி சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.