‘தாராள பிரபு ‘விமர்சனம்

இந்தியில் விந்தணு தானத்தை மையமாக வைத்து 2012-ம் ஆண்டு  வெளியான விக்கி டோனர் படத்தின் தமிழ் ரீமேக்கே தாராள பிரபு. 
விந்தணு தானம் அளிக்கும் இளைஞன் சந்திக்கும் போராட்டங்களே ‘தாராள பிரபு’ படத்தின் கதை.  
சென்னை பாரிஸ் கார்னரில் செயற்கை கருத்தரிப்பு மையம் நடத்தி வருகிறார் விவேக். அவர் தன்னைத் தேடி வரும் தம்பதிகளுக்கு விந்தணு தானம் செய்ய ஒரு ஆரோக்கியமான இளைஞரை தேடி அலைகிறார். அப்பொழுது தான் அவர் ஹரிஷ் கல்யாணைச் சந்திக்கிறார். அம்மா, பாட்டியுடன் வசித்து வரும் ஹரிஷ்க்கு கால்பந்தாட்டம் தான் உலகம்.

அவரை விந்தணு தானம் செய்யுமாறு மீண்டும் மீண்டும் விவேக். வலியுறுத்த, அவர் மறுக்கிறார். ஆனால் அவரது  வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவத்தால் மனம் மாறி அந்தக் கோரிக்கையை ஏற்கிறார். அதன் பிறகு விவேக்கின் பிசினஸ் வளர்ந்து நடக்கிறது.

இந்நிலையில்  ஹரீஷுக்கு தான்யா ஹோப் மீது காதல் ஏற்பட்டு, திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள். ஒரு வழியாக பெற்றோரைச் சமாதானம் செய்து திருமணம் செய்கிறார்கள். ஆனால் அடிக்கடி விந்தணு தானம் செய்வதால் தம்பதிகள் இடையேயான உறவு முறியும் நிலைக்கு வருகிறது. அதன் பிறகு நடந்தது என்ன என்பதே கதை.

பிரபுவாக ஹரிஷ் கல்யாண் அருமையாக நடித்துள்ளார். நிதியாக வரும் தான்யா ஹோப் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். ஆனால் பல இடங்களில் விவேக் தான் ரசிகர்களைக் கவர்கிறார். அவர் கருத்தரிப்பு மையம் நடத்தும் மருத்துவர் கண்ணதாசனாக அசத்தியிருக்கிறார். நகைச்சுவை செய்ய அவருக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்?.. அவருடைய காமெடிகளை இந்தப் படத்தில் ரசிக்க முடிகிறது. காமெடி காட்சிகளைத் தாண்டி சென்டிமென்ட் காட்சிகளில் கூட தன்னை நிரூபித்திருக்கிறார். அனுபமா, சச்சு ஆகியோரின் நடிப்பும் சிறப்பு.

செல்வகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு பக்கபலம் எனலாம். இரண்டாவது பாதியில் வரும் சில காட்சிகள் மெதுவாக இருப்பது மைனஸ்.
  சில படங்கள் ரீமேக் செய்கிறேன் என்று ஒட்டுமொத்தமாக மாற்றிவிடுவார்கள். ஆனால், திரைக்கதையில் சில இடங்களை மட்டும் மாற்றி, இந்திப் படத்துக்கு நியாயம் செய்திருக்கிறார் கிருஷ்ணா மாரிமுத்து. விந்தணு தானம் என்ற களத்தில் இன்னும் கொஞ்சம் காட்சிகளைச் சேர்த்திருந்தால், படத்தின் தன்மை மாறியிருக்கும். ஆனால், பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்காமல் காட்சிகளை அமைத்த விதத்தில் இயக்குநருக்குப் பூங்கொத்துடன் பாராட்டுக்கள் கூறலாம் . விந்தணு தானம் பற்றிய படத்தை தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் ரீமேக் செய்வது சாதாரண விஷயம் அல்ல. அந்த வகையில் சிறப்பாக ரீமேக் செய்த இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்துவுக்கு  சபாஷ்.
  கொஞ்சம் காமெடி, சென்டிமென்ட் என்று சரியான விதத்தில் கலந்த ‘தாராள பிரபு’ பார்வையாளர்களைக் கவர்கிறான்.