‘திட்டம் இரண்டு ‘விமர்சனம்

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘திட்டம் இரண்டு’. இப்படத்தின் உரிமையை சோனி லைவ் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியது. தற்போது இந்தப் படத்தினை ஜூலை 30-ம் தேதி வெளியாகிறது. 

முற்றிலும் மிக வித்தியாசமான கதைக் களம் தமிழ் சினிமாவுக்கு புதுசு என்றும் சொல்லலாம்

காவல் ஆய்வாளர் ஆதிரா. தன்னுடன் பேருந்தில் ஒன்றாக சென்னைக்கு பயணிக்கும் அர்ஜுன் உடன் சந்திப்பு.காதலாகிறது.  பழக்கம் தொடர்கிறது. இதனிடையே தனது சிறுவயது தோழி தீபசூர்யா மர்மமான முறையில் உயிரிழக்கிறார். கொலையாளி யார் என்பதை கண்டுபிடிக்க தேடுதலில் இறங்கும்  இன்ஸ்பெக்டர் ஆதிரா அதில் வெற்றிபெற்றாரா? அவரது காதல் என்ன ஆனது ?என்பதே திட்டம் இரண்டு.

கொலைக்குப் பின் போலீஸ் துப்பறியும் சாதாரண குற்றம் சம்பந்தப்பட்ட  கிரைம் திரில்லர் போல படம் தொடங்குகிறது. கொலையாளி யார் என்கிற கேள்வியோடு படம் நகர்கிறது.இவராக இருக்கலாம் அவராக இருக்கலாம் என்று அடுக்கடுக்காக முடிச்சு விழ ஆரம்பிக்கிறது.விறுவிறுப்பாக கதை நகர்ந்து யாருமே எதிர்பார்க்காத திருப்பத்துடன் வேறு தளத்தில் பயணித்துக் கதை முடிவடைகிறது.இந்த திருப்பம் கதையின் போக்கையே திசை மாற்றி நம்மை இருக்கையின் நுனியில் அமர வைக்கும்.அனைவரும் திட்டம் ஒன்றைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் யாரும் எதிர்பாராத வகையில் அமையும் திட்டம் இரண்டு என்ன என்பது தான் இப்படத்தின் பலம்.

ஆதிராவாக ஐஸ்வர்யா ராஜேஷ். காவல் ஆய்வாளராக பாந்தமாகப் பதிகிறார். தனது தோழிக்கு என்ன ஆனது என்று தெரியாமல் தவிப்பதாகட்டும் அர்ஜுனுடன் காதலில் உருகுவதாகட்டும் சிறப்பாக செய்துள்ளார். போலீஸ் என்றாலும் தானும் ரத்தமும் சதையும் உள்ள ஒரு பெண்தான் என்று கூறித் தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சி ஒரு சாம்பிள்.இப்படிப் பல இடங்களில் மிகை நடிப்பின்றி அளவாக அழகாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறைந்த எண்ணிக்கையிலான கதாபாத்திரங்களே படத்தில் இருந்தாலும் அனைவரும் தங்களது பங்களிப்பைச் சிறப்பாக அளித்துள்ளனர். அர்ஜுனாக வரும் சுபாஷ் செல்வம், பரணியாக வரும் பாவல் நவகீதன், கிஷோராக வரும் கோகுல் ஆனந்த், தீப சூர்யாவாக வரும் அனன்யா எல்லோருகே கதைக்கு வலு சேர்த்துள்ளனர். ஒரு மர்டர் மிஸ்ட்ரியாக தொடங்கி க்ளைமாக்ஸில் உண்மை வெளியவரும் காட்சியில் இயக்குநரின் உழைப்பு தெரிகிறது. காட்சிகளில் மட்டுமல்ல வசனங்களிலும் கூர்மை காட்டியிருக்கிறார்.தனக்குக் கொடுத்திருக்கிற பட்ஜெட்டில் பிரமாதமாக படைப்பு நேர்மை செய்திருக்கிறார்.

கோகுல் பிளாயின் ஒளிப்பதிவு சிறப்பு. சதீஷ் ரகுநாதனின் இசை த்ரில்லர் படத்திற்கு தேவையானதை வழங்கியுள்ளது. பாடல்கள் ஓகே.

படத்தின் மைனஸ் இரண்டாம் பாதி திரைகதையில் கொஞ்சமும் கவனம் செலுத்தி இருந்தால் படத்திற்கு மேலும் உயரம் கூடியிருக்கும்.

மொத்தத்தில் திட்டம் இரண்டு ரசிக்கலாம் அதில் சந்தேகமில்லை.