திருப்பதியில் தமிழகப் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு சீமான் கண்டனம்

திருப்பதி கோயிலுக்கு வருகை தந்த இலங்கை அதிபர் ராஜபக்சே குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தமிழகப்  பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:seeman2

இலட்சோப லட்ச தமிழ் மக்களைக் கொன்று குவித்து இனவெறித் தாண்டவமாடிய இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதி வழிபாட்டுக்கு வருவதைக் கண்டித்து ஒருமித்த தமிழகமும் குரல் எழுப்பியது. ஆனால், எத்தகைய எதிர்ப்பையும் சட்டை செய்யாமல் ராஜபக்சேயின் வருகைக்கு அனுமதியும் பாதுகாப்பும் கொடுத்த ஆந்திர அரசு, அங்கே செய்தி சேகரிக்கச் சென்ற தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்கள் மீது கடுமையான தாக்குதலையும் நடத்தியிருக்கிறது. இனப்படுகொலையாளன் ராஜபக்சேயின் வருகைக்கான எதிர்ப்பைப் பத்திரிகையாளர்கள் பதிவு செய்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது. வெளிநாட்டு அதிபர் ஒருவர் வருகை தரும்போது அதுகுறித்து படம் பிடிக்கவும் செய்தி சேகரிக்கவும் பத்திரிகையாளர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. அதனைத் தடுக்கவும் மிரட்டவும் எந்த அரசுக்கும் அதிகாரமில்லை.

ஆனால், ஆந்திர அரசு கொடூரன் ராஜபக்சேயைப் பத்திரமாகப் பாதுகாக்கிறேன் என்கிற பெயரில் பத்திரிகையாளர்களுக்குத் தடை விதித்தும், பின்னர் கைது நடவடிக்கையைப் பாய்ச்சியும் வெறித் தாண்டவமாடி இருக்கிறது. ஓர் இனவெறிக் கொடூரனுக்கு இத்தகைய ஆதரவைக் காட்டும் ஆந்திர அரசு, அண்டை மாநிலமாகவும் அன்பு பாராட்டும் மண்ணாகவும் இருக்கும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் கொடுக்கும் மரியாதை இதுதானா?

ஒரு நாட்டின் அதிபர் என்கிற முறையில் பத்திரிகையாளர்களை நேருக்கு நேர் சந்தித்துப் பேசியிருக்க வேண்டிய ராஜபக்சே, அதற்கான திராணி இல்லாமல் ஒளிந்து மறைந்தும், பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்த வைத்தும் தான் ஒரு ஜனநாயகப் படுகொலையாளன் என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறார். போர்க்குற்ற விசாரணைகளை இலங்கைக்குள் நடத்த விடாமலும், சர்வதேசப் பத்திரிகையாளர்களை அனுமதிக்காமலும் ஓட்டுக்குள் தலையைச் சுறுக்கிக் கொள்ளும் ஆமையாக தன்னை தற்காத்து அலையும் ராஜபக்சே, திருப்பதிக்கு வந்தபோதும் ஆந்திர காவலர்களை ஏவிவிட்டு அதே அவல அணுகுமுறையை மேற்கொண்டிருக்கிறார். இதற்கு ஆந்திர காவல்துறையும் துணை நின்று தாண்டவமாடி இருக்கிறது. பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய ஆந்திர காவல்துறையையும் அதனை வேடிக்கைப் பார்த்து நின்ற ராஜபக்சேயையும் நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார்.