திரையுலகம் திரண்டு வந்த ‘தி வாரியர்’ பட அறிமுக விழா!

இயக்குநர் என் . லிங்குசாமியின் இயக்கத்தில் சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் மற்றும் பவன் குமார் வழங்கும் ராம் நாயகனாக நடிக்கும் ’தி வாரியர்’ படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சென்னை சத்யம் தியேட்டரில் பிரமாண்டமாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகத்தின் சாதனை படைத்த சாதனையாளர்கள் பலரும் வருகை தந்து ஒரே மேடையில் அமர்ந்திருந்து வாழ்த்தி இந்த விழாவை மிகப் பிரமாண்டமாக மாற்றினார்கள்.

விழாவின் தொடக்கத்தில் அறிமுக உரையாகவும் வரவேற்பு உரையாகவும் ஆற்றிய லிங்குசாமியின் நண்பர் இயக்குநர் பிருந்தா சாரதி தனது பால்யகால நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் .காவிரி ஆற்றின் கிளையாற்றின் கரையில் அமர்ந்து கொண்டு இயக்குநர் லிங்குசாமி ஆனந்தம் கதையைத் தன்னிடம் சொன்ன அந்த நினைவுகளை அவர் பகிர்ந்து கொண்டார்.

‘’கொரோனா காலத்தில் நான் நெருக்கடியில் இருந்தேன்.அப்படி எனக்கு நெருக்கடிகள் ஏற்பட்ட போதெல்லாம் நம்பிக்கை அளித்தவர் லிங்குசாமி ‘’என்றார் இயக்குநர் ஷங்கர்.

‘’லாக் டவுன் காலத்தில் தொடர்புகள் இல்லாத போது அனைவரையும் இணைக்கும் நடுமையமாக விளங்கியவர் லிங்குசாமி’’ என்றார் இயக்குநர் மணிரத்னம்.

‘’லிங்குசாமி இத்தனை ஆண்டு காலம் நிறைய மனிதர்களைச் சேமித்திருக்கிறான். லிங்குசாமி என் மேல் வைத்துள்ள அன்பு அளவற்றது .அவன் பெண்ணாக இருந்தால் நான் அருகில் வைத்துக் கொள்வேன் ‘’என்றார் பாரதிராஜா.

‘’இவ்வளவு மனிதர்களைச் சம்பாதித்துள்ள லிங்குசாமிதான் உலகின் மிகப்பெரிய பணக்கார்.லிங்குசாமியின் இந்த திவாரியர் பட விழாவில் என் இரவின் நிழல் படத்தையும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி’’ என்றார் இயக்குநர் பார்த்திபன்.

‘’இங்கு வந்திருக்கும் இந்த திரை உலக சாதனையாளர்கள் சாதாரணமாக எந்த ஆடியோ விழாவுக்கும் செல்லாதவர்கள் அவர்கள் அனைவரையும் அழைத்துள்ளது என் நண்பன் லிங்குசாமியின் அன்பின் பலம் ‘’என்றார் இயக்குநர் வசந்த பாலன்.

‘’இவ்வளவு பெரிய மனிதர்களின் வாழ்த்து கிடைத்தது எனக்கு கிடைத்த பெரிய ஆசீர்வாதம் ‘’என்றார் நாயகன் ராம்.

‘’நான் சென்னை வரும்போது எதுவும் கொண்டு வரவில்லை இவர்களைச் சம்பாதித்து இருக்கிறேன் என்பதே பெருமையாக இருக்கிறது. நான் வாய்ப்பு தேடி கதவைத் தட்டியவர்கள் எல்லாம் இந்த விழாவுக்கு வந்து என்னை வாழ்த்தியது எனக்குப் பெரிய பெருமையாக இருக்கிறது. என் தாய் இதை பார்த்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்து இருப்பார் ‘’ என்று கண்ணீர் விட்டு நெகிழ்ந்தார் இயக்குநர் லிங்குசாமி.

இந்த விழாவில் இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி,விக்ரமன்,சிறுத்தை சிவா, கார்த்திக் சுப்பராஜ், பன்னீர்செல்வம்,எஸ்.ஜே.சூர்யா,விஜய்மில்டன், பாலாஜி சக்திவேல், கவிஞர் விவேகா, தயாரிப்பாளர் அன்புச்செழியன், நடிகர்கள் விஷால், ஆதி, நாயகி கீர்த்தி ஷெட்டி,நதியா, இசையமைப்பாளர் , டி.எஸ்.பி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள் .

ஒரு படத்தின் அறிமுக விழாவில் இதுவரை இவ்வளவு விஐபிக்கள் கலந்து கொண்டு பிரமாண்டமாக நடைபெற்றது இல்லை என்று சொல்லும் அளவிற்கு விழா இருந்தது.