‘தி லெஜண்ட்’ விமர்சனம்

அஜித்தின் உல்லாசம், விசில் படங்களுக்குப் பிறகு ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தி லெஜண்ட்.

சரவணா ஸ்டோர்ஸின் விளம்பரப் படங்கள் மூலம் கலக்கி வந்த லெஜண்ட் சரவணன், ஜேடி- ஜெர்ரியுடன் கூட்டணி அமைத்து நாயகனாக அறிமுகமாகி இருக்கும் தி லெஜண்ட் படம் எப்படி? ரசிகர்களைக் கவர்ந்ததா? இல்லையா? பார்ப்போம்.

வெளிநாட்டில் மிகப் பெரிய விஞ்ஞானியாக இருக்கும் லெஜண்ட் சரவணன், தன் சொந்த ஊருக்கு பயன்படும் வகையில் தன் மக்களுக்காக உழைக்க தமிழ் நாட்டுக்குத் திரும்பி,அவரது சொந்த ஊரான பூஞ்சோலை கிராமத்திற்கு வருகிறார்.வந்த இடத்தில் தன் பால்ய நண்பன் ரோபோ சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் முழுவதும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதை அறிகிறார்.

ஒருநாள் ரோபோ ஷங்கர் திடீரென சர்க்கரை நோய் முற்றி திடீர் என்று இறக்கிறார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விஞ்ஞானி லெஜண்ட் சரவணன் சர்க்கரை நோயைக் குணமாக்கும் மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்குகிறார். அவருக்கு எதிரிகளால் பல்வேறு அச்சுறுத்தல்கள். இந்தத் தடைகளை இடையூறுகளை எல்லாம் உடைத்து சக்கரை நோய்க்கு அவர் மருந்து கண்டுபிடித்தாரா, இல்லையா? என்பதே படத்தின் கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தை இயக்கியிருக்கும் ஜேடி-ஜெர்ரி பெரிய பட்ஜெட்டில் விழிகளை வெளிய வைக்கும் காட்சிகளுடன் இப்படத்தை இயக்கி உள்ளனர்.
இப்படத்தை நல்ல மேக்கிங்கில் உருவாக்கி உள்ளனர்.

அதேபோல் குறிப்பாக மெடிக்கல் மாபியா போன்ற சமூகத்துக்கு தேவையான மிக முக்கியமான விழிப்புணர்வுக் கருத்தை கதைக் கருவாக கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ள இயக்குநர்கள் அதை ரசிகர்களின் மனதின் வழியே சரியாகக் கடத்தியுள்ளனர். இதையெல்லாம் சரியாக செய்த இயக்குநர்கள் ஏனோ திரைக்கதையில் சற்று கோட்டை விட்டு, ஆங்காங்கே தொய்வு ஏற்படும்படியான கதைப்போக்கு பார்ப்பவர்களுக்கு சற்று சலிப்பை ஏற்படுத்தும்.

குறிப்பாக படத்தின் நீளம் அதிகமாக இருப்பதால் ஆங்காங்கே அயர்ச்சி ஏற்படுகிறது.எல்லாவற்றையும் காட்சி பிரம்மாண்டங்களில் ஈடுசெய்ய முயற்சி செய்துள்ளார்கள்.

கதைத் தேர்வில் சிறப்பாக செயல்பட்ட லெஜண்ட் சரவணன் நடிப்பு, நடனம், ஆக்ஷன் காட்சிகள் என படம் முழுவதும் கலக்கி உள்ளார்.

சில இடங்களில் முகபாவனைகள் மட்டும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக வெளிக்காட்டி இருக்கலாம். லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக முதல் பாதியில் நாயகி கீத்திகாவும், இரண்டாம் பாதியில் நாயகி ஊர்வசி ரெளடளா. வழக்கமான நாயகிகள் என்ன செய்வார்களோ அதையே செய்துவிட்டு சென்றுள்ளனர்.

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் கடைசிப் படமாக இப்படம் அமைந்துள்ளது. ஆங்காங்கே ரசிகர்களை சிரிப்பு மூட்டி உள்ளார்.

இவரைப் போலவே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரோபோ ஷங்கர் மற்ற நடிகர்களின் மத்தியில் தனித்து தெரிகிறார். இவரது இயல்பான நடிப்பு கதாபாத்திரத்திற்கு நெகிழ்ச்சி கூட்டியுள்ளது. இவர்களுடன் இணைந்து மயில்சாமி, விஜயகுமார், லதா, சச்சு, முனீஸ்காந்த், யோகிபாபு, தம்பி ராமையா, ஹரிஷ் பெரோடி, நாசர், லிவிங்ஸ்டன், சிங்கம்புலி, மன்சூர் அலிகான், அமுதவானன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மொசலே மொசலு பாடல் ஹிட் ரகம். பின்னணி இசை படத்திற்கு பிளஸ்.வேல்ராஜ் ஒளிப்பதிவில் படம் முழுவதும் கலர்ஃபுல்லாக அமைந்து பார்ப்பவர்களுக்கு விருந்து படைத்துள்ளது.

தி லெஜன்ட் – கண்களுக்கு பிரம்மாண்டம்!