‘தீரன் அதிகாரம் ஒன்று ‘ விமர்சனம்

தனியே உள்ள வீடுகளில் உள்ளவர்களை அடையாளம் தெரியாமல்  கொன்று விட்டு கொள்ளையடித்துவிட்டு  தப்பித்து ஓடுகிறது கொள்ளைக்கும்பல். அவர்கள் குற்றப் பரம்பரை இனத்தவர்கள் என ஆங்கிலேயர்களால் அடையாளப் படுத்தப்பட்ட வர்கள். “பவேரியா” என்னும்  அந்தக்  கொள்ளைக்  கும்பலை தமிழகக் காவல்துறை கைது செய்த உண்மைக் கதைதான் ‘தீரன் அதிகாரம் ஒன்று ‘படம்!

வெறும் போலீஸ்  கதையை வைத்துக் கொண்டு மட்டுமே திரைக்கதை செய்யாமல், வரலாற்றின் உண்மைப் பக்கங்களைத் தேடிப் படித்து அவற்றை  அழகாக கதைக்குள் பொருத்தி விறுவிறுப்பான ஒரு திரைக்கதையை அமைத்த இயக்குநர் வினோத்தை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

அவரது தேடலும், செய்தொழில் நேர்த்தியும் படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் உணர முடிகிறது. வசனங்களில் கூர்மையாக அரசு மற்றும் காவல் துறையினரின் பொறுப்பற்ற அலட்சியங்களை எதார்த்தம் மீறாமல் பதிவு செய்த வகையில் படம் நமக்கு நெருக்கமாகி விடுகிறது.

இத்தனை வேகமான திரைக்கதையில், நீளும் அந்த  காதல் காட்சிகள்தான் வேகத்தடைகளாக உள்ளன. அதற்கு ஐந்து நிமிடமே போதுமானது.

கார்த்தி,  காலரைத்தூக்கி விட்டுக் கொள்ளலாம் தைரியமாக. எவ்வளவு நாளாயிற்று கார்த்தியின் இந்த அபார நடிப்பைப் பார்த்து?. எந்த இடத்திலும் நடிப்பென்று உணர முடியாத வகையில் அப்படி ஒரு நடிப்பு. நிச்சயமாக அவருக்கு தீரன் ஒரு வாழ்நாள் படம்தான்.

இந்தப் படத்தில்தான் ரகுல் ப்ரீத் சிங் வெறும் கறிவேப்பிலை நாயகி போலல்லாமல் நடித்திருக்கிறார் .

இறுதிக்காட்சி வரை வில்லன் மீது ஒரு வகையான பயம் இருந்து கொண்டே இருக்கிறது, அந்தளவுக்கு அச்சமூட்டி அபிமன்யூ சிங் வில்லனாக தீரனில் மிரட்டியிருக்கிறார் .

அதே போல் போஸ் வெங்கட் தனது முதிர்ந்த நடிப்பின் மூலம் பதிகிறார். படத்தின் நான்கு தூண்கள் இசை, ஒளிப்பதிவு, கலை, சண்டைக் காட்சிகள்  எனலாம். ஜிப்ரானுக்கு அறம், தீரன் என அடுத்தடுத்து பெயர் சொல்லும் இரண்டு படங்கள். வாழ்த்துகள் .

வடமாநிலக் காட்சிகளில் எப்படித்தான் ஓடி ஓடி கேமராவுக்குள் அள்ளினாரோ என வியப்பூட்டிள்ளார் ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் .சபாஷ்.!

 இப்போதெல்லாம்   அறிமுக பட இயக்குநருக்குத் திறமை போதாமையால்இரண்டாவது வெற்றிப்படம் செய்வதற்குள்   நாக்கு தள்ளிவிடுகிறது.

இப்படத்தைப்பொறுத்த வரை ஆவணப்படமாகிப் போகும் சாத்தியமுண்டு . இருந்தும், பரபரப்பான ஒரு ஆக்‌ஷன் படமாக மாற்றிக்காட்டியதில் இயக்குநர் வினோத்  திறமை காட்டி  இரண்டாவது படத்திலும் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்.வாழ்த்துகள்.