‘துக்ளக் தர்பார்’ விமர்சனம்

விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பகவதி பெருமாள் நடித்துள்ளனர். டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ளார்.

துக்ளக் என்றால் அரசியலும் நையாண்டியும் கலந்தது என்று நாம் எண்ணுவோம் அதற்கேற்றபடி தான் இருக்கிறது படம். அரசியலைப் பின்னணியாகக் கொண்டிருந்தாலும் இது முழுமையான அரசியல் படமாக இல்லை.


அல்லக்கை ஒருவன் அதிகாரம் மிக்க ஒருவராக மாறுவதுதான் கதை. உள்ளடக்கத்தில்  அமைதிப்படை நெடி அடிக்கிறது.
ஜே.கே. நகரின் அரசியல் பெரும்புள்ளியாக இருக்கிறார் ராயப்பனான பார்த்திபன். அந்தப் பகுதியைச் சேர்ந்த சிங்காரவேலனான விஜய் சேதுபதிக்கு ராயப்பனைப் போல ஆக வேண்டுமென ஆசை. எப்படியோ ராயப்பனை நெருங்கி, கவுன்சிலராகவும் ஆகிவிடுகிறார். இதற்குப் பிறகு, ராயப்பனும் சிங்காரவேலனும் சேர்ந்து ஒரு நில விவகாரத்திற்காக 50 கோடி ரூபாய் லஞ்சம் வாங்குகின்றனர்.
ஆனால், அது தொடர்பான ஆவணங்கள் எப்படியோ ஊடகங்களுக்கு கசிந்து விடுகிறது.பணத்தையும் வைத்த இடத்தில் காணவில்லை. இதைச் செய்தது யார் எனத் தேட ஆரம்பிக்கிறார் ராயப்பன். அந்த நபர் யார், ஏன் இப்படிச் செய்கிறார் என்பது மீதிக் கதை.
படத்தைத் தொடக்கத்திலிருந்து முடிவுவரை, ஜாலியாக, மேலோட்டமாகவே எடுத்துச் செல்ல நினைத்திருக்கிறார் இயக்குநர். அதில் அவருக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. பார்த்திபன், பகவதி பெருமாள், விஜய் சேதுபதி, கருணாகரன் ஆகிய நான்கு பேரும் அவ்வப்போது  சிரிக்க வைக்கிறார்கள்.வசனங்களில் பார்த்திபனின் குறும்பு தெரிகிறது.

50 கோடி காணாமல் போகிற போது அந்த அதிர்ச்சியை உணர வைக்க முடியவில்லை. காமெடி காட்சியைப் போலத்தான் தோன்றுகிறது. ராஷி கண்ணாவுக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையிலான காதல் காட்சிகள் வேறு இடையில் இடையூறாக வேகம் குறைக்கின்றன.
அழகான முகத்தோற்றம் கொண்ட மஞ்சிமா மோகன் இதில் கண்ணைக் கசக்கிக்கொண்டு திரியும் தங்கையாக வருகிறார்.


 கதாநாயகன் விஜய் சேதுபதி பிளவுபட்ட இருமனநிலை கொண்ட மனிதனாகக் காட்டப்படுகிறார். ஆனால் இந்த இரு ஆளுமைகளுக்கும் இடையில் முகபாவனையிலோ, நடிப்பிலோ வித்தியாசத்தைக்காட்டவில்லை.கண்ணைச் சுருக்குவதோடு சரி.
ராயப்பனாக வரும் பார்த்திபன், ஒரு விஷயத்தை சீரியஸாக சொல்கிறாரா அல்லது கேலி செய்கிறாரா என்பதை புரிந்துகொள்வது சிரமமாக இருக்கிறது. 


 பகவதி பெருமாள் மட்டும்தான். அவர் வரும் காட்சிகள் கலகலப்பாக இருக்கின்றன. படத்தின் முடிவில் சத்யராஜ் வரும் காட்சிதான் படத்தின் சிறந்த பகுதியாக அமைகிறது.
விடுமுறை பொழுதுபோக்காக ஒரு முறை பார்க்கலாம்.