‘துணிவு ‘ விமர்சனம்

அஜித்குமார், மஞ்சுவாரியார், சமுத்திரக்கனி, அஜய், ஜான் கொக்கேன், ஜி எம் சுந்தர் , பக்ஸ் என்கிற பகவதி பெருமாள், பிரேம், மோகனசுந்தரம், வீரா ,தர்ஷன், மகாநதி சங்கர், பவானி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.எழுதி இயக்கி உள்ளார் ஹெச். வினோத். ஒளிப்பதிவு நீரவ்ஷா, இசை ஜீப்ரான், எடிட்டர் விஜய் வேலுக்குட்டி, ஸ்டண்ட் சுப்ரீம் சுந்தர், நடனம் கல்யாண்,கலை இயக்கம் மிலன், தயாரிப்பு போனி கபூர்.

படத்தின் தொடக்கத்திலேயே ஒரு வங்கிக் கொள்ளை முயற்சி காட்டப்படுகிறது. அதை நிகழ்த்துவது யார்?எதற்காக அதைச் செய்கிறார்கள்? என்று நம்முள் கிளைவிடும் கேள்விகள் பரபர திருப்பங்களோடும் அவ்வப்போது முன் கதை காட்சிகளோடும் வளர்ந்து நகர்ந்து திருப்புமுனை திருப்பத்தோடு முடிகிறது.
அது தான் ‘துணிவு’ படம்.

சென்னையில் புகழ்பெற்று விளங்கும் தனியார் வங்கி, யுவர்ஸ் பேங்க். அங்கு ரிசர்வ் பேங்க் விதிகளுக்கு முரணாகக் கணக்கில் காட்டப்படாமல் ஐநூறு கோடி ரூபாய் பதுக்கப்பட்டு இருப்பதை அறிந்து கொள்ளைக்கும்பல் உள்ளே நுழைகிறது. இந்தக் கொள்ளையை நடத்த தொடங்கும் போது உள்ளே நுழைகிறார் அஜித்.இது என்ன கலாட்டா என்று நாம் யோசிக்கும் போது
தானும் அங்கே கொள்ளையடிக்க வந்திருப்பதாகச் சொல்கிறார்.அவரும் கொள்ளை முயற்சியைத் தொடங்குகிறார்.

இப்படி இரு வேறு கொள்ளைக் கும்பல்கள் மற்றும் வங்கி நிர்வாகம் என ஆரம்பிக்கும் கதை ஒரு ஓடை போல் நகர்ந்தது போகப்போக எழுச்சி கொண்டு நதியாகப் பிரவாகம் எடுக்கிறது.

அஜித் ஏன் செய்கிறார்? அவரது பின்னணி என்ன?காவல்துறையின் கறுப்பாடுகள் யார்?வாய் இனிக்க பேசி வங்கிகளில் இருந்து வரும் அழைப்புகளின் நோக்கம் என்ன? வாடிக்கையாளர்களிடம் வங்கி அடிக்கும் கொள்ளைகள் என்னென்ன? என, கதை பல்வேறு திசைகளில் கிளைக் கதைகளாக விரிகின்றன.எத்தனை விரிந்தாலும் பரபரப்பு பஞ்சம் இல்லாத திரைக்கதை ஓட்டம் இயக்குநருக்குக் கை கொடுக்கிறது. இவ்வாறு எல்லாமும் கலந்து அமைத்து ஒரு பரபரப்பான ஆக்சன் விருந்தைக் கொடுத்துள்ளார் இயக்குநர் எச்.வினோத்.

முழுக்க முழுக்க வெள்ளை முடி தாடி என்று வரும் அஜித் உற்சாகம் குறையாத மனிதராக ஸ்கோர் செய்கிறார். அலட்டலில்லாத நடிப்பால் கைத்தட்டல்களை அள்ளுகிறார். தோற்றம் பேச்சு நடை நடனம் என்று உற்சாகத்துள்ளலுடன் ரசிகர்களை ஈர்க்கிறார்.

மைப்பா கதாபாத்திரத்தில் பட்டிமன்றப் பேச்சாளர் மோகனசுந்தரம் நடித்துள்ளார். ஊடகங்களின் வியாபாரப் போட்டி மனப்பான்மையைப் புட்டு புட்டு வைக்கிறார்.
செய்திப்பசி, டிஆர்பி என்று அலையும் ஊடகச் சூழலை அனாயாசமான வசனங்கள் மூலமாக அவர் வெளிப்படுத்துகிறார்.

நேர்மையான கமிஷனராக சமுத்திரகனி வருகிறார் . வங்கி மேனேஜராக ஜி.எம் சுந்தர் , வங்கி சேர்மேனாக ஜான் கொக்கேன், அஜித்தின் கண்மணியாக மஞ்சு வாரியர் என படம் முழுக்க தேர்ந்த நடிகர்களைப் பயன்படுத்தி நல்ல வேலை வாங்கி உள்ளார்கள்.

சாதாரண கான்ஸ்டபில் ஆண்டனியாக வரும் மகாநதி சங்கர் ஆர்ப்பாட்டம் இல்லாமல் சிரிக்க வைக்கிறார்.கூடவே போலீஸ்காரர் பகவதி பெருமாளும் இந்தக் கச்சேரியில் இணைந்து கொள்கிறார்.

சமூகக் கருத்துடன் கூடிய ஒரு ஆக்சன் திரில்லரை உருவாக்கியுள்ளார் இயக்குநர்.

கதாநாயகன், கதாநாயகி இருவரும் சுட்டு தள்ளிக் கொண்டே இருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு ஒன்றும் ஆவதில்லை.இது ஒன்றே உறுத்தல்.

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரும்பலம். ஒரே செட்டுக்குள் நடக்கும் கதைக்களம். அரங்கமைப்பு என்று தெரியாத அளவிற்கு மிலன் அற்புதமாக வடிவமைத்துள்ளார்.
கண் சுளுக்கிக் கொள்ளும் அளவிலான பரபர சண்டை காட்சிகளை இயக்கி
சுப்ரீம் சுந்தர்,அதை கேமராவுக்குள் கொண்டு வந்து நீரவ் ஷா,தொய்வு விழாமல் தொகுத்த படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி மூவருமே உழைப்பாளிகள் , பாராட்டுக்குரியவர்கள்.

படத்தில் வரும் இரண்டு பாடல்கள் பெரிதாக உதவவில்லை.அதை பின்னணியிசையில் ஈடு செய்கிறார் ஜிப்ரான்.

அஜித் ரசிகர்களுக்கு எது தேவை என்று புரிந்து கொண்டு இயக்குநர் வினோத் அந்தப் பாதையில் பயணம் செய்திருக்கிறார்.

அஜித் ரசிகர்களுக்கு இந்த ‘துணிவு ‘இரட்டை இனிப்பு பொங்கல் என்று கூறலாம்.