‘துருவங்கள் பதினாறு’ விமர்சனம்

working-stills-4குடிக்கும் காட்சிகள் இல்லை ,அறுவையான அசட்டுத்தனமான,ஆபாசமான காமநெடிக் காமெடிகள் எதுவும் இல்லை , அஸ்கு புஸ்கு சண்டைக் காட்சிகள் இல்லை , பிஞ்சு போன பஞ்ச் வசனங்கள் இல்லை. , மிகையாக எந்தப் பாத்திரத்தையும் உயர்த்திப் பிடிக்கவில்லை, பாடல்கள் இல்லை , வணிக மசாலாக்கள் இல்லை. இப்படி ரசிகர்களை அவமதிக்கும் எதுவும் இல்லாமலேயே ஒரு தாமான திரை மொழியில் அழகான விதத்தில் உருவாகியுள்ள படம்தான்’துருவங்கள் பதினாறு’.

முதலில் இப்படிப்பட்ட முயற்சியில் இறங்கிய துணிவுக்காகவே இயக்குநர் கார்த்திக் நரேனை கை குலுக்கி வரவேற்கலாம் .

சரி படத்தின் கதை என்ன?

கொலைக் குற்றப் புலனாய்வில் ஈடுபடும் போலீஸ் சம்பந்தப்பட்ட கதைதான் .குற்ற செயலின் முன்,பின் உள்ள பின்னணியைப் பற்றி பேசுகிற கதை.

எளிமையான கதைதான் ஆனால் புதிய திரைக்கதை உத்தியால் எளிதில் சொல்லிவிட முடியாதபடி புதிரான காட்சிகளால் சுவாரஸ்யப் படுத்தி இருக்கிறார் இயக்குநர். படத்தின் முக்கிய பாத்திரத்தில் வரும் ரகுமான் இதில் புதிய அவதாரம் எடுத்து மிளிர்ந்து இருக்கிறார். ஆர்ப்பாட்ட மில்லாத நடை, உடை ,உடல் மொழிகளில் கவர்கிறார் . நடித்த மற்றவர்கள் பலரும் புதியவர்களே .இருந்தாலும் மனதில் பதிபவர்களே.

கதையில் வன்மம். காதல், ஒருதலைக்காதல், மிரட்டல் எல்லாம் இருந்தும் ஆபாசம் கலவாத காட்சிகள் அமைத்ததற்காகவே இயக்குநருக்கு சிறப்பு கை குலுக்கல் ஒன்று தரலாம். நடித்தவர்கள், தவிர படத்தில் திரைக்கதை, ஒளிப்பதிவு ,ஒலியமைப்பு பின்னணி இசை எல்லாமே பாத்திரம் போலவே அசைகின்றன,வந்து மனதில் இழைகின்றன.ஒவ்வொரு காட்சியமைப்பிலும் செய்நேர்த்தி காட்டி இங்கு குப்பைக் கொட்டிக்கொண்டிருக்கும் பல அரைவேக்காடுகளுக்கும் பாடம் சொல்லியிருக்கிறார்கள்.

வெல்டன் கார்த்திக் நரேன்!

வயதில் இளைஞர்களாக இருந்தும் முதிர்வான முயற்சி காட்டியுள்ள புதியவர்களுக்குக் கண்டிப்பாக திரையரங்கு சென்று ஆதரித்துக் கை கொடுங்கள். ஒரு முறை பார்த்தால் தானாகவே மற்றவர்களுக்கும் நீங்களே பரிந்துரைப்பீர்கள்.

இப்படி நூற்றில் ஒரு படத்துக்கு மட்டுமே விமர்சனம் செய்யமுடியும்.