‘தூங்காவனம்’ விமர்சனம்

Thoongavanam Working Stills (8)கமல் போதைப்பொருள் தடுப்பு போலீஸ் அதிகாரி. ஆனால் அவரோ ஒரு சூழலில் பணத்திற்காக எந்த வேலையையும் செய்யக் கூடியவராகத் தெரிகிறார். இந்நிலையில், போதைப் பொருள் கடத்தி வரும் பிரகாஷ் ராஜிடம் இருந்து விலைமதிப்புள்ள போதைப் பொருளான கொக்கேய்னைத் திருடுகிறார். அது இன்னொரு வியாபாரியான சம்பத்துக்குச் சேரவேண்டும். சம்பத் பிரகாஷ்ராஜை மிரட்டுகிறார்.அதைக் கமல் பதுக்கி வைக்கும் போது மற்றொரு போலீசான திரிஷா பார்த்து விடுகிறார்.

போதைப் பொருளை எடுத்ததால் கமலின் மகனை பிரகாஷ்ராஜ் கடத்துகிறார். அவனைப் பணயக் கைதியாக்கி, திருடிய போதைப் பொருளைக் கேட்கிறார். மகனை மீட்க கமல், போதைப் பொருளை கொடுக்க நினைக்கிறார். ஆனால், அவர் பதுக்கி வைத்த இடத்தில் இருந்து போதைப் பொருள் காணாமல் போகிறது.

கமலின் மூவ்களை ,கூடவே இருக்கும் யூகிசேது எதிரிகளுக்குப் போட்டுக் கொடுக்கிறார். கமல் மீது பழிபோட போலீஸ் துறையிலேயே கிஷோரும் ,த்ரிஷாவும் முயல  பிறகுதான் அது அண்டர் கவர் ஆபரேஷன் எனத் தெரிகிறது .ஆனால் அது புரிவதற்குள் சிக்கல் முடிச்சுகள் விழ எப்படி அவற்றை அவிழ்த்து கமல் தன் மகனை மீட்கிறார் என்பதே கதை.

ஒரே வரிக்கதையை ஒருநிமிடம் கூட சலிப்பு வராமல் விறுவிறு திரைக்கதையாகப்  பின்னியுள்ள திரைக்தை ஆசிரியர் கமலுக்கு முதலில் பாராட்டு கூறலாம் .கதையை ஊர்சுற்ற விடாமல் குறிப்பிட்ட இடத்திலேயே பறக்கவிட்டு நம்மை இருக்கை நுனிக்கு வர வைக்கின்றன காட்சிகள்.

கமல்தான் நாயகன் என்றாலும்  பிரகாஷ்ராஜ், கிஷோர், த்ரிஷா, சம்பத்,நண்டு ஜெகன் என அனைவருக்கும் நடிக்க இடம் கொடுத்து இருப்பது அவரது பெருந்தன்மை. மதுஷாலினி, ஆஷாசரத், உமாரியாஸ் கான், சாம்ஸ், அம்மான் உள்பட நடித்துள்ள அனைவரும் பதிகிறார்கள். கமல் த்ரிஷா மோதல், கமல் பிரகாஷ்ராஜ் மோதல், கமல் கிஷோர்மோதல்,கமல் சம்பத் மோதல் எல்லாமே பரபர ரகங்கள்.

ஆங்கிலப் படம் போல ஸ்டைலிஷான உருவாக்கம் மிரட்டுகிறது. கமலின் போராட்டம் ஒரு அப்பாவின் பாசப் போராட்டமாக அப்பா மகன் பாசத்தை இயல்பான காட்சிகளாக்கி நெகிழ வைத்திருக்கிறார்கள்.

நடிப்பும் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் ஒவ்வொரு கட்டத்தில் போட்டி போட்டு கவனம் ஈர்க்கின்றன. சுருக் வசனம் தந்துள்ள சுகாவுக்குச் சபாஷ். சண்டைக் காட்சிகளில் மிகையில்லாத ஆக்ஷன் மிளிர்கிறது. சபாஷ் சில்வா.

இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா தனக்கு கொடுத்த வாய்ப்பை கமலின் நிழலில் நின்றாலும் சிறப்பாகச் செய்திருக்கிறார். நீண்ட விமர்சனம் வேண்டாம் இந்த  ஆக்ஷன் விருந்தைப் பார்த்து ரசிக்கலாம்.