இனி தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன்: ஜோதிகா அறிவிப்பு

jo-suryaஎட்டு ஆண்டுகளுக்குப்பின் ஜோதிகா மறுபிரவேசமாகி  நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘36 வயதினிலே’ படம் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இந்த சந்திப்பில் ஜோதிகா, சூர்யா, இயக்குநர் ரோஜன் ஆண்ட்ரூஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு சூர்யாவும், ஜோதிகாவும் பதிலளித்தனர்.

சூர்யா பேசும்போது,

‘ ‘36 வயதினிலே’ படத்தில் ஜோதிகாவின் கணவராக நடித்திருக்கும் ரகுமான் கதாபாத்திரம் போல் நிஜவாழ்க்கையில் கணவர்கள் வாழக்கூடாது. தனது மனைவியின் ஆசைகளை கணவர் கேட்டு அறிந்துகொள்ளவேண்டும். அவர்களின் ஆசையை நிறைவேற்ற கணவர்கள் முன்வர வேண்டும். திருமணமாக கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகுதான் ஜோதிகா நடித்திருக்கிறார். ஆரம்பத்திலேயே நடிக்கவேண்டும் என்ற ஆசை அவருக்குள்ளும் இருந்துள்ளது. ஆனால், அதை வெளிப்படையாக என்னிடம் கூறமுடியாமல் தவித்திருக்கிறார். ஒருகட்டத்தில் அவருடைய ஆசையை தெரிந்துகொண்ட நான் அவரை வைத்து படம் எடுக்க முன்வந்தேன். இதேபோல், ஒவ்வொரு கணவர்மார்களும் தனது மனைவியின் ஆசைகளை தெரிந்துகொண்டு, அதை நிறைவேற்ற முன்வரவேண்டும்.

ஒரு திரையரங்கு உரிமையாளர் காமெடியாக “ரொம்ப நாள் கழித்து திரையரங்கு முழுவதும் மல்லிகைப் பூ வாசனை அடிக்கிறது” என்றார். அவ்வளவு பெண்கள் இப்படத்தை பார்க்க வந்து, எங்களுக்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள். அனைவருக்கும் நன்றி

36 வயதினிலே’ பார்த்துவிட்டு அப்பா சிவகுமார் உன்னை விட ஜோதிகா நன்றாக நடித்திருக்கிறார் என்றார். நானும் அதே தான் சொல்கிறேன் என்றேன். ஜோதிகா மீண்டும் நடிக்க வந்தபோது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தொடர்ந்து நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பார்.

நாங்கள் இருவரும் இணைந்து நடிப்பதற்கான ஒருவரிக் கதையை ஒரு இயக்குநர் தெரிவித்திருக்கிறார். அவர் முழுக்கதையையும் தயார் பண்ண 10 மாதங்கள் ஆகும். அக்கதை தயார் ஆன பிறகு முடிவு செய்வோம்.” என்றார்.

இச்சந்திப்பில் ஜோதிகா பேசும்போது, “’36 வயதினிலே’ தொடர்ந்து நல்ல கதைகள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். இன்னும் இப்படத்தை மஞ்சு வாரியர் பார்க்கவில்லை. கடந்த வாரம் இருவரும் பேசினோம். அவருடைய கருத்தை அறிய காத்திருக்கிறேன். நாட்டில் பிரதமர், ஜனாதிபதி ஆகிய உயரிய பதவிகளை பெண்கள் அடைய கணவரின் ஒத்துழைப்பு தேவை.

வீடு வாங்க வேண்டும், கார் வாங்க வேண்டும் என்று கணவர் ஆசைப்படுவது போலவே, மனைவியின் ஆசை என்ன என்பதையும் கணவர் தெரிந்து கொள்ள வேண்டும். மனைவிக்கு கணவரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். கணவரின் ஒத்துழைப்பு இருந்தால் எல்லா பெண்களும் ஜெயிக்கலாம்” என்றார்

இந்த நிகழ்ச்சியில், அகரம் பவுண்டேசன் சார்பாக திருமணமாகி கணவனால் கைவிடப்பட்டவர்கள் வாழ்க்கையில் சாதிக்கத் துடிக்கும் 25 பெண்களுக்கு அவர்களது வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கு தேவையான ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இது முதற்கட்டமாக இந்த விழாவில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இதை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளனர். தற்போது அகரம் பவுண்டேசனுடன், சக்தி மசாலா நிறுவனமும் இணைந்துள்ளது.