‘தொண்டன்’ விமர்சனம்

Thondan-first-lookநம்மைவிட்டு வேகமாகப் பறந்து போகும் ஆம்புலன்ஸ் டிரைவர் பற்றி நாம் நினைத்துப்பார்த்துண்டா? அவர்களை நினைத்து  , அவர்களின் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்து எடுத்திருக்கிறார்.அதுதான் ‘தொண்டன்’ . நாட்டு நடப்பு பற்றி கோபம் கொள்ளும் இளைஞன் பாத்திரம் என்றால் சமுத்திரக்கனிக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி .இப்படத்திலும் அதைச் சரியாக சாப்பிட்டிருக்கிறார்.

நாட்டில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை கோர்வையாக்கி, அதை ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் ஆம்புலன்ஸ் பணியாளர்களின் பின்னணியில் சொல்லப்பட்டிருப்பது தான் ’தொண்டன்’ படத்தின் கதை.

ஒரு தலை காதல் காரணமாக கல்லூரி ஒன்றில் புகுந்து மாணவி ஒருவர் மீது அமைச்சரின் மகன் தாக்குகிறான். அங்கிருந்த மற்ற மாணவிகள் அந்த பொறுக்கி மீது தாக்குதல் நடத்துகிறார்கள். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வரும் இரண்டு ஆம்புலன்ஸ்களில் ஒன்றில் அழைத்துச் செல்லப்படும் மாணவி காப்பாற்றப்படுகிறார். சமுத்திரக்கனி ஓட்டி வந்த ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்படும் அமைச்சரின் மகன் இறந்துவிட, அதற்கு காரணம் சமுத்திரக்கனி தான் என்று சொல்லும் அமைச்சரின் அண்ணன், அவரை பழிவாங்க சமுத்திரக்கனியின் வீட்டில் வெடிகுண்டு வைப்பதுடன், ஆம்புலன்ஸையும் கடத்திவிடுகிறார்.

அமைச்சரின் குடும்பத்தால் தொடர்ந்து துயரப்பட்டுக் கொண்டிருக்கும் சமுத்திரக்கனி, அவர்களை அறவழியில் பழிவாங்க ,புத்திசாலித்தனமாக திட்டம் ஒன்றை போடுகிறார். அது என்ன திட்டம், அதில் அவர் எப்படி வெற்றி பெறுகிறார், என்பது தான் படத்தின் க்ளைமாக்ஸ்.

பொதுவாக தலைவர்கள் தான் பேசுவார்கள், அதை கேட்டு தொண்டர்கள் செயல்படுவார்கள். ஆனால், இந்த படத்தில் தொண்டனான சமுத்திரக்கனியே பேசவும் செய்கிறார், செயல்படவும் செய்கிறார்.

நடிகராக பல படங்களில் ஸ்கோர் செய்யும் சமுத்திரக்கனி, சில படங்களில் வசனம் பேசுவதையே நடிப்பு என்று ரசிகர்களை ஏமாற்றவும் செய்வார், அப்படி தான் இந்த படத்திலும் செய்திருக்கிறார். காட்சிக்கு காட்சி பக்கம் பக்கமாக வசனம் பேசுபவர், பலவகையான காளைகள் குறித்து பேசும் பெரிய வசனமும் அப்படியே.

thondan10.4வில்லனாக நடித்துள்ள நமோ நாராயணன், விக்ராந்த், சமுத்திரக்கனியின் சகோதரியாக நடித்திருக்கும் நடிகை என்று படத்தில் உள்ள மற்ற கதாபாத்திரங்ககளில் ஒருவராகவே நாயகி சுனைனாவும் வருகிறார். குறிப்பாக சுனைனா பேயாக வந்து மிரட்டுவது மிகை ரகம். தவக்களை போல வரும் குட்டிப்பையன் பலே வாங்குகிறான்.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலமாக அமைந்திருப்பது போல, ஏகாம்பரம், ரிச்சர்ட் ஆகியோரது ஒளிப்பதிவும் இயல்பாக உள்ளது.

பெண்களுக்கு ஆதரவான படம், ஒரு தலை காதல் என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு எதிரான படம், என்று சமூகத்திற்கு தேவையான அதே சமயம் சொல்லப்பட வேண்டிய விஷயத்தை சொல்லியதற்காக இயக்குநர் சமுத்திரக்கனியை பாராட்டலாம். .

“புடிச்சவன கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் கொல்றீங்க, புடிக்கலனாலும் கொல்றீங்கலே ஏன்?” போன்ற பெண்களுக்கு ஆதரவான வசனங்கள் சுளீர்.

ஜல்லிக்கட்டு, விவசாயிகள் தற்கொலை, மீத்தேன், ஜாதி பிரிவினை, அரசியல் என்று அனைத்து விஷயங்கள் பற்றியும் படம் பேசினாலும், எதையும் அழுத்தமாக பேசாமல் தொட்டுப்போகிறது.
பிரச்சினை எதற்கும் மாற்றுவழியாக அமைதி வழி உண்டு என்கிறது படம்.தொண்டன் பயனுள்ளவன்.